Published:Updated:

பிரிவினையை நிராகரித்தனர் ஸ்காட்லாந்து மக்கள்: 55% பேர் எதிர்ப்பு!

விகடன் விமர்சனக்குழு
பிரிவினையை நிராகரித்தனர் ஸ்காட்லாந்து மக்கள்: 55% பேர் எதிர்ப்பு!
பிரிவினையை நிராகரித்தனர் ஸ்காட்லாந்து மக்கள்: 55% பேர் எதிர்ப்பு!
பிரிவினையை நிராகரித்தனர் ஸ்காட்லாந்து மக்கள்: 55% பேர் எதிர்ப்பு!

எடின்பர்க்: பிரிட்டனில் இருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42 சதவீதம் பேரும், பிரிவினைக்கு ஆதரவாக 44.58 பேரும் வாக்களித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 31 மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 19,14,187 பேரும், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று 15,39,920 பேரும் வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் சுமார் 3 சதவீதம் அதிகரித்திருப்பதை இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.

இதனிடயே, மக்கள் முடிவை ஏற்பதாக ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஸ்காட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், எதிர்காலத்தில் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வலுவான அடித்தளமாக அமைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்காட்லாந்த் வாக்காளர்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிகமாக கூடுதல் அதிகாரங்களை அளிப்போம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்திருக்கும் பிரிட்டனின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஸ்காட்லாந்துக்கு அதிகாரப்பகிர்வு: பிரதமர் கேமரூன் அறிவிப்பு

இதனிடையே, ஸ்காட்லாந்துக்கு மட்டுமன்றி, ஐக்கியராஜ்ஜியத்தில் இருக்கும் இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய எல்லாதரப்பாருக்கும் அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உறுதியளித்திருக்கிறார்.

பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து தனியாக பிரிந்துபோகக்கூடாது என்று பிரச்சாரம் செய்த பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளான, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, அதன் கூட்டாளியான லிபரல் டெமாக்ரெடிக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து தமது பிரசாரத்தின்போது ஒரு உறுதிமொழியை ஸ்காட்லாந்து வாக்காளர்களுக்கு அளித்தனர்.

பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியக்கூடாது என்று அதிகப்படியான ஸ்காட்லாந்த் வாக்காளர்கள் வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்களை பகிரந்தளிப்போம் என்று இந்த மூன்று கட்சியின் தலைவர்களும் கூட்டாக ஒரு உறுதிமொழியளித்திருந்தனர்.

தற்போது, ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்ல வேண்டாம் என்று பெரும்பான்மை ஸ்காட்லாந்து வாக்காளர்கள் வாக்களித்திருக்கும் நிலையில், ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்கள் அளிப்போம் என்கிற பிரிட்டனின் மூன்று முக்கிய கட்சிகளும் அளித்திருந்த முந்தைய உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்று டேவிட் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.

இந்த அதிகாரப்பகிர்வு என்பது ஸ்காட்லாந்துக்கு மட்டுமில்லாமல் பிரிட்டனின் எல்லா பகுதிக்கும் செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.