Published:Updated:

எழுத்தில் வாழும் கறுப்பழகி!

எழுத்தில் வாழும் கறுப்பழகி!
எழுத்தில் வாழும் கறுப்பழகி!

எழுத்தில் வாழும் கறுப்பழகி!

எழுத்தில் வாழும் கறுப்பழகி!

மாயா ஏஞ்சலோ... உலகம் முழுக்க சென்று சேர்ந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்கார ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் கவிஞர், எழுத்தாளர், பாடகி, நடிகை, நடனப்பெண், மனித உரிமை செயற்பாட்டாளர் என பல முகங்களை அர்ப்பணிப்புடன் சுமந்தவர். தன் 86 வது வயதில், சமீபத்தில் மறைந்த இந்த எழுத்தழகியின் வாழ்க்கை, வேதனைகளாலும் சாதனைகளாலும் நெய்யப்பட்டது.

மாயா பிறந்த சில வருடங்களில், அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். மாயாவும், அவரின் மூத்த சகோதரரும் அப்பா வழிப் பாட்டியிடம் வாழ ஒப்படைக்கப்பட்டனர். ஓர் ஆப்பிரிக்க - அமெரிக்கச் சிறுமியாக வளர்ந்ததால், மாயா பல இனப் பாகுபாடுகளைக் கடந்தே தன் ஒவ்வொரு வயதையும் அடைய வேண்டியிருந்தது. தன்னுடைய ஏழு வயதில், தன் அம்மாவின் நண்பனால் மாயா பாலியல் வன்முறைக்கு ஆளாக, அவரின் மாமாக்கள் பழி தீர்க்கும் விதமாக அவன் உயிரை வாங்கினார்கள். இந்தக் கசப்பான நாட்கள், மாயாவின் சந்தோஷத்தை பறித்து அவரை யாருடனும் பேசாத தனிமையில் தள்ளின.

எழுத்தில் வாழும் கறுப்பழகி!

இரண்டாம் உலகப் போரின்போது கலிஃபோர்னியாவுக்கு நகர்ந்த மாயா, ஸ்காலர்ஷிப் மூலம் கலிஃபோர்னியா லேபர் பள்ளியில் நடிப்பும் நடனமும் கற்கப் பெற்றார். பள்ளி வாழ்க்கையில் கிடைத்த ஒரு குறுகிய உறவில், தன் 16வது வயதில் ஒரு குழந்தைக்குத் தாயானார் மாயா. தன் குழந்தையைக் காப்பாற்றும் பொறுப்பில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்த மாயா, தன் 24வது வயதில் ஏஞ்சலோபுலோஸ் என்ற கிரேக்கரை மணந்தார். இந்த காலகட்டத்தில்தான் மாயாவின் திறமை உலகின் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

ஆல்பங்கள், நாடகங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர், பத்திரிகையாளர் என தன் பிம்பங்களை வெளிப்படுத்திய மாயா, தன் நண்பர் ஜேம்ஸ் பால்டுவின் உந்துததால் தன் குழந்தைப் பருவ மற்றும் இளம் பருவ சம்பவங்களை சுயசரிதையாக எழுதினார். ‘கூண்டில் சிறைபட்ட பறவை ஏன் பாடுகிறது என்பதை நான் அறிவேன்' ((I Know Why The Caged Bird Sings)  என்ற அவரின் சுயசரிதை, இலக்கிய உலகில் பல அசைவுகளை நிகழ்த்தி, அங்கீகாரங்களைக் குவித்தது. ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண்ணின் முதல் ‘பெஸ்ட் செல்லர்’ என்ற பெருமையுடன், மாயாவை அந்தப் புத்தகம் சர்வதேச நட்சத்திரமாக்கியது. தொடர்ந்து, தன் எழுத்தில் பல புதிய வெளிச்சங்களை, அழகியலில் மட்டுமல்லாமல் கல்வி மற்றும் சமூக தளங்களிலும் கொண்டு வந்தார் மாயா.

எழுத்தில் வாழும் கறுப்பழகி!

டோனி அவார்டு, எம்மி அவார்டு, புலிட்சர் அவார்டு என பல சர்வதேச அங்கீகாரங்களுக்கு ‘நாமினேட்’ செய்யப்பட்டன மாயாவின் படைப்புகள். அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனின் பதவி ஏற்பு விழாவுக்காக மாயா பிரத்யேகமாக எழுதி, வாசித்த ‘ஆன் த பல்ஸ் ஆஃப் மார்னிங்’ கவிதை, அவருக்கான அங்கீகாரங்களில் முக்கியமானது. அந்தக் கவிதையின் ஒலிப்பதிவு, கிராமி அவார்டு பெற்றது. கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என எழுத்தின் பல பரிமாணங்களையும் கடந்த மாயா, புகழ்பெற்ற சமையல் புத்தகங்களும் எழுதினார். 

மாயாவின் நெருங்கிய நண்பரான மார்டின் லூதர் கிங் ஜூனியர், மாயாவின் பிறந்த நாளன்று கொல்லப்பட, அன்றிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்திய மாயா, மார்டினின் மனைவிக்கு அந்நாளில் மறக்காமல் பூக்கள் அனுப்பினார். மார்டின் மனைவியின் மறைவு வரை, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அனுப்பி வைக்கப்பட்டன நட்பின் சாட்சியான அந்த மலர்கள். சர்வதேச டி.வி பெர்சனாலிட்டி ஓபரா வின்ஃப்ரே, மாயாவின் மற்றொரு நெருங்கிய நட்பு.

தன் 86வது வயதில் மாயா ஏஞ்சலோ இந்த மண்ணிடம் விடைபெற்றபோது, அந்த ஆளுமைப் பெண்ணின் நூற்றாண்டுப் பயணத்தை சிலிர்ப்புடன் நினைவு கூர்ந்தது உலகம். தன் எழுத்தில் வாழ்கிறார், இந்தக் கறுப்பழகி! 

- ஜெ.எம்.ஜனனி

அடுத்த கட்டுரைக்கு