Published:Updated:

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!
பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

பிளாஸ்டிக்... ஒரு காலத்தில் வரமாக இருந்த இதன் தன்மைகள், பயன்பாடுகள் எல்லாமே இன்று பூமிக்கு சாபமாக மாறியிருக்கிறது. நீங்கள் இருக்கும் இடத்தினை கொஞ்சம் சுற்றிப்பாருங்கள். பிளாஸ்டிக் எந்த அளவிற்கு உங்களை சூழ்ந்திருக்கிறது என்பது தெரியும். நமது நிலத்தை பாதித்திருக்கும் இந்த பிளாஸ்டிக் குப்பைகள், புவியின் நீர்ப்பரப்பிலும் குவிந்து வருகின்றன.

2014 -ம் ஆண்டு மொத்தம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு, 311 மில்லியன் டன்கள். இதுவே 2050 ல் 1124 டன்களாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்றாலும் கூட, அதிகரித்து வரும் இதன் பயன்பாடுகள் கடலையும் மாசுப்படுத்தி வருகிறது.
இதுதொடர்ந்தால், 2050 ல் கடலில் மீன்களின் எடையை விட, குவிந்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது உலக பொருளாதார மன்றம்(WEF).

இன்று பசிபிக் பெருங்கடலில், கலந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டுமென்றால் 79,000 ஆண்டுகள் வேண்டுமாம். ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் முழுவதும் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றப்போகிறேன் என அறிவித்திருக்கிறார் 21 வயதாகும், நெதர்லாந்தை சேர்ந்த போயன் ஸ்லாட். இன்று உலகமே ஆச்சர்யத்துடன் பார்க்கும் இளம் தொழிலதிபர். உலகின் முன்னணி பத்திரிகைகள் கொண்டாடும்  சுற்றுச்சூழல் ஆர்வலர். ஸ்லாட்டின் இந்த திட்டத்தை 2015 ன் சிறந்த 25 கண்டுபிடிப்புகள் வரிசையில் இடம்கொடுத்து கௌரவித்தது டைம் பத்திரிகை. 2014 ல் இதற்காக, ஐக்கியநாடுகள் சபையின் சார்பில், ‘சாம்பியன் ஆப் தி எர்த்’ ஆக தேர்வு செய்யப்பட்டார். எப்படி இதை செய்யப்போகிறார் ஸ்லாட்?
 
எப்போது ஆரம்பித்தது இந்த பிரச்னை?


கடந்த நூற்றாண்டில் இருந்தே அதிகரித்து வந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடுகள், இந்த நூற்றாண்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்றைக்கு தொட்டதெற்கெல்லாம் பிளாஸ்டிக் என்ற நிலையில், அதன் மட்காத கழிவுகளை நிலத்தில் கொட்டி மண்வளத்தை கெடுத்தது போல, கடல்வளத்தையும் கெடுத்திருக்கிறோம். நாம் எங்கோ எப்போதே ஒரு மூலையில் வீசி எறிந்த பிளாஸ்டிக் கப் கூட, இன்றைக்கு ஏதாவது ஒரு கடலில் மிதந்துகொண்டிருக்கலாம். சாலைகளில் எரியும் பிளாஸ்டிக் குப்பைகள், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகள் மூலம் கடைசியாக கடலை வந்தடைகிறது. இத்துடன் பெரும் தொழிற்சாலை கழிவுகளும் உலகம் முழுக்க, கடலிலேயே கொட்டப்படுகின்றன. அத்தனை பெரிய கடலில் எத்தனை குப்பைகள் வீசினாலும் அது செரித்துக்கொள்ளும் என்ற மனப்பான்மை காரணமாக, பல கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

இப்படி நிமிடத்திற்கு ஒரு கன்டெய்னர் அளவு பிளாஸ்டிக்,  கடலில் இன்று கலக்கிறது. இப்படி வருடத்திற்கு 80 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கடலை வந்தடைகிறது. தற்போது உலகம் முழுக்க இருக்கும் மொத்த கடல் பரப்பில்,  குறைந்தது 5.25 ட்ரில்லியன் துண்டுகள் பிளாஸ்டிக்காவது கடலில் மிதக்கும் என்கின்றன ஆய்வுகள். ஆனால் இந்த குப்பைகள் எப்படி மண்ணில் மட்காமல் இருக்கிறதோ, அதைப்போலவே கடலிலும் நிரந்தரமாக தங்கிவிடும்.

இவை யாரை பாதிக்கின்றன?

“முதலில் பாதிக்கப்படுவது கடல்வாழ் உயிரினங்களே.. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் விதவிதமான நிறங்களில் இருக்கின்றன. எனவே இதனை உணவு என நினைத்து பெரும்பாலான பறவைகள் உண்டு விடுகின்றன. ஆல்பட்ராஸ் பறவைகள், ஆமைகள், மீன்கள் என எல்லாமே இவற்றை உண்டு விடுகின்றன. இப்படி வருடந்தோறும் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இந்த பிளாஸ்டிக் மாசினால் இறந்துபோகின்றன. அதே போல, பிளாஸ்டிக்கிற்கு இன்னொரு தன்மை உண்டு. புற்றுநோயை உண்டாக்கும் PCB,DDT போன்ற கடலில் மிதக்கும் வேதிப்பொருள்களையும் கிரகித்துக்கொள்ளும்.

இந்த  விஷமேறிய பிளாஸ்டிக் பொருட்களை முதலில் சிறிய மீன்கள் உண்டு விடும். பின்னர் சிறிய மீனை உணவாகக்கொள்ளும் பெரிய மீன்களின் வயிற்றிற்கும் இந்த வேதிப்பொருட்கள் செல்லும். பின்னர் கடைசியாக மீன்களை உண்ணும் மனிதர்களின் வயிற்றிற்கு இந்த வேதிப்பொருட்கள் வந்துசேரும். இப்படி நாம் வீசிய டன் கணக்கான பிளாஸ்டிக் நம்மிடமே திரும்ப வந்து சேருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளினால், வருடந்தோறும் பல நாடுகள் தங்கள் கடற்கரைகளை சுத்தம் செய்ய நிறைய செலவு செய்கிறது. சுற்றுலா வளம் பாதிக்கப்படுகிறது. இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதை தடுத்தாலும் கூட, இதுவரைக்கும் கடலில் இருக்கும் குப்பைகளே, மிகப்பெரிய ஆபத்தானது” என்கிறார் ஸ்லாட்.

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

எப்படி உருவானது இந்த திட்டம்?

இந்த திட்டத்தை 16 வயதிலேயே யோசித்திருக்கிறார் ஸ்லாட். “2011 ல் நான் கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருக்கும் ஒரு கடலில் நீந்தும் போதுதான் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தேன். நான் கடலுக்கடியில் பார்த்த மீன்களின் எண்ணிக்கையை விட, பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. உடனே நிறைய பேரிடம் இது குறித்து கேட்டேன். அனைவரும் பிளாஸ்டிக் நம்மை எதுவும் செய்யாது. அது அப்படியே கடலில்தான் இருக்கும் என்றார்கள். இப்படியே சேர்ந்துகொண்டே போனால் என்னாவது என்று அப்போதுதான் யோசித்தேன்.

என்னுடைய பள்ளியில் அறிவியல் புராஜெக்டாக கடலில் பிளாஸ்டிக் சுத்திகரிக்கும் திட்டத்தை கண்டுபிடித்து காட்சிக்கு வைத்தேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. பின்னர் டெல்ஃப்ட் பல்கலைக்கழத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நிறைய பேராசியர்களிடம், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களை அறிந்துகொண்டேன். அதன்படி, 2020 ல் கடலில் மொத்தம், 7.25 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கும். இவற்றின் எடை, 1000 ஈபிள் டவர்களுக்கு நிகரானது.

இத்தனை கழிவுகள் நமக்கு உணவளிக்கும் கடலில் மிதந்துகொண்டிருக்கின்றன என அறிந்ததும், கொஞ்ச கொஞ்சமாக என்னுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டே வந்து, 2013 ல் இதனை வெறும் சொல்லாக மட்டுமில்லாமல்,  செயலாக மாற்ற வேண்டுமென என்னுடைய கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு, “The Ocean Cleanup” என்னும் அமைப்பை உருவாக்கினேன்.” என்கிறார் ஸ்லாட்.

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

எப்படி சுத்தம் செய்யப்போகிறார்?

கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் தேங்கியிருப்பது கடல் சுழல்களில்தான். அதாவது கடலின் நீரோட்டம் வட்டவடிவமாக ஒரே இடத்தினை, பெரிய பரப்பளவில் சுற்றிவரும். இந்த இடமானது சுழல் அல்லது சுழி எனப்படும். உலகில் கண்டங்களுக்கிடையே, மொத்தம் 5 கடல் சுழிகள் இருக்கின்றன. அதில் அதிகம் குப்பைகள் சேர்வது வட பசிபிக் சுழியில்தான். இதனைதான் 2020 ல் சுத்தபடுத்தவிருக்கிறார் ஸ்லாட். தற்போதைய தொழில்நுட்பங்களை கொண்டு, கடல்களில் கப்பலை எடுத்துக்கொண்டு போய், வலைவீசி எல்லா பிளாஸ்டிக்கையும் அள்ளிவிட முடியும். ஆனால் அதற்காகும் செலவு பலகோடிகள்.

அதைவிட, இந்த உலகின் மொத்த கடலையும் சுத்தம் செய்ய, எத்தனை மனிதர்கள் வலைவீச வேண்டும்? என்பதை கற்பனை செய்துபாருங்கள். அதே போல, இன்னும் நிறைய தொழில்நுட்பங்கள் பிளாஸ்டிக்கை அகற்ற கண்டுபிடிக்க பட்டாலும், அவை செலவு மிகுந்தவை.  பூமி முழுக்க, பரந்துவிரிந்திருக்கும் கடலை சுத்தம் செய்ய இயலாதவை.

ஆனால் ஸ்லாட்டின் தொழில்நுட்பம் ‘கடல் தன்னைத்தானே சுத்தகரித்துக்கொள்ளும் முறை’. கடலின் சுழியில், ஓடும் நீரோட்டத்தின் நடுவில், V வடிவில் நீளமான பிளாஸ்டிக் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். இவை அசையாதவாறு, கடலின் அடிமட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்த சுழியினுள் மிதந்துவரும் பிளாஸ்டிக் குப்பைகள், இந்த தடுப்புகளால் தடுத்து நிறுத்தப்படும். அதே சமயம் கடல்வாழ் உயிரினங்களுக்கு, தடுப்பாக இல்லாமல், நீருக்கு அடியில் வழிவிடும். இப்படி கடலின் நீரோட்டம் ஒரு சுற்று முடியும் தருவாயில் அதில் மிதக்கும் மொத்த பிளாஸ்டிக்கும் , V வடிவ தடுப்பின் மையத்தில் தேங்கியிருக்கும்.

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

பின்னர் கப்பலை எடுத்துக்கொண்டு போய், எளிதாக இவற்றை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம். கடலில் மிதக்கும் 80 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் நிலப்பரப்பின் வழியாகவே கடலில் கலக்கிறது. இவற்றையும் தடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் புதிய கழிவுகள் கடலில் சேராமல் இருக்கும். ஏற்கனவே சோதித்துப்பார்த்த இந்த தொழில்நுட்பம் வெற்றியடையவே, இந்த திட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
 
எவ்வளவு செலவு ஆகும்?

இந்த திட்டம் மொத்தத்திற்கும் ஆகும் செலவு  2 கோடி மட்டுமே. முதலில் இந்த திட்டத்தினை பல தொழிலதிபர்களிடம், கொண்டு சேர்த்திருக்கிறார் ஸ்லாட். ஆனால் யாரும் உதவி செய்வதாக இல்லை. இதற்கிடையே, 2012 ல் இந்த திட்டம் பற்றி புகழ்பெற்ற, TEDx டாக்கில் உரையாற்ற யூ-டியூபில் வைரல் ஆனார் ஸ்லாட். பின்னர் பலரும் நன்கொடைகள் அளிக்க, தற்போது தேவையான பணம் சேர்ந்துவிட்டது என அறிவித்திருக்கிறார்.

ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பையை அகற்ற ஆகும் செலவு வெறும், 4.5 டாலர்கள்தான். இந்த முறையின் படி, பசிபிக்கின் பாதிக்கழிவுகளை, இன்னும் 10 ஆண்டுகளில் நீக்கிவிடலாம். அதே போல, பிளாஸ்டிக்கின் கெட்ட தன்மையாக இருந்த, வேதிப்பொருள்களை கிரகிக்கும் திறன் தற்போது, நன்மை அளிக்கும் என்கிறார் ஸ்லாட். காரணம் கடலில் இருக்கும் பெரும்பாலான வேதிப்பொருட்களை இந்த பிளாஸ்டிக் குப்பைகள் கிரகித்துக்கொள்ளும். அவற்றை நாம் நீக்கிவிட்டால், வேதிப்பொருட்களும் நீங்கிவிடுமே!

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

இதையெல்லாம் விட, இன்னொரு யோசனைதான் சபாஷ் போட வைத்திருக்கிறது. நாம் தற்போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் 5 சதவீதம் கூட, முழுமையாக மறுசுழற்சிக்கு செல்வதில்லை. ஆனால் இப்படி கடலில் இருந்து எடுக்கும், டன் கணக்கான பிளாஸ்டிக் குப்பைகளை ஆடைகளாக, பொருட்களாக மறுசுழற்சி செய்வதன் மூலம், 5 லட்சம் மில்லியன் டாலர்கள் வருமானமும் பெறமுடியும் என அறிவித்துள்ளார் ஸ்லாட். எனவே இது வணிகரீதியாகவும் வெற்றியடையும் தொழில்நுட்பம். இந்த பணத்தைக்கொண்டு, மேலும் சுற்றுசூழல் சீரமைப்புக்கு செலவிடலாம்.

100 சதவீதம் சாத்தியமா?


இந்த திட்டத்தைக்கொண்டு, 99.85 சதவீதம் கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நாம் அகற்றலாம் என்கிறார் ஸ்லாட். ஆனால் “இவை கடலின் மேல்பகுதியில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே, சுத்தம் செய்யும். கடலின் அடி ஆழத்தில் எண்ணற்ற, குப்பைகள் இருக்கின்றன. அதே போல கண்ணுக்கு தெரியாத, சிறிய துகள்கள் எக்கச்சக்கமாக இருக்கும்போது, அவற்றை இந்த தொழில்நுட்பம் என்ன செய்யும் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் சிலர். “பெரிய பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிவிட்டலே, சிறிய துகள்கள் படிவதும் தடுக்கப்படும்.கடலின் அடி ஆழத்தில் இருக்கும் பிளாஸ்டிக் எண்ணிக்கையை விட, மேற்பரப்பில் இருக்கும் குப்பைகளின் அளவு அதிகம்” என அவர்களுக்கு பதில் அளிக்கிறார் போயன் ஸ்லாட்.

பசிபிக் பெருங்கடலை சுத்தம் செய்யும் 21 வயது இளைஞர்..!

தற்போது தன்னுடன், 25 பணியாளர்களையும் 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் கொண்டு, திட்டத்தினை கொஞ்சம் கொஞ்சமாக சோதித்து, குறைகளை மேம்படுத்திவருகிறார்.  2020 ல் ஸ்லாட் செய்யப்போகும் பிரம்மாண்ட, பசிபிக் கடல் சுத்திகரிப்பை உலகம் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த கட்டுரை உங்களை திருப்திப்படுத்தியிருந்தால்  போயனின் முயற்சிக்கு நீங்களும் உதவலாம். இதற்காக நீங்கள் நெதர்லாந்து செல்லத்தேவையில்லை. கடைக்கு செல்லும்போது, கடைக்காரர் பிளாஸ்டிக் கவர் கொடுத்தால் அதை வாங்காமல் வந்தாலோ, அதனை அசட்டையாக சாலையில் வீசாமல் இருந்தாலோ, கூட போதும். போயனுக்கு மட்டுமல்ல, கடலன்னைக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகவும் அது இருக்கும்!

-  ஞா.சுதாகர்

அடுத்த கட்டுரைக்கு