Published:Updated:

இவ்வளவு ஜாலியாக, ஓர் அமெரிக்க அதிபரா! #HappyBirthdayObama

இவ்வளவு ஜாலியாக, ஓர் அமெரிக்க அதிபரா! #HappyBirthdayObama
இவ்வளவு ஜாலியாக, ஓர் அமெரிக்க அதிபரா! #HappyBirthdayObama

இவ்வளவு ஜாலியாக, ஓர் அமெரிக்க அதிபரா! #HappyBirthdayObama

6 அடி, 2 அங்குல உயரம். ஒல்லியான உடல்வாகு, இவரது பேச்சு எல்லாரையும் வசியப்படுத்தும், இவர் பேசினால் தன்னம்பிக்கை ததும்பும். இப்படிப்பட்ட புகழுக்கு உரிய ஒருவர் நிச்சயம் ஒரு பேராசிரியராக இருக்க வேண்டும் என்றால் ஆம் இவர் பேராசிரியர் தான். 12 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட  பாரக் ஹூசைன் ஒபாமா தான் அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்த ஒபாமா!  தொடர்ந்து 12 ஆண்டுகள் ‘சிறந்த பேராசிரியரா’கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்!

அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார். ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றார். சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றபோது அறிமுகமான மிஷேலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மலியா, நடாஷா (எ) சாஷா என்று இரண்டு தேவதைகளுக்கு தந்தையானார்.  1997ம் ஆண்டு இலினோய்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினரானார். அங்கு ஹெல்த் கேர் சட்ட திருத்தங்களை கொண்டு வந்தார். 2004ம் ஆண்டு இந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிட்டார். அதிலும் வெற்றி பெற்ற ஒபாமா 2008ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்.

அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒபாமா 2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நான் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவ‌ன் என்றெல்லாம் கூறாமல் சாமானிய அமெரிக்கர்களின் பிரச்னைகளான ஊதிய உயர்வு, மருத்துவச் செலவு, கல்விவசதி போன்றவற்றை மேம்படுத்துவேன். மாற்றம் வேண்டும் அதனை ஏற்படுத்தும் நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று உரை மூலம் தன்னை மக்களின் அதிபராக நிலைநிறுத்தி கொண்டார் ஒபாமா.

 இன்று வரை தேர்தல் பிரசாரங்களில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற.  ஹோப், எஸ் வீ கேன் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில்தான் முதலில் அறிமுகமானது.  பிரசார நேரங்களில் ஈராக் போரை ஆதரித்து பேசிய குடியரசு கட்சியை, ‘அமெரிக்கா போரை விரும்பும் நாடு அல்ல!’ என்று ஒற்றை வரியில் காலி செய்தார். தொடர்ந்து இவரின் பேச்சுகளில் நம்பிக்கை அதிகரித்தது மக்களுக்கு. அப்படித்தான் அமெரிக்காவில் பிறக்காத, கருப்பர் இன தலைவர் ஒருவர் அமெரிக்க அதிபரானார். ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வாஷிங்டனில் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டார்கள். கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்றபோது, 50 ஆயிரம் பேர் நேரில் கூடியதே அதுவரையிலான சாதனையாக இருந்தது.

ஒபாமா அதிபராக பதவியேற்றதும் பிரசாரங்களில் சொன்ன விஷயங்களை படிப்படியாக செய்யத் துவங்கினார். ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகளை திரும்ப பெற்றது;  ஒபாமா ஹெல்த் கேர் என்ற மருத்துவ வசதிகளை வழங்கியது; அனைத்து நாடுகளுடன் நல்ல நட்புறவு என்பதில் துவங்கி பருவ நிலை மாற்றத்துக்கான முதல் குரலை எழுப்பி உலகையே பருவநிலை மாற்றத்துக்காக முக்கிய முடிவுகளை எடுக்கச் செய்தது வரை, பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.

நான்கு வருடங்கள் அதிபராக அமெரிக்கர்களின் மனதில் நன்மதிப்பை பெற்றார் ஒபாமா, அமெரிக்கர்களின் மனதுக்கு மிகவும் பிடித்தவர் ஒபாமா என்பது தான் அவரை 2012ம் ஆண்டு தேர்தலில் அவரை மீண்டும் அதிபராக்கியது.  அந்தத் தேர்தலை நம்மிலிருந்து துவங்குவோம் என்ற வீடியோவோடு துவங்கினார் ஒபாமா.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவின் பங்கு அளப்பரியது. 2008ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் மாநாட்டில் மிச்சேல் ஆற்றிய, ''ஏன் என் க‌ணவரை அதிபராக்க வேண்டும்?'' என்ற உரை அமெரிக்க தேர்தல் பிரசார வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.  2012ம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராக்கப்பட்ட போதும் ''ஒரே நாடு, ஒரே மக்கள். கருப்பு, வெள்ளை பேதம் இங்கு இல்லை'' என்று முழங்கினார் ஒபாமா.

ஒபாமா விமர்சனங்களுக்கு சளைக்காத நபர். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தைரியமாக எதிர் கொண்டு தனது செயல்களால், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஒபாமா, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். ஆனால், நியூஸ் வீக் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என 12 சதவிகித அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இவரது கைக்கடிகாரம் மூலம், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அவருக்கு ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று ஒரு தகவல் உண்டு.

'ஒபாமாவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது' என்று குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, 'உண்மையான அன்புக்காக சிறு வயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!' என்று இவர் தனது சிறு வயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டது அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் இவருக்கு பெரிய அளவில் மதிப்பை ஏற்படுத்தியது.

2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. "அந்தப் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... இந்தப் பரிசை அளித்ததன் மூலம் அமெரிக்கர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி. பதவி ஏற்ற ஒன்பதே மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது!' என தலையங்கம் எழுதியது அமெரிக்காவின் மனசாட்சியான 'தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகை.

அமெரிக்காவை நடுங்க செய்த 9/11 தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனை வீழ்த்தி, சர்வதேச தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவால் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பதையும் உணர்த்தினார் ஒபாமா.

ஒபாமா  அமெரிக்க அதிபர் என்பதை தாண்டி அன்பானவர் என்பதற்கு பல உதாரணங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பூங்காக்களில் அமெரிக்க சிறுவர்களுடன் உரையாடுவது,  கடிகாரத்தில் வெடிகுண்டு தயாரித்தான் என்று தவறாக கணித்து கைது செய்யப்பட்ட‌  சிறுவனை ‘அஸ்ட்ரானமி நைட் டின்னரு’க்கு அழைத்து, ‘நீ எப்போது வேண்டுமானாலும் வெள்ளை மாளிகைக்கு வரலாம்!’ என அன்பு காட்டியது என்று ஒபாமாவின் இன்னோரு முகத்தைக் காட்டும் செயல்கள் பல. அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஒபாமா வெள்ளை மாளிகைக்குள் செய்த சேட்டைகளின் புகைப்படத்தொகுப்பும் நெட்டில் வைரல். ‘அமெரிக்க அதிபரானால் என்ன நானும் ஒரு மனிதன்தான்’ என்று  இருந்த இவரது இந்தக் குறும்புகள் இளைஞர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளியது.

இப்போதும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தி, ‘ ட்ரம்ப் இந்த பதவிக்கு தகுதியற்றவர். உங்களுக்கு யார் அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவார்களோ அவருக்கு வாக்களியுங்கள்!’ என கூறுகிறார். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதைக்கூட நகைச்சுவையான வீடியோ மூலம் பதிவு செய்கிறார் பராக் ஒபாமா.

நேற்று நடந்த கூட்டத்தில் கூட சிங்கப்பூரின் நான்கு மொழிகளில் வணக்கம் கூறி தன்னை உலகத் தலைவனாக அடையாளப்படுத்தி கொள்கிறார்.

அமெரிக்கா பல அதிபர்களை சந்தித்துள்ளது. கருப்பு இனத்தவர், விமர்சனங்கள், சர்ச்சைகள் என பல விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின்  அதிபராக வலம் வரும் ஒபாமா நல்ல அதிபர் என்பதையும் தாண்டி உலக அரசியல் தலைவர்கள், இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார்.

ச,ஸ்ரீராம்

8 ஆண்டுகால அதிபர் வாழ்க்கையில் வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் மகிழ்ச்சியான தருணங்கள்

Photo Source: FlickrThe White HousePete Souza

அடுத்த கட்டுரைக்கு