Published:Updated:

ராணுவ நடவடிக்கை: ஈரானுக்கு ஒபமா எச்சரிக்கை

ஹோனலூலூ: அணு ஆயுதங்களை தயாரிக்கும் ஈரானுக்கு எதிராக தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்தார்.

ஈரானின் அணுகுண்டு தயாரிக்கும் திட்டம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கை உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் அளிக்கப்பட்டது.

இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படங்கள், கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவையும் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடை மேலும் வலுவாக்கியிருக்கிறது அமெரிக்கா.

இந்த நிலையில், ஹவாய் தீவில் ஹோனலூலூ நகரில் நடைபெற்ற ஆசிய- பசிபிக் உச்சி மாநாட்டில் நிருபர்களிடம் ஒபாமா கூறுகையில், "ஈரான் அணுஆயுதங்களைத் தயாரிப்பது வளைகுடா பிராந்தியத்துக்கு மட்டும் அல்ல, அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய சவாலாக அமையும்.

இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பெரும்பான்மை நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஈரான் ஆணுஆயுத நாடாக உருவெடுத்தால் எதிர்காலத்தில் நிகழக்கூடிய ஆபத்துகளை ரஷியாவும், சீனாவும் புரிந்துக் கொள்ளும் என நம்புகிறேன்," என்றார் ஒபாமா.