Published:Updated:

'ப்ளூஸ்' இசையின் மூச்சு நின்னு போச்சு!

'ப்ளூஸ்' இசையின் மூச்சு நின்னு போச்சு!
'ப்ளூஸ்' இசையின் மூச்சு நின்னு போச்சு!

'ப்ளூஸ்' இசையின் மூச்சு நின்னு போச்சு!

'கிங் ஆஃப் ப்ளூஸ்' என்று அழைக்கப்படும் பி.பி.கிங் (B.B. King) (89) இன்று மரணமடைந்தார். ப்ளூஸ் இசையின் முக்கிய கலைஞர்களுள் ஒருவர் கிங். நீரிழிவு பிரச்னை காரணமாக அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கிங். உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க, செல்வாக்குமிக்க பி.பி.கிங் மறைந்தது இசைக்கு பேரிழப்பு.

1925-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் உள்ள இட்டா பெனா நகரில் பிறந்தார் பி.பி.கிங். முழு பெயர் ரைலி பி.கிங். 5 வயது ஆகும்போதே பெற்றோர் விவாகரத்து செய்துவிட, அம்மாவிடம் வளர்ந்தார் கிங். எளிய குடும்பம்தான். இதைப்பற்றி 'வீட்டில் இருக்கும்போதே வெளியே உள்ள கிளைமேட்டை உணரமுடிந்தால், நீங்கள் வசதியானவர் இல்லை' என்று சொல்வார் கிங். 9 வயதில் அம்மாவும் இறந்துவிட, பாட்டிதான் கிங்கை வளர்த்திருக்கிறார். சாலையில் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது பொழுதுபோக்கு. 17 வயதில் திருமணமும் ஆகிவிட்டது.

'ப்ளூஸ்' இசையின் மூச்சு நின்னு போச்சு!

1948-ம் ஆண்டு முதல்முதலாக ஒரு ரேடியோவில் வாசித்தார். அதன்பின் ஒரு நாள் மெம்ஃபிஸ் நகரில் வாசிக்கும்போதுதான் முதல் முறையாக எலெக்ட்ரிக் கிட்டாரைக் கேட்டிருக்கிறார் கிங். அங்கே வந்திருந்த பிரபல கிட்டாரிஸ்ட் டி-போன் வாக்கர் (T-Bone Walker)-ன் எலெக்ட்ரிக் கிட்டார் இசையைக் கேட்ட கிங், வாக்கரின் இசை சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும் என்று சிலாகிப்பார் கிங்.

ஒரு கிட்டாரிஸ்ட் தன்னுடைய கிட்டாரை எவ்வளவு நேசிக்க வேண்டும் என்பதை கிங்கிடம் கற்றுக்கொள்ளலாம். பி.பி.கிங்கின் அனைத்து கிட்டார்களின் பெயரும் Lucille-தான். 1949-ம் வருடம் Arkansas மாகாணத்தில் உள்ள Twist எனும் இடத்தில் உள்ள கிளப்பில் வாசிக்கும்போது, அங்கே இருந்த 2 ஆண்களுக்கிடையே Lucille எனும் பெண் சம்பந்தமாக பயங்கரமான சண்டை மூண்டது.  அப்போது அங்கே இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து, மொத்த கிளப்பே தீப்பற்றிக்கொண்டது. எல்லோரும் தப்பித்துவிட்டாலும், கிங்-ன் கிட்டார் மட்டும் உள்ளே மாட்டிக்கொண்டது. தீப்பற்றி எரியும் கிளப்புக்குள் நுழைந்து தன் கிட்டாரை மீட்டுவந்தார் கிங். அப்போதில் இருந்து தன்னுடைய கிட்டார்களுக்கு Lucille என்றுதான் பெயர் வைத்திருக்கிறார் கிங். காரணம், எப்போதும் பெண்ணுக்காக யாரோடும் தான் சண்டையிடக்கூடாது என்று நினைவூட்டிக்கொள்வதற்காகத்தானாம்.தன்னுடைய கிட்டாரின் பெயரிலேயே 'Lucille' என்று பாட்டையை எழுதியிருக்கிறார் கிங். 'நான் சாதாரண மனிதனாக இருந்ததில் இருந்து, புகழ்பெற்ற கலைஞனாக ஆனது வரை என்னுடன் இருந்தது என் Lucille மட்டும்தான். நான் தனிமையாக உணரும்போது Lucille-ஐ எடுத்து வாசிக்க ஆரம்பிப்பேன். அதில் இருந்து என்ன இசை வந்தாலும் எனக்கு நன்றாகத்தான் இருக்கும். அப்படியே மணிக்கணக்கில் வாசிக்கும்போது என்னால் பேசக்கூடாத முடியாத அளவுக்கு உணர்ச்சிப் பெருக்கில் இருப்பேன். சில நேரங்களில் என் கிட்டார் அழுவதுபோலும் எனக்கு கேட்கும். நான் ஒவ்வொருமுறை என் Lucille கிட்டாரை வாசிக்கும்போது அது என்னுடன் பேசுவது போல் இருக்கிறது. என் கிட்டாரில் இருந்து வருவது வெறும் ஓசை அல்ல, அது ஒரு எமோஷன்' என்று தன் கிட்டாரைப் பற்றிச் சொல்லி சொல்லி சந்தோஷப்படுவார். 2 முறை திருமணம் ஆகியிருந்தாலும் தன்னுடைய மனைவியைவிட Lucille கிட்டாரைத்தான் அதிகம் காதலிப்பதாக சொல்வாராம்.

'ப்ளூஸ்' இசையின் மூச்சு நின்னு போச்சு!

நவீன கிட்டார் இசையில் 'சோலோ' முக்கியத்துவம் பெறுவதற்கு ஒரே காரணம் கிங் தான். கிங்குக்கு முன் இருந்த பிரபல கிட்டாரிஸ்ட்டுகள் தனித்தனி நோட்டாக (note) சோலோவை வாசித்தார்கள். இல்லாவிட்டால், மிகவும் சிக்கலான கிளாஸிக்கல் ஸ்டைலில் வாசித்தார்கள். ஆனால், கிங் ஒரே நோட்-ஐ பெண்ட் (Bend) செய்து வாசிக்கும்போது கிட்டார் சத்தம் நம் உயிரைத் தொடும். கிங்-ன் ஸ்பெஷலே அவருடைய Vibrato ஸ்டைல்தான். ஸ்லைட் (slide) கிட்டார் வாசிக்க வேண்டும் என்பது கிங்குக்கு கனவு. ஆனால், ஸ்லைட் நோட்ஸ் வாசிக்கவும் வரவில்லை. அதனால், ஒரே நோட்டைப் பிடித்து அதிர்வுறச் செய்வதுமூலம் தான் ஸ்லைட் செய்வதாக நினைத்துக் கொள்வார் கிங். பின்னாளில், இந்த Vibrato-வே கிங்கின் டிரேட்மார்க் ஸ்டைலானது. ஒவ்வொரு நோட்டுக்கும் அதன் அர்த்ததை தன்னுடைய Vibrato மூலம் கொடுத்தார் கிங். அவருடைய இந்த ஸ்டைலுக்கு 'Butterfly' என்று பெயர் வைத்துக்கொண்டார். இன்று வரை கிட்டாரிஸ்ட்டுகள் இந்த ஸ்டைலைக் காப்பி அடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
'கிட்டாரில் நோட் கிடைத்துவிட்டது என்பதற்காக சோலோ வாசிக்கக்கூடாது. சோலோ வாசிப்பதில் ஒர் அர்த்தம் இருக்கவேண்டும். ஒவ்வொரு நோட்-ம் முக்கியம். குறைந்த நோட்களை வைத்து சோலோ வாசிக்க முடியும் என்றால் அதுபோதும். நான் ஏன் அதிக நோட்களை வாசிப்பதில்லை என்றால், நான் கிட்டார் வாசிக்கும்போது நானே பாடுவதாக உணர்கிறேன். சோலோ வாசிக்கும்போது கிட்டார் மூலம் நான் பாடுவதை என்னால் கேட்க முடிகிறது' என்று சொல்வார் கிங். இன்றைய கிட்டாரிஸ்ட்டுகளுக்கு கிங்-ன் இந்தக் கூற்று பாடம்.

கிங்-ன் தீவிர ரசிகர்களுக்கு அவருடைய Lucille கிட்டார் எப்போது அழுகிறது, எப்போது ஆனந்தத்தில் பீறிடுகிறது என்று புரிந்துகொள்ள முடியும். ஒரே சோகமான நோட்டை அழகாக வாசிக்கும் விதத்தில் ஒருவித மகிழ்ச்சி இருக்கிறது. ஒரு கிட்டார்தான். அதில் 6 ஸ்ட்ரிங்குகள்தான். அதை வாசிப்பது கிங்தான். ஆனால், எத்தனைவிதமான எமோஷன்கள், ஒரு நோட்டை வளைக்கும்போதே நம் மனமும் வளைந்து கொடுக்கிறதே!அவருடைய கிட்டார் மட்டுமா பேசும்? கிங்-ன் ஆழமான, ஆற்றல் நிறைந்த குரல் விண்ணுக்கு எகிறும்போது நம் தொண்டையே அதிரும். 1950-களில் இருந்து இன்றுவரை மேற்கத்திய ராக்/ப்ளூஸ் இசையில் கிங்-ன் ஆளுமைக்கு நிகரில்லை. இன்று இசையின் கிட்டார் கடவுகளாக இருக்கும் எரிக் கிளாப்டன், ஜிம்மி பேஜ், ஸ்டீவி ரே போன்றவர்களுக்கே கடவுளாக இருந்தவர் கிங். 50-களுக்கு முன் இருந்த இசைக்கும், இப்போது இருக்கும் இசைக்கும் பாலம் போல் இருந்தார் கிங். 80 வயது வரை உலகம் முழுக்க சுற்றிச் சுற்றி வாசித்துக்கொண்டே இருந்தார். 15,000-க்கும் மேலான கச்சேரிகளில் வாசித்திருக்கிறார்.ஆரம்ப காலங்களில் அமெரிக்கர்கள் கிங்-ன் அருமையை உணரவில்லை. காரணம் கறுப்பினத்தவர்களின் மீது இருந்த அடக்குமுறைதான். கிங் ஊர் ஊராகச் சென்று வாசிக்கும்போது அமெரிக்கப் போலீஸார் படுத்தி எடுப்பார்களாம். அப்போதெல்லாம் கோபத்தை அடக்கிக்கொள்வாராம் கிங். பின்னாளில் கிங்-ன் அருமை பிரிட்டனில் இருந்த வந்த இசைக்குழுவினரின் புண்ணியத்தில் தெரியவந்தது. அவர்கள் கிங்-ன் ப்ளூஸ் இசையை தங்கள் ராக் இசையுடன் கலந்துகொடுக்க, அமெரிக்கர்களுக்கு கிங்-ன் அருமை புரிந்தது. அதுவரை கறுப்பினத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் வாசிக்க அனுமதி கொடுக்கப்படாத இடங்களுக்கு கிங் வாசிக்க அழைக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோவின் ஃபில்மோர் வெஸ்ட் தியேட்டரில் அவர் வாசித்தபோது, அங்கே அதிகமாக இருந்த வெள்ளை இனத்தவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய ஆடிப்போய்விட்டார் கிங். பின்னாளில் ஒரு ரகசியத்தைச் சொன்னார் கிங். ஃபில்மோர் தியேட்டருக்கு வந்தபோது வெள்ளை இனத்தவர்கள் அதிகம் இருந்ததைப் பார்த்து, அவருடைய பஸ் டிரைவரைத் 'தவறான இடத்துக்கு ஓட்டிவந்துவிட்டாயோ?' என்று திட்டினாராம். சரியான இடத்துக்குதான் சென்றிருந்திருக்கிறார் கிங்.

15 கிராமி விருதுகளை வென்றிருக்கிறார் பி.பி.கிங். உலகின் டாப் 5 கிட்டாரிஸ்ட்டுகளில் ஒருவர். இசை உலகின் மிக மிக முக்கியமான மனிதராக, 50-களின் இசைக்கும், நவீன இசைக்கும் நடுவில் ஒரே பாலமாக இருந்திருக்கிறார் கிங்.

குட் பை கிங்!

ர. ராஜா ராமமூர்த்தி

அடுத்த கட்டுரைக்கு