Published:Updated:

`கொதிக்கும் அண்டார்டிகா; உருகும் பனிப்பாறைகள்!’ - வரலாற்று உச்சத்தைத் தொட்ட வெப்பநிலை

அண்டார்டிகா
அண்டார்டிகா ( Twitter/@AntarcticReport )

அண்டார்டிகா வரலாற்றில் நேற்று முதல்முறையாக உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகா, புவியின் தென் முனையில் உள்ள ஒரு உறைந்த கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவது குறைவாகவே இருக்கும், இதன் காரணமாக மொத்த கண்டமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து காணப்படும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. உலகின் 70% நன்னீர் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. புவி வெப்ப மயமாதலால் இங்குள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அண்டார்டிகா கண்டத்தின் வரலாற்றில் நேற்று பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அண்டார்டிகா
அண்டார்டிகா

அமெரிக்காவின் நியூயார்க், கோடைக்காலங்களில் கடுமையான வெப்பத்தைச் சந்திக்கும் ஒரு நகரம். நியூயார்க்கைவிட அண்டார்டிகாவில் நேற்று அதிக வெப்பநிலை நிலவியுள்ளது என்ற விஷயத்தை நம்ப முடிகிறதா? ஆம், நேற்று நியூயார்க் நகரில் 39 டிகிரி ஃபாரன்ஹீட் அண்டார்டிகாவில் 65 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன. அண்டார்டிகா வரலாற்றிலேயே இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது இதுவே முதல்முறை. வரும் காலங்களில் இந்த அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் உள்ள டிரினிட்டி தீபகற்பத்தில் இருக்கும் எஸ்பெரான்சா பேஸ் (Esperanza Base) பகுதியில் உள்ள அர்ஜெண்டினா ஆய்வு மையம் இந்த வெப்பநிலையைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெப்பநிலையை மீண்டும் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டியிருந்தாலும் இது ஒரு சாத்தியமான வெப்பநிலை பதிவு என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதே எஸ்பெரான்சா பேஸ் பகுதியில் 2015-ம் ஆண்டு 63.5 டிகிரி வெப்பநிலை பதிவாகியிருந்தது, அதன் பிறகு தற்போது அதிகரித்துள்ளது.

அண்டார்டிகா
அண்டார்டிகா
Twitter/@AntarcticReport

“அண்டார்டிகாவின் இந்த வெப்பநிலை பதிவு எந்த ஒரு ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த ஒன்றுதான். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரும் மாற்றம் இருந்தாலும் கண்டங்களில் வெப்பநிலை உயர்வு என்பது மிகவும் அடிப்படையான விஷயமாகிவிட்டது” என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் எரிக் ஸ்டெய்க் கூறியுள்ளார்.

உலகிலேயே அண்டார்டிகாதான் வேகமாக வெப்ப மயமாகும் கண்டமாக உள்ளது. இதனால் கடந்த 50 ஆண்டுகளில் டிரினிட்டி தீபகற்பத்தில் மட்டும் 87% பனிப்பாறைகள் உருகியுள்ளதாகவும் அதிலும் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீபகற்பத்துக்கு வெளியே, அண்டார்டிகா ஒட்டுமொத்தமாகக் காலநிலை மாற்றத்தின் அதிக விளைவை எதிர்கொள்கிறது.

வெப்பநிலை
வெப்பநிலை

கடந்த 2019-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரு பெரிய பனிப்பாறை உருகுவதைக் கண்டதாகச் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் பனிப்பாறை உருகுவது பெரிய பிரச்னை இல்லையென்றாலும் அதன் அளவு அசாதாரணமாக அதிகரித்து வருகிறது. வெப்பநிலை உயர்வு என்பது அண்டார்டிகாவில் மட்டுமல்ல பொதுவாக உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அண்டார்டிகாவில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் முன் எப்போதும் இல்லாதது.

பின் செல்ல