Published:Updated:

த.தே.கூ. ஆதரவாளர் சுட்டுக்கொலை: இலங்கை ராணுவம் மீது குற்றச்சாட்டு!

த.தே.கூ. ஆதரவாளர் சுட்டுக்கொலை: இலங்கை ராணுவம் மீது குற்றச்சாட்டு!
த.தே.கூ. ஆதரவாளர் சுட்டுக்கொலை: இலங்கை ராணுவம் மீது குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளருமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னாரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு ராணுவத்தினரே காரணம் என்று கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
 

த.தே.கூ. ஆதரவாளர் சுட்டுக்கொலை: இலங்கை ராணுவம் மீது குற்றச்சாட்டு!

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூறுகையில், மன்னார் - வெள்ளாங்குளம் ராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எங்கள் கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் அடையாளம் தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனவே, இந்தச் சம்பவத்துக்கு ராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நகுலேஸ்வரனின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

எனவே, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன், அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் எனவும், நேற்று முன்தினம் மன்னாரில் ஒரு முன்னாள் போராளி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.