Published:Updated:

இந்தியாவிடமிருந்து காஷ்மீரை மீட்போம்: பெனாசிர் பூட்டோ மகன் பேச்சு; பா.ஜ. பதிலடி!

Vikatan Correspondent
இந்தியாவிடமிருந்து காஷ்மீரை மீட்போம்: பெனாசிர் பூட்டோ மகன் பேச்சு; பா.ஜ. பதிலடி!
இந்தியாவிடமிருந்து காஷ்மீரை மீட்போம்: பெனாசிர் பூட்டோ மகன் பேச்சு; பா.ஜ. பதிலடி!
இந்தியாவிடமிருந்து காஷ்மீரை மீட்போம்: பெனாசிர் பூட்டோ மகன் பேச்சு; பா.ஜ. பதிலடி!

இஸ்லாமாபாத்: தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வசம் உள்ள முழு காஷ்மீரையும் மீட்போம் என பாகிஸ்தானின் அடுத்த தலைமுறை அரசியல் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ சர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, கடந்த 2007 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பெனாசிர் குடும்பம் வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து,  பின்னர் நாடு திரும்பியது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக பெனாசிரின் கணவர் ஆஸிப் அலி சர்தாரி பதவி வகித்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி.எம்.எல்.-என் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.இதனையடுத்து நவாஸ் ஷெரீப், அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

அடுத்ததாக வருகிற 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலை சந்திக்க, ஆட்சியை இழந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி, இப்போதே தன்னை தயார்படுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக பாகிஸ்தானின் அடுத்த தலைமுறை தலைவராக பார்க்கப்படும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான  பில்வால் பூட்டோ, தீவிர பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

இதன் ஒரு அம்சமாக முல்டான் பகுதியில்  வெள்ளம் பாதிப்பு இடங்களை பார்வையிட்டு, கட்சி தொண்டர்களிடையே பேசிய பிலாவல் பூட்டோ, " காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியா வசம் இருக்கும் முழு காஷ்மீர் பகுதியையும் மீட்பேன். காஷ்மீரின் ஒரே ஒரு அங்குல இடத்தைக் கூட இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டேன். ஏனெனில் பாகிஸ்தானில் உள்ள இதர மாகாணங்களைப்போன்று, காஷ்மீரும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது" என்று கூறினார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி கடந்த காலங்களில் இந்தியாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே விரும்பியது. அக்கட்சியின் தலைவராக இருந்த பெனாசிர் பூட்டோவும் அவ்வாறே நடந்துகொண்டார்.

இந்நிலையில் பிலாவாலின் தற்போதைய பேச்சு, அக்கட்சித் தலைவர்களிடையே கூட வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாவால் இவ்வாறு பேசும்போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களான யூசுப் ரஸா கிலானி மற்றும் ராஜா பர்வேஷ் அஷ்ரப் ஆகியோரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வையும், காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்ற பிரசாரத்தையும் மேற்கொள்பவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக நடந்துகொள்பவர்களுக்குத்தான் அந்நாட்டு ராணுவத்தின் ஆதரவு கிடைக்கும். மேலும் இதுபோன்ற பேச்சுக்கள் மக்களை தூண்டிவிட்டு ஓட்டுக்களை குவிக்க உதவும் என்பதாலுமே பிலாவால் பூட்டோ இவ்வாறு பேசியிருக்கக் கூடும் என அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பா.ஜனதா பதிலடி

இதனிடையே பிலாவால் பூட்டோவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி, "இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். அதற்கான வல்லமை இந்தியாவுக்கு உண்டு. போரை விரும்பாததால் இந்தியா அவ்வாறு செய்வதில்லை" எனக் கூறியுள்ளார்.

பிலாவால் பூட்டோவுக்கு அரசியல் அனுபவம் ஏதும் கிடையாது. அவரது இந்த பேச்சு பொறுப்பற்ற, குழந்தைத்தனமானது. காஷ்மீர் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதனை பாகிஸ்தானால் ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.