Published:Updated:

6 வயதுக் குழந்தையைக் கைது செய்த அதிகாரி; மன்னிப்புக் கேட்ட அமெரிக்க காவல்துறை !

காயா ரோல், பள்ளியில் அடம்பிடித்து ஆசிரியரை உதைத்த காரணத்துக்காக, 'ஒருவரைத் தாக்குதல்' எனப் பொருள்படும் 'பேட்டரி' எனும் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது.

காயா ரோல்
காயா ரோல் ( Photo:www.miamiherald.com )

அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லோண்டோ பகுதியில் உள்ளது லூசியஸ் அண்டு எம்மா நிக்சன் பள்ளி. இங்கு படிக்கும் சிறுமியான காயா ரோல், பள்ளியில் அடம்பிடித்து ஆசிரியரை உதைத்த காரணத்துக்காக, 'ஒருவரைத் தாக்குதல்' எனப் பொருள்படும் 'பேட்டரி' எனும் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டது, பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இவரோடு மற்றொரு 6 வயதுக் குழந்தையும் கைதான தகவல் வெளியாகியுள்ளது, அக்குழந்தையின் பெயர், பாலினம், கைதுக்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.

லூசியஸ் அண்டு எம்மா நிக்சன் பள்ளி
லூசியஸ் அண்டு எம்மா நிக்சன் பள்ளி
Photo: edition.cnn.com

பள்ளியில், பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்களைத் தடுத்தல் ஆகிய பணிகளுக்காக, அமெரிக்க நீதித்துறை ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு காவலரை நியமித்திருக்கும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்புக்காக மற்ற போலீஸ் அதிகாரிகளின் அனைத்து அதிகாரங்களுடனும் செயல்படும் இந்தக் காவலர்கள் School Resource Officer என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்ற பள்ளியில் காவல் பணியிலிருந்த இருந்த டென்னிஸ் டர்னர் என்ற காவலர், பள்ளியில் அடம் பிடித்துக்கொண்டிருந்த சிறுமியை, ஆசிரியரை எட்டி உதைத்த காரணத்துக்காகக் கைது செய்திருக்கிறார். அதிலும், சிறுமியின் கையைப் பிளாஸ்டிக் டேக் கொண்டு பிணைத்து, போலீஸ் காரில், சிறார் காவல் நிலையம் (Juvenile Assessment Center) வரை அழைத்துச் சென்றிருக்கிறார், அங்கு குற்றவாளிகளுக்கு எடுப்பது போன்றே பெயர்ப்பலகை தாங்கி நிற்கும் சிறுமியின் புகைப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. அவரது கைரேகை பிரதிகளும் எடுக்கப்பட்டுள்ளன. பின்னர் இத்தகவல், சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மற்றொரு குழந்தையைக் காவல் நிலையத்துக்கு அவர் அழைத்துச் சென்றாரா எனத் தகவல்கள் தெரியவில்லை.

டென்னிஸ் டர்னர்
டென்னிஸ் டர்னர்
Photo: nypost.com

சிறுமி காயா ரோலின் அடையாளத்தை வெளியிட ஒப்புக்கொண்ட அவரின் பாட்டி கிர்க்லேண்ட், இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `Sleep Apnea' எனும் தூங்கும் பிரச்சனையால் அவதியுறும் என்னுடைய பேத்தி, அதற்காக உட்கொள்ளும் மருந்துகளின் விளைவால், சமயங்களில் இப்படி அடம்பிடிப்பது உண்டு. அதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொன்னதும் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன், எந்த 6 வயதுக் குழந்தைக்கும் இதைப் புரிந்துகொள்வதும், விளக்குவதும் கடினம்" என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர் பணியிலிருந்து நீக்கப்படுவதாக, ஒர்லோண்டோவின் தலைமை காவல் அதிகாரி ரொலோன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். "ஒரு 6 வயதுக் குழந்தை கைகள் பிணைக்கப்பட்டு போலீஸ் காரில் ஏற்றப்பட்டதை நினைத்துப்பார்க்கவே எங்களுக்குக் கடினமாக உள்ளது; இது மன்னிக்க முடியாதது. அவரை நாங்கள் பணியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை, அச்சிறுவர்களின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்தச் சிறுமி மீதான வழக்கு விளக்கிக்கொள்ளப்படும் என்றும், அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபுளோரிடா மாகாணத்தில் சிறு வயதுக் குழந்தைகள் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

ஃபுளோரிடா மாகாணத்தில், குற்றங்களில் கைது செய்யப்படுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு என்பது இல்லை, எனவே பொதுவாக அடித்துக்கொண்டு குழந்தைகள் சண்டையிட்டால், சற்று வன்முறை மனநிலையோடு ஒரு குழந்தை செயல்பட்டால், அவர்கள் மீது வழக்கு பதியலாம். ஆனால், அவை எல்லாம் எழுத்தில் மட்டுமே. பொதுவாக இப்படியான குழந்தைகளுக்குக் கூடுதல் கவனத்துடன் மனநல ஆலோசனை போன்ற உதவிகள் செய்துகொடுக்கப்படுகிறது. ஆனால், சிறுமி காயா ரோலின் போன்று எந்தக் குழந்தையும் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்கெல்லாம் அழைத்துச் செல்லப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தை அடுத்து சிறார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்று அங்கு மக்கள் போர்க்கோடி உயர்த்தியிருக்கிறார்கள்.