Published:Updated:

இந்து மதத்துக்கு அவதூறு... 5 ஆண்டு சிறை; 2 கோடி அபராதம்..! எங்கே, ஏன்?

அமீரகத்தில் எந்த மதத்தை அவதூறாகப் பேசினாலும் கடும் தண்டனை வழங்கப்படும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்து மதத்தை இழிவாகப் பேசினாலும் சிறைத்தண்டனை கிடைக்கும்

இந்து மதத் தலைவர்களை வரவேற்கும் அமீரக அமைச்சர்
இந்து மதத் தலைவர்களை வரவேற்கும் அமீரக அமைச்சர்

இந்தியாவில் அடுத்த மதங்களை விமர்சித்துவிட்டு எளிதாகக் கடந்து செல்வது இயல்பாக நடக்கிறது. ஆனால், அரபு நாடுகளில் இஸ்லாம் மதத்தையோ அல்லது முகம்மது நபியையோ விமர்சித்தால் கடும் தண்டனை வழங்கப்படும்.

அபுதாபி ஸ்வாமி நாராயண் கோயில்
அபுதாபி ஸ்வாமி நாராயண் கோயில்

பாகிஸ்தானில் மதத் துவேஷத்துக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதற்கிடையே, அரபு நாடான யு.ஏ.ஈ எனப்படும் அமீரகத்தில் எந்த மதத்தை விமர்சித்தாலும் கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, எந்த மதத்தையும் இறைத்தூதரையும் விமர்சிக்கக் கூடாது. புனித நூல்களுக்கும் இந்தச்சட்டம் பொருந்தும். அதையும் மீறி விமர்சித்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 2 கோடி வரை (1 மில்லியன் யு.ஏ.ஈ தினார்) அபராதமாக விதிக்கப்படும் என்று அபுதாபி நீதித்துறை அறிவித்துள்ளது. அமீரக நாட்டின் எல்லைக்குள் இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மதங்களை விமர்சித்தாலும் இந்தத் தண்டனை கிடைக்கும். இனப்பாகுபாடு மற்றும் வெறுப்பை விதைத்தால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும்.

இந்தச்சட்டம் குறித்து `கல்ஃப் நியூஸ்' பத்திரிகைக்கு அபுதாபி நீதித்துறை சமூகப்பொறுப்புப் பிரிவு அதிகாரி அமீனா அல் மசூரி கூறுகையில், ``மதம், நிறம், சாதியப்பாகுபாட்டின் அடிப்படையில், மக்கள் பிரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமீரகத்தில் வாழும் குடிமக்கள் அனைவரும் சமமானவர்கள். சட்டத்தை மீறி மதத் துவேஷத்துடன் நடந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை அபாரதமும் விதிக்கப்படும்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிற மதத்தினரை புண்படுத்தினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்
அபுதாபி நீதித்துறை

சட்டத்தின் முன் அனைவரும் சமம். யார் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு அமீரகத்தில் உரிய நீதி கிடைக்கும். சட்டத்தை மீறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மசூதிகள், இந்துக் கோயில்கள், குருத்வாரா, கிறிஸ்தவ ஆலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு சேதம் விளைவித்தாலும் இந்தத் தண்டனை பொருந்தும். சோஷியல் மீடியாவில் மதத் துவேஷத்தில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை கிடைக்கும். மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறோம் என்று அறியாமலேயே பலர் சோஷியல் மீடியாக்களில் இஷ்டத்துக்கு கருத்துகளை பதிவு செய்கின்றனர். சமூகவலைதளத்தில் எவ்விதமான கருத்தையும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது, உங்களது கருத்துச் சுதந்திரம் அடுத்தவரை புண்படுத்தக் கூடாது!'' என்று தெரிவித்துள்ளார்.

வழிபாட்டுத்தலங்களைச் சேதப்படுத்துவது, மற்றொரு மத நிகழ்வுகளில் வன்முறையை விளைவிப்பது, பிற மதத்தினரை இழிவாகப்பேசுவது, வழிபாட்டுத்தலங்களில் பயன்படுத்தும் பொருள்களை இழிவுபடுத்துவது, கடவுள்களின் புகைப்படங்களை கிழிப்பது, தீ வைத்து எரிப்பது, கடவுள்களின் படங்களை அவமதிப்பது போன்ற செயல்களும் அமீரகத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும். அமீரகத்தில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காட்சிகளை நடத்த அபுதாபி நீதித்துறை முடிவெடுத்துள்ளது.

புதியதாக கட்டப்பட்ட புனித பால் ஆலய திறப்பு விழா
புதியதாக கட்டப்பட்ட புனித பால் ஆலய திறப்பு விழா

மக்கள் மனிதநேயத்துடன் பிற மக்களை அரவணைத்து அன்புடன் நடந்துகொள்வது எப்படி? சமூகத்தில் சகிப்புத்தன்மையுடன் மற்ற மதத்தினரின் உணர்வுகளை மதித்து நடப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அமீரகத்தில் சகிப்புத்தன்மைக்கு என தனி அமைச்சகமே செயல்பட்டு வருகிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் தேசிய சகிப்புத்தன்மை திட்டங்கள் தொடர்ச்சியாக அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டை அமீரகம் சகிப்புத்தன்மை வருடமாக கடைப்பிடித்தது.

ஷார்ஜா, துபாய், அபுதாபி, ஆஜ்மான் உள்ளிட்ட நகரங்களை அடங்கிய அமீரகத்தில் 4,818 மசூதிகள் உள்ளன. சிவன், ஸ்வாமி நாராயண், விஷ்ணு கோயில்களும் உள்ளன. ஷீர்டி சாய்பாபா கோயிலும் அமீரகத்தில் உள்ளது. ஜெபல் அலி பகுதியில் குருநானக் குருத்வாரா இருக்கிறது. அமீரகத்தில் 10 முதல் 12 சதவிகித கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர். இதனால் 40 கிறிஸ்தவ ஆலயங்களும் இந்த நாட்டில் அமைந்துள்ளன.

ஜெபல் அலியில் உள்ள குருத்வாரா
ஜெபல் அலியில் உள்ள குருத்வாரா

இந்து மதம் உள்ளிட்ட பிற மத ஆன்மிகப்பெரியவர்கள் அமீரகம் சென்றால், அவர்களை அரசு விருந்தினராக ஏற்று மரியாதை அளிப்பதை அந்த நாடு வழக்கமாகக்கொண்டுள்ளது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், இந்த நாட்டில் வழிபாட்டுத் தலங்களை எழுப்பி சுதந்திரமாக வழிபாடு நடத்த அனுமதி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அபுதாபியில் கட்டப்பட்ட ஸ்வாமி நாராயண் கோயிலுக்கு அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் ஷயான் 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

நாட்டை ஆள்வோரும் மதத்தின் பெயரால் அரசியல் செய்ய நினைப்போரும் அமீரகத்தின் நடவடிக்கைகளைப் பார்த்தாவது தங்களைத் திருத்திக்கொள்வது அவசியம்.

அமெரிக்கா - இரான் சிக்கலும் இடையில் சிக்கிய இந்தியாவும்!