Published:Updated:

தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்: 15 பேர் பரிதாப பலி! (படங்கள்)

Vikatan Correspondent
தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்: 15 பேர் பரிதாப பலி! (படங்கள்)
தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்: 15 பேர் பரிதாப பலி! (படங்கள்)

லாகூர்: பாகிஸ்தானில் இரு தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்: 15 பேர் பரிதாப பலி! (படங்கள்)

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூரின் யோஹானாபாத் பகுதியில், ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும், கிறைஸ்ட் தேவாலயத்திலும் நேற்று பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒரு சிறுமி, ஒரு சிறுவன், இரு காவலர்களும் அடங்குவர். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உல்-அஹ்ரார் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்ளது.

மேலும், இந்த தாக்குதல் நடந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய இருவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து விசாரித்தபோது, அந்த இரண்டு நபர்களும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களின் கூட்டாளிகள் என்றும், தற்கொலைத் தாக்குதலைப் பார்வையிட வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அங்கு கூடியிருந்தவர்கள் அந்த இரண்டு நபர்களையும் தாக்கியதுடன் உயிருடன் எரித்துள்ளனர்.

தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்: 15 பேர் பரிதாப பலி! (படங்கள்)

இந்தத் தாக்குதலுக்கு அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ''அப்பாவிகளைக் குறி வைத்து நடத்திய இந்தத் தாக்குதல் கோழைத்தனமான செயல்" என்றார்.

இந்த தற்கொலைத் தாக்குதல் குறித்து லாகூர் காவல் துறை துணைத் தலைவர் ஹைதர் அஷ்ரஃப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தேவாலயங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல் காரணமாக அங்கு போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. அந்த இரு தேவாலயங்களிலும் 5 போலீஸார் காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்தவர்களை தேவாலயத்துக்குள் நுழைய விடாமல் அங்கிருந்த காவலர்கள் தடுத்துள்ளனர்.

தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்: 15 பேர் பரிதாப பலி! (படங்கள்)

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்புப் பிரார்த்தனைக்காக காலையில் இருந்தே ஏராளமானோர் இரு தேவாலயங்களிலும் கூடியிருந்தனர். குண்டு வெடிப்புகள் உள்ளே நிகழ்ந்திருந்தால் உயிரிழப்பு அதிகரித்திருக்கும். போலீஸாரின் தியாகத்தால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் இரு போலீஸாரும் அடங்குவர். பலத்த காயமடைந்தவர்களில், பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.

லாகூர் நகரின் யோஹானாபாத் பகுதியில் சுமார் 10 லட்சம் கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். அங்கு 150க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. இரட்டைத் தாக்குதலையடுத்து, கிறிஸ்தவர்கள் லாகூர் நகரின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாகூர் மட்டுமல்லாமல், கராச்சி, முல்தான், பெஷாவர், ஃபைஸலாபாத், நான்கானா சாஹிப், சர்கோதா ஆகிய நகரங்களிலும் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்: 15 பேர் பரிதாப பலி! (படங்கள்)

இதனிடையே, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று லாகூர் பேராயர் இர்ஃபான் ஜமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்த நாட்டின் அமைதியைக் குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி செய்கின்றனர். மசூதிகளையும் தர்காக்களையும் சந்தைகளையும் குறி வைத்து அவர்கள் தாக்குதல்கள் நிகழ்த்துகின்றனர்.

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களைக் குறி வைத்து தாக்குதல் நிகழ்த்தப்படுவதைப் போலவே முஸ்லிம்களையும் தாக்கி வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளின் சதியில் விழுந்துவிடக் கூடாது" என்றார். மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவப் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் பஞ்சாப் மாகாண அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீஃப் இது குறித்து கூறும்போது, ''உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.1 லட்சம்) இழப்பீடு அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.75,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,000) அளிக்கப்படும்" என்றார்.