Published:Updated:

`பார்ட்டிக்குச் சென்ற தாய்; சோப்பு பவுடரை சாப்பிட்ட குழந்தை!' - ரஷ்யாவை உலுக்கிய கொடூர மரணம்

சிறுமி
சிறுமி ( மாதிரிப் புகைப்படம் )

ரஷ்யாவில், தன் 3 வயது குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு பார்ட்டிக்குச் சென்ற தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ரஷ்யாவில் உள்ள கிரோவ் நகரைச் சேர்ந்தவர் 21 வயதான மரியா ப்லென்கினா (Maria Plenkina). தன் குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக இவருக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் தன் குழந்தையைக் கொலை செய்த விதம் மிகவும் கொடுமையானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கிரோவ் நகர்
கிரோவ் நகர்

மரியா தன் 3 வயது குழந்தை கிறிஸ்டினாவுடன் தனியாக ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அதிக போதைப் பழக்கம் உடைய இவர், எப்போதும் தன் நண்பர்களுடன் இணைந்து வெளியில் செல்வது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்படிக் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, வெளியில் சென்ற மரியா 20-ம் தேதி வரை வீடு திரும்பவில்லை. அப்போதுதான் அவரின் குழந்தை உயிரிழந்துள்ளது.

மரியா தன் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடுவதற்காக ஒரு வாரம் வெளியில் சென்றுள்ளார். ஆனால், வீட்டில் தன் குழந்தையைத் தனியாக வைத்துப் பூட்டி, வீட்டில் யாரும் இல்லாததுபோல அனைத்தையும் செட் செய்துவிட்டுச் சென்றுள்ளார். மரியா வெளியில் சென்றிருந்த அதே வாரத்தில் குழந்தை கிறிஸ்டினாவுக்குப் பிறந்தநாள் வந்துள்ளது. குழந்தைக்கு வாழ்த்து சொல்வதற்காகப் பரிசுடன் வீட்டுக்கு வந்துள்ளார் மரியாவின் தாய் இரினா. அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு பயந்த அவர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். குப்பைக் கிடங்குபோல இருந்த வீட்டில் ஒரு குளிர் அறையில் குழந்தை கிறிஸ்டினா உடம்பில் துணி இல்லாமல் இறந்த நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மரியாவின் வீடு
மரியாவின் வீடு

இது கொலையாக இருக்கலாம் என நினைத்த இரினா, கிறிஸ்டினா இறந்தது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவு, மரியாவின் தாய் உட்பட காவல்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. கிறிஸ்டினா துணி துவைக்கும் சோப்பு பவுடரை உண்டதால் இறந்துள்ளார் என அறிக்கை வெளியாகியுள்ளது.

2 மாதம் தனி அறை, பறிபோன உயிர்! - 5 வயதுச் சிறுமியின் டைரியால் சிக்கிய தாய், வளர்ப்புத் தந்தை

பின்னர் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றிப் பேசியுள்ள காவல் துறையினர், ``குழந்தையின் தாய் மரியா, கிறிஸ்டினாவை வீட்டில் தனியாக வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். வீட்டில் குழந்தை இருப்பது தெரியக் கூடாது என்பதற்காக வெளியில் செல்லும் முன்பு, வீட்டின் தண்ணீர் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, மின் விளக்குகளையும் அணைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதேநேரம் வீட்டிலிருந்த குழந்தைக்கு உணவுகூட வைக்காமல் தனியாக விட்டுள்ளார். கிறிஸ்டினா தன் தாய் வெளியில் செல்லும்போது எந்தவித பதற்றமும் பயமும் இன்றி இருந்துள்ளார். அழவில்லை, எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. ஆனால், உணவு இல்லாமல் பசியால் தவித்துள்ளார்.

குழந்தை கிறிஸ்டினா
குழந்தை கிறிஸ்டினா

அதனால் வீட்டில் குறைந்த அளவில் மீதமிருந்த தயிர், சிக்கன் போன்றவற்றை உண்டுள்ளார். அதிக பசியினால் குழந்தை துணி துவைக்கும் பவுடரை உணவு என நினைத்துச் சாப்பிட்டுள்ளது. அதிக பவுடரை சாப்பிட்டதால் அது குழந்தையின் உடலைப் பாதித்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் குழந்தை துடிதுடித்து இறந்துள்ளது. பின்னர் குழந்தையைக் கொலை செய்ததாக மரியா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது” என்று கூறியுள்ளனர்.

மரியாவைப் பற்றிப் பேசியுள்ள அவரின் தோழி அனஸ்டசியா குர்பினா, ``மரியா தினமும் நான் வைத்திருக்கும் மதுக் கடைக்கு வருவார். நிறைய பணம் கொடுத்து அளவுக்கு அதிகமான மது பாட்டில்களை வாங்கிச் செல்வார். இறுதியாக அவர் வெளியில் சென்றபோது நான் குழந்தையைப் பற்றி விசாரித்தேன், குழந்தையை தன் மற்றொரு நண்பர் பார்த்துக்கொள்வதாகச் சொன்னார். தற்போதுதான் பொய் சொல்லியுள்ளார் என்று தெரிகிறது” எனப் பேசியுள்ளார்.

மரியா சிறைக் காவலில் இருக்கும்போது அவருக்கு உளவியல் நிபுணர்களின் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் தன் குற்றத்தைத் தைரியமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மரியா
மரியா

``உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தையைத் தனியாக விட்டுச் சென்றது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால், கிறிஸ்டினாவைக் கொல்லும் நோக்கில் எதுவும் செய்யவில்லை. குழந்தை உயிரிழக்கும் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இறுதியாக மரியா பற்றி உளவியல் நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மரியா மிகுந்த விவேகத்துடன் உள்ளார். தான் என்ன செய்கிறோம் என அறிந்தே குழந்தையைத் தனியாக விட்டுச் சென்றுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கை வெளியான பிறகே கிறிஸ்டினா வழக்கில் இறுதி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை வீட்டில் தனியாக விட்டு கொடூரமாகக் கொலை செய்த குற்றத்துக்காக மரியாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன் பேத்தி இறப்புக்கு வேதனை தெரிவித்துள்ள மரியாவின் தாய் இரினா, ``மரியா வெளியில் செல்வது எனக்குத் தெரியாது, ஒருவேளை தெரிந்திருந்தால் குழந்தையை என்னுடன் அழைத்துச் சென்றிருப்பேன். மரியா இப்படிச் செய்வாள் என நினைக்கவில்லை. அனைத்தும் நலமாக உள்ளதாக என்னிடம் பொய் கூறினாள். அனைவரிடமும் அதே பொய்யைக் கூறியுள்ளார்” என்று கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு