Published:Updated:

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி?: புதிய தகவல்கள்!

Vikatan Correspondent
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி?: புதிய தகவல்கள்!
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி?: புதிய தகவல்கள்!

கிய்வ்: மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது சுடப்பட்டுள்ளது. உக்ரைன் தீவிரவாதிகளால் ’பக்’ ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆன்டன் ஹெரா சென்கோ தெரிவித்துள்ளார்.
 

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி?: புதிய தகவல்கள்!

ஆனால் அதை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானம் 33 ஆயிரம் அடி  உயரத்தில் பறந்த போது மலேசிய விமானம் சுடப்பட்டுள்ளது. ஆனால் எங்களிடம் அவ்வளவு உயரத்தில் பறக்கும் விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் இல்லை. எனவே அந்த விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என கிளர்ச்சியாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக உயரத்தில் பறக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய ஆயுதம் உக்ரைன் ராணுவத்திடம் உள்ளது எனறும், எனவே அவர்கள்தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இதை உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது. பக் ஏவுகணை ரஷ்யாவுக்கு சொந்தமானது. 55 கிலோ எடை கொண்ட அந்த ஏவுகணை 28 கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்க கூடியது. அந்த ஏவுகணையை ரஷ்ய அதிபர் புதின் தீவிரவாதிகளுக்கு வழங்கியுள்ளார் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் தற்போது உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு ராணுவத்துக்கும், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கடும் சண்டை நடக்கிறது.

கிழக்கு உக்ரைனில் பல போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். கடந்த 14ஆம் தேதி உக்ரைனின் ஏ.என்-26 ரக விமானமும், 16ஆம் தேதி சுகோய் சூ-25 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரஷ்யா வழங்கிய ஏவுகணை மூலமே சுடப்பட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
 

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி?: புதிய தகவல்கள்!

இவை அனைத்தையும் ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்நாட்டு போர் நடப்பதால் அது போர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநாட்டு விமானங்கள் பறக்க வேண்டாம் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து இருந்தன. ஆனால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் விமானி, விமானத்தின் பயண பாதையை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனாலேயே, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

ஆனால், விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து உக்ரைன் வழியாக விமானங்கள் பறக்க சர்வதேச நாடுகள் தடை விதித்துள்ளன. ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் அங்கு பறக்க வேண்டாம் என்றும் வேறு வழியில் பயண பாதையை மாற்றும்படியும் மத்திய விமான போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதே நடவடிக்கையை ஐரோப்பிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் மேற்கொண்டுள்ளது.