Published:Updated:

இந்தியாவுக்கு மட்டும் ஆஸி. யுரேனியம் விற்பதா?- பாக். கோபம்

விகடன் விமர்சனக்குழு

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு ஒப்புக்கொண்டதைப் போலவே தமக்கும் யுரேனியம் விற்பனை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

சீனா, ஜப்பான், தாய்வான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்து வரும் ஆஸ்திரேலியா, அணு ஆயுதல் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை வித்திருந்தது.

இந்த நிலையில், நீண்ட காலமாக இருந்த தடையை நீக்கி, இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்வதற்கு ஆஸ்திரேலியாவின் ஆளும் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

அக்கட்சியின் தேசிய கொள்கை மாநாட்டில் இந்தக் கொள்கை மாற்றத்துக்கான முடிவு, குறைந்த எண்ணிக்கையிலான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் நன்மையை கருத்தில் கொண்டே இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக கூறிய ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், ஆசிய நாடுகள் சக்தி மிக்கவையாக மாறிவரும் சூழ்நிலையில், இந்தியாவுடனான பலமிக்க உறவு ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியம் என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவின் இந்தத் தீர்மானத்துக்கு, இந்திய பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். இதனை, அந்நாட்டிலுள்ள இந்திய அமைப்புகளும் வரவேற்றன.

இந்த நிலையில், யுரேனியம் ஏற்றுமதி விஷயத்தில் இந்தியாவைப் போலவே தம்மையும் அணுக வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் மாலிக் அப்துல்லா இன்று நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் ஆஸ்திரேலியா, அதைப் போலவே யுரேனியத்தை பாகிஸ்தானுக்கும் விற்க முன்வர வேண்டும்," என்றார்.

மேலும், "அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. எனினும், அந்நாட்டுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. அதேவழியில், பாகிஸ்தானும் அணுகப்பட வேண்டும்," என்றார் அவர் அவர்.