Published:Updated:

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்திக்கு சிலை!

Vikatan Correspondent
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்திக்கு சிலை!
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்திக்கு சிலை!

காந்தியடிகள் பெயரில் ‘டின் பீர்’ தயாரித்து வெளியிட்டு, நம் தேசத் தந்தையை அவமரியாதை செய்யும்  நாடுகளுக்கு மத்தியில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்தி சிலை திறந்து கொண்டாடியிருக்கிறது இங்கிலாந்து.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்திக்கு சிலை!

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இருவரும் சேர்ந்து, மகாத்மா காந்திக்கு சிலை திறந்து வைத்துப் பெருமைப்படுத்தினர். லண்டன் வாழ் இந்திய தொழிலதிபரான மேக்நாத் தேசாய் உள்பட பல தொழிலதிபர்கள் இந்தச் சிலை நிறுவுவதற்கு உதவி புரிந்திருக்கிறார்கள். இந்திய மதிப்பில், சுமார் 10 கோடி ரூபாய் செலவழித்து, 9 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் வெண்கலத்தினாலான இந்தச் சிலை, 1931ஆம் ஆண்டு காந்தியடிகள் லண்டனுக்குச் சென்றபோது, பிரதமர் அலுவலகத்தின் முன்புறம் நின்றவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைத்தவர், பிரபல பிரிட்டிஷ் சிலை வடிவமைப்பாளரான பிலிப் ஜாக்சன் என்பவர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்திக்கு சிலை!

இந்தச் சிலைத் திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி, இங்கிலாந்தின் முக்கியப் பிரமுகர்கள் என்று முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ‘‘உலக வரலாற்றில் காந்தியடிகளுக்கு முக்கியமான இடம் உண்டு. அவருக்குச் சிலை வைப்பதன் மூலம் இங்கிலாந்து பெருமை கொள்கிறது!’’ என்றார் டேவிட் கேமரூன்.

‘‘வின்ஸ்ட்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் உலகத் தலைவர்களின் சிலைகள் இடம் பெற்றிருக்கும் லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில், முதன் முதலாக ஓர் இந்தியத் தலைவருக்குச் சிலை வைத்திருப்பது இந்தியாவுக்குப் பெருமையான விஷயம்!’’ என்றார் அமிதாப் பச்சன்.

- தமிழ்