Published:Updated:

ஹைட்ரஜன் குண்டு சோதனை: வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்!

விகடன் விமர்சனக்குழு
ஹைட்ரஜன் குண்டு சோதனை: வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்!
ஹைட்ரஜன் குண்டு சோதனை: வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்!

சியோல்: ஹைட்ரஜன் வெடிகுண்டை வெடித்து சோதனை நடத்திய வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே நேற்று (6-ம் தேதி) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சாதாரண நிலநடுக்கமாகத் தான் இருக்கும் என மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம் என வடகொரியா அரசு அறிவித்தது.

ஹைட்ரஜன் குண்டு சோதனை: வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்!

வடகொரியாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியா

இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவருப் கூறுகையில், ''வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன. அந்த தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். சர்வதேச அளவில் அளவித்துள்ள வாக்குறுதிகளுக்கு மாறாக வடகொரியா மீண்டும் செயல்பட்டிருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது.

பிராந்திய அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து வடகொரியாவை தடுக்க வேண்டும்'' என்றார்.

அமெரிக்கா

''வடகொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுப்போம்'' என அமெரிக்கா கூறியுள்ளது.

ஜப்பான்

''வடகொரியா சோதனை நடத்தியிருப்பது நமது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்திற்கு எதிரான செயல். அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான சர்வதேச முயற்சிக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்'' என ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறியுள்ளார்.

தென்கொரியா

தென் கொரியா அதிபர் பார்க் குன் ஹே, ‘‘வடகொரியாவின் செயல் மிகவும் ஆத்திரம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது தென் கொரியாவின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக அமையும். அதேநேரத்தில், சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்’’ எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப், ‘‘இந்த செயல் வடகொரியா போக்கிரி அரசாக செயல்படுவதை காட்டுகிறது. இந்த விஷயத்தில் எங்களது கவலையை வடகொரியாவிடம் நேரில் பதிவு செய்வோம். ஐ.நா. கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் ஹேமண்ட், ‘‘வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பை இங்கிலாந்து எதிர்க்கிறது. வடகொரியா மீதான பொருளாதார தடையின் பிடி இறுக வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, ‘‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிரான செயல் இது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ எனக் கூறியுள்ளார்.

சீனா

‘‘குண்டுவெடிப்பு சோதனை குறித்த தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். அந்த நாடு, ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு குறித்து முன்கூட்டியே எந்தவொரு தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை’’ எனக் கூறியுள்ளது.