Published:Updated:

ஈராக்கிற்கு ஈரான் ஆயுதம் சப்ளை, சிரியா குண்டுமழை: அமெரிக்கா எதிர்ப்பு

ஈராக்கிற்கு ஈரான் ஆயுதம் சப்ளை, சிரியா குண்டுமழை: அமெரிக்கா எதிர்ப்பு
ஈராக்கிற்கு ஈரான் ஆயுதம் சப்ளை, சிரியா குண்டுமழை: அமெரிக்கா எதிர்ப்பு
ஈராக்கிற்கு ஈரான் ஆயுதம் சப்ளை, சிரியா குண்டுமழை: அமெரிக்கா எதிர்ப்பு

பாக்தாத்: ஈராக்கிற்கு ரகசியமாக ஈரான் ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும், ஈராக்கில் தீவிரவாதிகள் மீது சிரியா போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து பாக்தாத் நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர். அவர்கள் இப்போது வடக்கு ஈராக்கில் கிறிஸ்தவர்கள் வாழ்கிற கிராமங்களில் பீரங்கி தாக்குதலை தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கூட்டம், கூட்டமாக குர்திஷ்தான் பகுதிக்கு பாதுகாப்பு தேடி விரைகின்றனர்.

இதனிடையே, ஈராக் கோரிக்கை விடுத்தும் அங்கு ராணுவ நடவடிக்கை விவகாரத்தில் அமெரிக்கா இன்னும் இறங்கவில்லை. ஈராக்கில் முதலில் அனைத்து தரப்பினரையும் கொண்ட அரசை அமைப்பதில்தான் அமெரிக்கா குறியாக உள்ளது. ஆனால் இதில் பிரதமர் நூரி அல் மாலிக்கி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இருப்பினும் தேசிய அரசு அமைப்பதற்கான முதல் நடவடிக்கையாக ஈராக் நாடாளுமன்றம் வரும் 1ஆம் தேதி கூடுகிறது.

இந்நிலையில், ஈராக்கில் தீவிரவாதிகளை குறிவைத்து காயிம் நகர்மீது சிரியா போர் விமானங்கள் கடந்த 24ஆம் தேதி குண்டுமழை பொழிந்துள்ளன. இதை ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். "சிரியாவை விமான தாக்குதல் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. இருப்பினும், தீவிரவாதிகளைக் குறிவைத்து நடத்திய இந்தத் தாக்குதலை நாங்கள் வரவேற்கிறோம்" என கூறினார்.

இதனிடையே, ஈராக்கிற்கு ரகசியமாக ஆயுதங்கள், ராக்கெட்டுகள், கனரக எந்திர துப்பாக்கிகள், பன்முக ராக்கட் லாஞ்சர்களை ஈரான் சப்ளை செய்வதாக தெரியவந்துள்ளது. ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசு இருப்பதால் அவர்களுக்கு ஆதரவாகவும், சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும், ஷியா முஸ்லிம் அரசுகளை கொண்டுள்ள சிரியா, ஈரான் ஆகியவை ஆதரவு கரம் நீட்டி உள்ளன. ஆனால், ஈராக்கில் தீவிரவாதிகள் மீது சிரியா போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி இருப்பதை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.