Published:Updated:

ஈராக்: சதாம் உசேனை தூக்கிலிட உத்தரவிட்ட நீதிபதி தீவிரவாதிகளால் கொலை!

விகடன் விமர்சனக்குழு
ஈராக்: சதாம் உசேனை தூக்கிலிட உத்தரவிட்ட நீதிபதி தீவிரவாதிகளால் கொலை!
ஈராக்: சதாம் உசேனை தூக்கிலிட உத்தரவிட்ட நீதிபதி தீவிரவாதிகளால் கொலை!
ஈராக்: சதாம் உசேனை தூக்கிலிட உத்தரவிட்ட நீதிபதி தீவிரவாதிகளால் கொலை!

பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து, அவரை கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக்கில் உள்நாட்டுபோர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல நகரங்களை 'ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் சிரியா எனப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர். அத்துடன் முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் அவர்கள் வசம் வந்துள்ளன.

இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்க படையினர் புகுந்து, சதாம் உசேன் ஆட்சி கவிழ்ந்த பின்னர் சதாம் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பிடிபட்டவர்களுக்கும் அமெரிக்கா ஏற்படுத்திய பொம்மை அரசு நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே பல மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்த சதாம் உசேன், அமெரிக்க ஆதரவு அரசு படையினரிடம் பிடிபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை துரித கதியில் நடைபெற்று, அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரை தூக்கிலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதியின் பெயர் ராவஃப் அப்துல் ரஹ்மான். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதாக அவருக்கு பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது. இதனால் அச்சமடைந்த அவர், தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஈராக்கில் தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கை ஓங்கி உள்ள நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று நீதிபதி அப்துல் ரஹ்மான், டான்சர் என்ற போர்வையில் பாக்தாத்திற்கு தப்ப முயன்றபோது தீவிரவாதிகளிடம் பிடிபட்டதாகவும், அதற்கு 2 தினங்கள் கழித்து அவர் கொல்லப்பட்டதாகவும் எகிப்து நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரின் ஆதரவு அமைப்பான அல் - டவுரி என்ற இயக்கத்தின் ஃபேஸ்புக் தளத்திலும் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஈராக் அரசு தரப்பில் இதுகுறித்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.