Published:Updated:

மலேசியாவில் 'வணக்கம்' சொல்லி தமிழர்களை கவர்ந்த மோடி!

Vikatan Correspondent
மலேசியாவில் 'வணக்கம்' சொல்லி தமிழர்களை கவர்ந்த மோடி!
மலேசியாவில் 'வணக்கம்' சொல்லி தமிழர்களை கவர்ந்த மோடி!

கோலாலம்பூர்: இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று பிரதமர் மோடி, கோலாலம்பூரில் மலேசியவாழ் இந்தியர்கள் மத்தியில் பெருமிதத்துடன் கூறினார். அப்போது மோடி 'வணக்கம்' என தமிழில் பேசியது தமிழர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

மலேசியாவில் 'வணக்கம்' சொல்லி தமிழர்களை கவர்ந்த மோடி!

அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, கோலாலம்பூரில் உள்ள மலேசியக் கண்காட்சி அரங்கில், மலேசியவாழ் இந்தியர்கள் சுமார் 15,000 பேர் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

அப்போது தமிழில் 'வணக்கம்' சொல்லி மோடி தனது உரையைத் தொடங்கிபோது, அரங்கில் இருந்து மோடி, 'மோடி...மோடி' என்று முழக்கங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, ''இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது'' எனக் குறிப்பிட்டதுடன் சில வாக்கியங்களைத் தமிழில் பேசினார் மோடி.

மலேசியாவில் 'வணக்கம்' சொல்லி தமிழர்களை கவர்ந்த மோடி!

அதன்பின் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது, ''உங்களில் பெரும்பாலானோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை நான்கு எல்லைகளுக்குள் சுருக்கி விட முடியாது. உலகின் எந்த மூலையில் இந்தியர்கள் வசித்தாலும், அங்கும் இந்தியா இருக்கிறது. மலேசிய மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இங்குள்ள ரப்பர் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக, நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்ட இவர்கள், மலேசியாவிலேயே தங்கிவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தாலும், இந்தியா மீதான அன்பு உங்களிடத்தில் குறையவில்லை. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஜானகி ஆதி நாகப்பன், கேப்டன் லட்சுமி செகால் ஆகியோர் மலேசியாவின் வளர்ச்சியில் பங்காற்றினர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், காலனி ஆதிக்கத்தால், சேதப்படுத்தப்பட்ட இந்தியா, விடுதலை அடைந்த பிறகு, பிரிவினை என்ற பெயரில் துண்டாடப்பட்டது. அந்த நேரத்தில், இந்த மழலை தேசம் வளர்ச்சியடையுமா? என்ற கேள்விகள் எழுந்தன. வளர்ச்சியை விரும்பாத சிலரும் அப்போது இருந்தனர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்தியா தற்போது சாதாரணமாக ஒருங்கிணைக்கப்படவில்லை. இந்தியாவின் வலிமையே, அதன் பன்முகத்தன்மைதான்.

இந்தியாவில் பல்வேறு மொழிகளும், மதங்களும், கலாசாரங்களும் பிரதிபலிக்கின்றன. ஆனாலும், அவற்றையெல்லாம் கடந்து, ஒரே உணர்வோடு இங்கே கூடியிருக்கிறீர்கள். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றங்களும், அரசும் பாதுகாப்பு அளிக்கின்றன. நவீன பொருளாதாரத்தின் பயனாக, வறுமையை ஒழிக்க முடிந்தது. மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆயுள் காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. உலகில் வேறு எங்கேனும் சில மாதங்களிலேயே 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதா?

மலேசியாவில் 'வணக்கம்' சொல்லி தமிழர்களை கவர்ந்த மோடி!

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 18 மாதங்களில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, 7.5 சதவீதமாக உள்ள பொருளாதார வளர்ச்சி, எதிர்காலத்தில் மேலும் வளரும். இன்று உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதம். மக்களை ஈர்ப்பதற்காக, மதத்தின் பெயரை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். அவர்களால், அனைத்துத் தரப்பு மக்களும் பலியாகின்றனர். பயங்கரவாதத்தை மதத்தில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும்.

உலகின் எந்த நாடும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது; பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு நிதியுதவி செய்யக் கூடாது. ஆயுதங்கள் அளிக்கக் கூடாது. இணையதளம் மூலமாக, பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வது தடுக்கப்பட வேண்டும். நம் முன்னே மிகப் பெரிய சவாலாக உள்ள பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய கலாசார மையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மையம் எனப் பெயரிட்ட பிரதமர் மோடி, மலேசியவாழ் இந்திய மாணவர்களின் அறக்கட்டளைக்கு, 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அப்போது, திருவள்ளுவர், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.

முன்னதாக, கோலாலம்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷனில், 12 அடி உயர விவேகானந்தர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.