அமெரிக்காவின் சுதந்திர தினவிழா ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் சுதந்திர தினவிழா அணிவகுப்பு அமெரிக்காவின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஐலேண்ட் பார்க் பகுதியில் 246-ம் ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பு தொடங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பதற்றத்தில் மக்கள் அலறியடித்து ஓடியதில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்க முயன்றவரை மடக்கிப் பிடித்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், ``சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ராபர்ட் இ க்ரிமோ (Robert E Crimo) (22) எனத் தெரியவந்திருக்கிறது. அவர் எதற்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என விசாரித்துவருகிறோம். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர். விசாரணைக்குப் பிறகு இன்னும் பல தகவல்கள் தெரியவரும்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``அமெரிக்காவில் துப்பாக்கி தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரப் போராடுவேன். அதை கைவிடப்போவதில்லை. இந்த சுதந்திர தினத்தன்று அமெரிக்க சமூகத்துக்கு மீண்டும் வருத்தத்தை ஏற்படுத்திய புத்தி இல்லாத துப்பாக்கிச்சூட்டால் நானும் என் மனைவியும் வருத்தமடைந்தோம். இனி துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச சூட்டில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் பலியானார்கள். இதையடுத்து துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா-வுக்கு ஒப்புதல் அளித்து ஜோ பைடன் கையெழுத்திட்ட சில நாள்களிலேயே மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.