Published:Updated:

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -2 )

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -2 )
மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -2 )

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -2 )

ந்த ஆழத்தில் பிராண வாயு இல்லாமலும், அதிகபட்ச அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டும் உயிர்கள் வாழ்வது கடினம் என்றும் உயிரியலாளர்கள் எண்ணினார்கள். அவர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக அந்த ஆழத்திலும் ஜெல்லி மீன்களும், சிறிய தட்டை வடிவ மீன்களும் நீந்திக் கொண்டு இருந்ததை இருவரும் கண்டார்கள். சுமார் இருபது நிமிடங்கள் மட்டுமே அவர்கள் அங்கு செலவிட்டார்கள். பின்னர் வெற்றிகரமாக மேலே இருந்த கப்பலை அடைந்தனர்.

இவர்களுக்குப் பிறகு, சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை மரியானா ஆழ்கடலில் இறங்கி ஆராய எவரும் துணியவில்லை. ஆனால் 2005 முதலே அதற்காகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வந்தார் ஜேம்ஸ் கேமரூன். பலமுறை ஆழ்கடலுக்குள் மூழ்கி, பயிற்சி பெற்று வந்தார்.

ஆழ்கடலுக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பு வேறு எவருக்கும் இல்லாதது என்று சொல்லலாம். ஏனெனில், 1989-லேயே அபைஸ் எனும் ஆழ்கடல் பயணம் குறித்த படத்தை அவர் எடுத்திருந்தார். இதுவரை அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் உடனே தேடிப் பார்த்து விடுங்கள். ஆழ்கடலில் விசித்திர உலகம் ஒன்று இயங்குவதாகப் படத்தை அவர் முடித்திருந்தார்.

அப்போது முதல் 80 முறை (பின்னர் டைட்டானிக்குக்காகவும்) ஆழ்கடல் பயணம் மேற்கொண்டார்.

2012-ம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் 24 அடி நீளமும் 12 டன் எடையும் கொண்ட, 'ஆழ்கடல் சேலஞ்சர்' எனும் நீர்மூழ்கியில் தனியொருவனாக பயணித்தார். இந்த நீர்மூழ்கியினை ரோன் ஆலம் என்பவரின் உதவியோடு அவரே வடிவமைத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட இந்தக்கலம், அறிவியல் சோதனைக்குத் தேவையான உபகரணங்களுடன் 3டி கேமராவும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சோதனை செய்வதற்காக மண்ணை அள்ளும் மின்கைகளும் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை உள்ளிருந்தபடியே அவரால் இயக்க முடியும். நீர்முழ்கியின் உள்ளே அவர் அமர்ந்து செயல்படும் இடம் வெறும் மூன்றரை அடி அகலம்  உடையதாகவே  இருந்தது. வெளிப்புறம் இரும்பால் ஆன 64 மில்லி மீட்டர் அளவுக்கான இடம் மட்டுமே இருந்தது.

இந்த நீர்மூழ்கியை செங்குத்தாக மட்டுமே பயணிக்கும்படி வடிவமைத்திருந்தனர். ராக்கெட்டுகளில் உபயோகிக்கக்கூடிய thrusters மூலம், நெக்கித் தள்ளுதல் முறையில் தரைத்தளத்தில் பயணிக்க இயலும். இதனுடன் நிலைப்படுத்துவதற்காக 500 கிலோ எடை இணைக்கப்பட்டிருந்தது. அது விடுவிக்கப்படும்போது கலம் மேலே எழும்பும். ஒருவேளை அது வேலை செய்யத் தவறினால் மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

கேமரூன் ஏற்கனவே 27000 அடி வரை இறங்கியிருந்தார். மேலும், பல சோதனை பயணங்களுக்குப் பிறகு, வெற்றிகரமாக மரியானா அகழியின் சேலஞ்சர் பள்ளத்தில் இறங்கினார். இரண்டரை மணி நேரத்தில் 35,756 அடி ஆழம் தொட்டவுடன், அவர் கடலின் மேற்பரப்பில் இருந்தவர்களிடம் உரையாடியதை, “ 'இது ஒரு மனிதனின் சிறிய காலடி, ஆனால் மனித குலத்துக்கோ பெரும் பாய்ச்சல்'  என்ற நீல் ஆம்ஸ்ட்ராங் பேச்சைப்போல நான் தயார் செய்திருக்கவில்லை. நான் பேசியதெல்லாம் 'நண்பர்களே, 35756 அடிகள் தரையைத் தொட்டு விட்டேன். உயிர்காக்கும் கருவிகள் வேலை செய்கின்றன. அனைத்தும் நல்ல முறையில் இயங்குகின்றன' என்பது மட்டுமே." என  நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

கடல் நீரின் அழுத்தத்தை தாங்கும் திறனை சோதிக்க, அவருடன் ஒரு ரோலெக்ஸ் கடிகாரமும் பயணித்தது. அந்த அதிகபட்ச நீரின் அழுத்தத்திலும் அது நன்றாக வேலை செய்தது. ரோலெக்ஸ் நிறுவனமும் இந்த முயற்சிக்கு நிதியுதவி செய்திருந்தது. முன்னர் மரியானா அகழிக்கு பயணித்த டான் வால்ஷ், பிக்கார்டும் கூட தங்களுடன் ரோலெக்ஸ் கடிகாரத்தை எடுத்துச் சென்றிருந்தனர்.

ஏற்கனவே சொன்ன உந்தித் தள்ளும் முறையில் ஒரு மைல் தொலைவு பயணித்தார் கேமரூன். அந்த பயணத்தின் வழியே சில ஆழ்கடல் விலங்கினங்களை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். மண்ணை அள்ளும் இயந்திரக்கை மூலம் மண் மாதிரிகளை சேகரித்தார். மரியானா அகழியில் ஐந்து மணி நேரம் இருந்து ஆராய திட்டமிட்டிருந்தார். இயந்திரக் கைகளின் எண்ணெய்க் கசிவின் காரணமாக,  வெளிப்புறக் கண்ணாடி மறைத்ததால் கேமரூனால் தொடர்ந்து எதையும் பார்க்க இயலவில்லை. இது தவிர நெக்கித் தள்ளும் அமைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டே வந்து,  கடைசியில் முழுவதுமாக நின்று விட்டது.

இதனால் மீதமிருக்கும் நேரத்தில், அறிவியல் ஆராய்ச்சிக்கான எந்த விதமான பணியிலும் ஈடுபட இயலாது என்ற சூழ்நிலையில், திரும்பச் செல்லும் முடிவெடுத்தார்.  இதன் காரணமாக அவரால் அடியில் இரண்டரை மணி நேரங்களே செலவிட முடிந்தது. 'இது ஒரு புதிய உலகிற்கு சென்று வந்தது, போலிருந்தது' என்று தம் பயணத்தைப் பற்றி கேமரூன் குறிப்பிடுகிறார்.

தவிர, அவரது வாழ்நாள் சாதனையாக இந்தப் பயணம் கருதப்படுகிறது. இந்த ஆழ்கடல் பயணம் ஒரு ஆவணப்படமாக நேஷனல் ஜியாகிராபிக் சானலில் வந்துள்ளது.

தற்போது அவர் எடுத்து வரும் அவதார் படத்தின் அடுத்த பாகங்களுக்காகத்தான் மரியானா அகழிக்குள் வந்தார் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. அவதார் பாகம் இரண்டில்,  பண்டோரா கிரகத்தின் கடல்சார் உயிரினங்கள் குறித்து அதிகம் இருக்கும் என்று சூசகமாக அவர் தெரிவித்திருக்கிறார்.     

கீழே உள்ள படத்தில், கேமரூன் சென்று வந்த கலமும் (Deepsea Challenger), டான் வால்ஷ் மற்றும் பிக்கார்டு சென்று வந்த கலமும் (Bathyscape Trieste) ஒன்றாக காட்டப்பட்டுள்ளன.

ட்ரெயிஸ்டி தற்போது அமெரிக்க அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. கேமரூன் பயணித்த கலமானது வேறொரு நிறுவனத்திற்கு தானமாக வழங்கப்பட்டு விட்டது. அந்த கலத்தை எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட சிறு விபத்தில், அது பலத்த சேதமடைந்து விட்டது.

கடந்த சில மாதங்களாக ஒக்கியனோஸ் எக்ஸ்ப்ளோரர் எனும் கப்பல் மூலம் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் நிறைய புதிய உயிரினங்கள் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மரியானா அகழி குறித்தும்,  ஆழ்கடல் உலகத்தில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பது குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள், அறிவியலாளர்கள்.

மிகவும் ஆழமான பகுதிகளில் காணக் கிடைக்கும் வேறு சில உயிரினங்கள்:

மரியானா அகழியினுள் 47 மைல்கள் தொலைவுக்கு நான்கு பாலங்கள், பாலம் போன்ற அமைப்புகள் இருப்பதைக் கூட கண்டறிந்திருக்கிறார்கள். இவை 6600 அடிகள் உயரத்திலிருக்கின்றன. அதில் 1980-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாலம், சேலஞ்சர் படுகுழிக்கு மேல் இரண்டரை கிலோமீட்டர் உயரத்தில் இருக்கிறது.

ஆழ்கடலில் நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்றும், அதன் மூலம் உயிர்கள் வாழும் சூழல் நிலவுகின்றது என்றும் கூறப்படுகிறது. தவிர மில்லியன் வருடங்கள் பழமையான பாறைகள், நீருடன் வினை புரிவதால் உண்டாகும் வாயுக்கள், தனிமங்கள் மூலம் உயிர்கள் உருவாவதாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மரியானா அகழியினுள் நிலவும் கடும்குளிருக்கு நேர் எதிரான ஒரு விஷயமும் அங்கு இருக்கிறது. அவை சூடான காற்றை வெளியிடும் குழிகள். இவைகள் 450°C வெப்பமான சூடான காற்றை வெளியிடுகின்றன. அதிசயத்தக்க விஷயமாக இந்த நீர் கொதிப்பதில்லை. அங்கு இருக்கும் அழுத்தம் நீரின் கொதிநிலையை குறைத்து விடுகிறது. இவை, மூலம் தாதுக்களும் வெளியாகின்றன.

சேற்று எரிமலைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மரியானா பள்ளத்திலும் சேற்று எரிமலைகள் காணப்படுகின்றன. சேற்று எரிமலைகள் என்பவை, எரிமலைக்குழம்பாக புதைச்சேற்றை வெளிப்படுத்துவன. நமது அந்தமான் தீவுகளிலும் இவ்வகை புதைச்சேற்று எரிமலைகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் வெளிவரும் வாயுக்களால் உயிர் வாழும் சூழல் உருவாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கடல்களின் சராசரி ஆழங்கள்

ஆழ்கடலுக்குள், அடர்த்தியான கடல் நீரைத் துளைத்துக்கொண்டு மிகத்துல்லியமாக ஆழத்தைக் கணக்கிட்டு விட முடியாது. நூறு மீட்டர்கள் வரை வேறுபாடு இருக்கலாம். உலகெங்கும் உள்ள கடல்களின் சராசரி ஆழங்கள் வருமாறு...

ஆர்ட்டிக் பெருங்கடல்: 3400 அடி.  இதன் ஆழமான பகுதி 17881 அடியாகும். இந்தியப்பெருங்கடல்: 12740 அடி, இதன் ஆழமானப் பகுதி 25344 அடி ஆழமானது. அட்லாண்டிக் பெருங்கடல்: 12254 அடி, இதன் ஆழமானப் பகுதி 28374 அடியாகும். பசிபிக் பெருங்கடல்: 13740 அடி. உலகின் ஆழமானப் பகுதி, பசிபிக் பெருங்கடலில்தான் உள்ளது. அதன் ஆழம் 36200 அடி!

ஆயிரம் கோடி உயிரினங்கள்

மரியானா அகழியின் ஆள்கூறுகள்: 11"21' வடக்கு அட்ச ரேகை மற்றும் 142" 12' கிழக்கு  தீர்க்க ரேகை.  மரியானா அகழிக்கு அருகாமையிலிருக்கும் நாடு சுமார் முந்நூறு மைல்கள் தொலைவிலிருக்கும் சிறிய நாடான குவாம். இந்த குவாம், முதலில் ஸ்பெயினின் காலனியாக இருந்து, அமெரிக்காவின் பிடிக்கு வந்து, பின்னர் ஜப்பானின் கைக்குப் போனது. (பியர்ல் ஹார்பர் நினைவிருக்கிறதா?) இரண்டாம் உலகப்போரின் போது மீண்டும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வந்தது. மரியானா தீவுகள் ஜப்பானுக்கு தெற்கேயும், பப்புவா நியூகினியா தீவுகளுக்கு வடக்கேயும் பிலிப்பைன்சுக்கு கிழக்கேயும் அமைந்துள்ளன. மரியானா அகழியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

இந்தப்பூமியில் பத்து நிகற்புதம் உயிரினங்கள் வாழ்கின்றனவாம். அவற்றில் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை அற்புதம். (என்ன வார்த்தைகள் சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்கிறீர்களா? பத்து நிகற்புதம் மற்றும் அற்புதம் என்றால் என்ன என கூகுளாண்டவரைக் கேட்கவும்)

                                                                                                                                                      - ப்ரேம்குமார்

அடுத்த கட்டுரைக்கு