வங்காளதேசத்தின் சிட்டாகோங் நகரத்தில் உள்ள சித்தகுண்டா உபசில்லா பகுதியில் அமைந்துள்ள தனியார் கன்டெய்னர் கிடங்கு ஒன்றில், நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பகுதியில் பிடித்த தீ மளமளவென பரவி, கிடங்கு முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால், கிடங்கு முழுவதும் தீ பரவி இருந்ததால், அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. பின்னர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக கிடங்கில் பணியாற்றிக்கொண்டிருந்த 40 ஊழியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், தீயணைப்பு மீட்பு வீரர்கள் இதுவரை 450-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அரசு அதிகாரிகள், ``பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருக்கிறது. காயமடைந்த அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை துவங்கியுள்ளது. இந்த கன்டெய்னர் கிடங்கு மே 2011 முதல் இயங்கி வருகிறது. இதுவரை 40 பேர் இறந்திருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றனர்.
