Published:Updated:

ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேர் படுகொலை! - சிரியாவில் நடப்பது என்ன?

Vikatan Correspondent
ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேர் படுகொலை! - சிரியாவில் நடப்பது என்ன?
ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேர் படுகொலை! - சிரியாவில் நடப்பது என்ன?

சிரியாவில் பஷர் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர்.

எப்படி ஆரம்பித்தது சிரியா உள்நாட்டு யுத்தம்?

சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத். இவர், 1990-ல் ‘எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார். அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 98 சதவிகித

வாக்குகளைப்பெற்று, நான்காம் முறையாக அதிபரானார் ஹஃபெஸ் அல் ஆசாத். பின்னர், இவருடைய இரண்டு மகன்களில் மூத்தவரான பசல் அல் ஆசாத்-தான் அடுத்த அதிபர் என மக்கள் நினைத்திருந்த நேரத்தில், கார் விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்தார்.

ஷியா இயக்கத்தைச் சார்ந்த ஹஃபெஸ் அல் ஆசாத்தின் இளைய மகனான பஷர் அல் ஆசாத், தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். இவர் மீது கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதிகளும் தனிக்கவனம் செலுத்த முக்கியக் காரணம்... 70 சதவிகிதத்துக்கு மேல் சன்னி பிரிவு மக்கள் வாழும் ஒரு நாட்டை, ஷியா பிரிவைச் சார்ந்த ஒருவர் ஆளுவது என நினைத்ததன் விளைவுதான் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கான ஆரம்பம். அதுமட்டுமல்லாமல், பஷர் அல் ஆசாத்தால் தொடங்கப்பட்ட ‘சிரியன் எலெக்ட்ரானிக் ஆர்மி’யும் கிளர்ச்சியாளர்களையும், பிற நாட்டவர்களையும் கோபம் கொள்ளவைத்தது. இந்த ஆர்மியின் முக்கிய நோக்கம் துப்பாக்கி ஏந்திப் போராடுவது அல்ல, சைபர் அட்டாக். ஆம், எதிரிகளின் வலைப்பக்கங்களை ஹேக் செய்து தனக்குத் தேவையான தகவல்களை எடுப்பதாகும். இதுவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததற்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தது.

சிரியா உள்நாட்டுப் போர்!

பஷர் அல் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க் கட்சிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த இருபிரிவுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடக்கும் இந்த யுத்தமே, அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை அடியோடு அழித்து வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு!

சிரியாவில் உள்நாட்டுப் போரானது, ஒரு மதத்தின் இரு பெரும் பிரிவுகளுக்குள்ளேயே நடைபெறத் தொடங்கியது. இதிலிருந்து தனியாக உருவான அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா). இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். ஆரம்ப காலத்தில் சிரியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பானது, தற்போது உலகம் முழுவதிலும் இயங்கிவருகிறது. சமீபத்தில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் இந்த இயக்கத்துக்காக ஆள் சேர்ப்புச் பணியில் ஈடுபட்டிருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் உள்ளவர்கள், மதத்தை பற்றிய தவறான கருத்துகளை அங்குள்ள மக்களிடம் சொல்லி, அவர்களை தங்கள் வசபடுத்திக்கொள்வதாகவும், சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து பயங்கரவாதிகளாக மாற்றிவருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், பல அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டுவரை இந்த அமைப்பால் தனிப்பட்ட முறையில் 33,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த அமைப்பை அழிக்கும் நோக்கத்தில் சிரியா அரசு பல முறை தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த அமைப்புக்கு உலகில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருவதால், இவர்களின் கை சிரியாவை நோக்கி ஓங்க ஆரம்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டித் தீவிரவாத அமைப்புகள்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக, பல தீவிரவாத அமைப்புகளும் சிரியாவில் தலைதூக்க ஆரம்பித்தன. உள்நாட்டு யுத்தம் ஒருபக்கம் என்றால், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் போட்டி தீவிரவாத தாக்குதல்கள் மறுபக்கம்... இது சிரியாவுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.

நடப்பது உண்மையில் உள்நாட்டுப் போர்தானா?

இதை வெறும் உள்நாட்டுப் போர் என்று அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. காரணம், ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான், முழு ஒத்துழைப்பையும் தந்துகொண்டிருக்கிறது. மேலும், தனது நட்பு நாடான ரஷ்யாவும் முழு உதவியும் செய்துவருகிறது. அதேபோல், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் மேலாக அமெரிக்காவும் தற்போது நேரடியாகவே உதவி செய்துவருகிறது. எனவே, சிரியாவில் நடப்பதும் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமே

தற்போது சிரியா யுத்தத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவது எதிரெதிர் அணியில் இருக்கும் ரஷ்யப் படையும், அமெரிக்கப் படையும் மட்டுமே. அதனால்தான், இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நிலவிவரும் கடும் தாக்குதலில் இரு பிரிவுகளிலும் அடிக்கடி வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் மேலானோர் சிரியாவைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், சிரியாவில் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களின் படை வீரர்களுக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற ஆரம்பகாலத்தின்போது சக்தி வாய்ந்த குண்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம்!

நடந்துவரும் யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ராவும் ஜெனிவாவில் அண்மையில் சந்தித்துப் பேசினார்கள். அதில், ‘சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இரு நாட்டுப் படைகளும் போரில் ஈடுபடாமல் இருக்கவேண்டும்’ என்ற சுமுக உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் தனது ஆதரவு நாடுகளோடு சிரியா ராணுவ வீரர்களும், கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

உடன்படிக்கையை மீறிய சிரியா மற்றும் ரஷ்யப் படைகள்!

போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒருவார காலம்கூட ஆகவில்லை. அதற்குள் சிரியாவும், ரஷ்யாவும் இணைந்து, கிளர்ச்சியாளர்களிடம் நீண்ட நாட்களாக இருந்துவந்த அலெப்போ பகுதியை மீட்க உடன்படிக்கையை மீறினர்.

கடந்த 19-ம் தேதி இந்த இரண்டு படைகளும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டன. அதாவது, தாக்குதல் நடத்தப்பட்ட ஓரிரு தினங்களில் மட்டும் சுமார் 1,900-க்கும் மேற்ப்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் அலெப்போ பகுதியில் மட்டும் சுமார் 390 பேர் பலியாயினர். இதில், 96 குழந்தைகளும் அடங்கும். மேலும், இந்தத் தாக்குதலில் மூன்று லட்சத்துக்கும் மேலானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலினால் மருத்துவமனைகளும், மீட்புப்பணி நிலையங்களும் மிக மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணத்தால் மீட்புப்பணி நடைபெறாமலும், உரிய மருத்துவச் சிகிச்சை இல்லாமலும் மக்கள் மரணப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரப் பின்னடைவு!

2010-ம் ஆண்டுக்குப் பிறகு 90 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைப் பொறுத்தவரையில், கடந்த 2010-ம் ஆண்டுவரை 3,80,000 பேரல்களை உற்பத்தி செய்த நாடு இன்று வெறும் 10,000-க்கும் உட்பட்ட பேரல்களையே உற்பத்தி செய்கிறது. எண்ணெய் உற்பத்தி பெருமளவில் சரிந்ததால், மின்சார உற்பத்தியும் சரிந்தது. ஒரு நாட்டில் மின் உற்பத்தி இல்லையென்றால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியினைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அதுமட்டுமில்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அடியோடு குறைந்தது. அதாவது, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிரியாவில் 11 சதவிகிதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்தனர். ஆனால், இன்று 39 சதவிகித இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாக போரில் இறந்தவர்களுக்குச் சமமாக... பசியாலும், பட்டினியாலும் மக்கள் இறந்துவருவது குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தால் பலியானோர் விவரம்!

இந்தச் சண்டையினால் கடந்த 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் ராணுவத்தினர் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், கிளர்ச்சியாளர்கள் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பொதுமக்கள் தரப்பில் 46 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டு உள்ளனர். சண்டை உச்சநிலையில் இருந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில், 42 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினரும், 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், 31 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களும் இறந்துள்ளனர். 2016-ம் ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அனைத்துத் தரப்பினர்களையும் சேர்த்து மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். சுமார் 70 லட்சம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர்.

யுத்தத்தால் பல குழந்தைகள் தாய். தந்தையரை இழந்து அனாதையானார்கள். பல பெற்றோர்கள் குழந்தைகளை இழந்து தம் வாழ்க்கையையே தொலைத்து நிற்க்கின்றனர்கள், பல லட்ச மக்கள் வீடுகளை இழந்து, பசி பட்டினியால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். இந்த நிலை எப்போது மாறுவது எப்போது? கூடிய விரைவில் சிரியாவில் போர் முழுவதுமாக நிறுத்தப்பட்டு அனைத்துதரப்பு மக்களும் சுதந்திர காற்றை உள்ளார சுவாசிக்கட்டும். அதற்கு ஆண்டவன் அருள் பொழியட்டும்.

ஜெ.அன்பரசன்.