Published:Updated:

ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தல்?

Vikatan Correspondent
ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தல்?
ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தல்?
ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தல்?

பாக்தாத்: ஈராக்கில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மொசூல் நகரில் உள்ள சுமார் 40 இந்தியர்களுடனான தொடர்பை இந்திய அதிகாரிகள் இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயித் அக்பருத்தின் கூறுகையில், ‘எங்களின் சிறந்த முயற்சிகளையும் மீறி ஈராக்கில் சிக்கியுள்ள சில இந்தியர்களுடன் தொடர்பு இழந்துவிட்டோம். அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 40 பேரும் கடத்தப்பட்டார்களா என உறுதி செய்யமுடியவில்லை’ என்று தெரிவித்தார்.

ஈராக்கில் நடந்து வரும் வன்முறை மோதல்களில் மொசூல் மற்றும் திக்ரித் நகரங்கள் ஐசிஸ் ஆயுதக் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

திக்ரித் என்ற நகரின் மருத்துவமனையில் பணி புரியும் 46 இந்திய நர்ஸ்களை மீட்கும் பணியில் இந்திய அரசு செயல்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த 46 பேர்களில் சிலரே உடனடியாக இந்திய வர தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வாங்கிய கடன்களினால் மத்திய கிழக்கில் வேறு பகுதிகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.