Published:Updated:

பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்! #WorldGirlChildDay

பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்! #WorldGirlChildDay
பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்! #WorldGirlChildDay

பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்! #WorldGirlChildDay

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்! பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும்,  19- 12- 2011 அன்று ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக  அறிவிக்கப்பட்டது.

இன்றைய தினம் ஃபேஸ்புக், ட்விட்டரில் #SaveGirlChild என்று பதிவுகள் போடும் முன், உங்களைச் சுற்றி இருக்கும்  பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். நம் சிறுமிகள் எத்தனை ஆபத்துகளுக்கு நடுவில் வளர்ந்து வருகிறார்கள் என்பதை, தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்..! 

எனக்கு புரிகிறது.. இந்த நாள் மட்டும் அல்ல. பெண்களுக்கான எந்த நாள் என்றாலும், அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை பற்றி பேசிக்கொண்டே இருப்பது படிக்கும் உங்களுக்கு அலுப்பையும், கசப்பையும் தரலாம். ஆனால் இன்று உலகில் சுமார் 1.1 பில்லியன் சிறுமிகள் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலான சிறுமிளை பாலியல் ரீதியாக மனித மிருகங்கள் சீரழிக்கிறார்கள். இந்த அவலம் மறையும்வரை, இந்தக் கசப்புக்கு நீங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். காரணம், எந்த மனிதன் எப்போது மிருகமாகிறான் என்பது யாராலும் யூகிக்க முடிவதில்லை. 



நவீன குழந்தைத் திருமணம் பற்றி தெரியுமா?

பெண் கல்விக்கு முக்கியத் தடையாக இருப்பது குழந்தைத் திருமணம். சீனாவைத் தவிர, உலகில் வளர்ந்த நாடுகளில் 18 வயதில் இருக்கும் மூன்று பெண் குழந்தைகளில் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. இதனால் அவர்களுக்குக் கல்வி தடைப்பட்டு, கணவரால் பதின் வயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, இளம் வயதில் தாயாகி, உடலாலும் மனதாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்குகிறார்கள் பெண் குழந்தைகள்.

இப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் பரவலாகி இருப்பதால், பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் முடக்கி வைப்பதில்லை. பரவலாக, பெண் பிள்ளைகள் படிக்க வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், கல்லூரி செல்லும்போது காதலித்து விடுவார்களோ என்று பயந்து, பூப்படைந்தவுடன் அவர்களுக்குத் திருமணம் முடித்துவிடுகிறார்கள். இதுதான் குழந்தைத் திருமணத்தில் ஏற்றப்பட்ட நவீன மாற்றம்.  

உங்கள் பெண் குழந்தைக்கு என்ன தற்காப்புக் கலை தெரியும்?

இன்று டிவி ஷோக்களின் மோகத்தால் பாட்டு, நடன வகுப்புகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் அதிகம். தவறில்லைதான். ஆனால், அதைவிட குழந்தையின் பாதுகாப்புதான் முதல் தேவை. குறைந்தபட்சம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, பெண் குழந்தைகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற எதாவது ஒரு தற்காப்புக் கலை கற்றுக்கொடுப்பது அவசியம். இதனால் பாதுக்காப்புடன், அந்தப் பெண் குழந்தைகள்  தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கப்பெற்று, வாழ்வையும், சமூகத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள். 


 

அதிகரிக்கும் இளம் வயது காதல்! 


சிறுமிகள் பதின் வயதில் அவர்களுக்கு ஏற்படும் கிளர்ச்சியை காதல் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ''சமீபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி, 'என் எதிர்காலக் கணவரைப் பற்றின கனவு எனக்கு இருக்காதா?' என்று கேட்டபோது நான் அதிர்ச்சியாகிவிட்டேன்'' என்கிறார்,  மனநல மருத்துவர் பீனா. “இப்போது குழந்தைகளுக்கு குழந்தைப் பருவமே இல்லாமல் போய்விட்டது. அந்தக் கேள்வியைக் கேட்ட குழந்தையைபோல், இன்று பலர சிறுமிகள் காதல்(!) வசப்படுகிறார்கள்.  இதற்குக் காரணம் பெற்றோர்கள்தான். சிலர், 'நான் ரொம்ப சோஷியலா பழகுறேன்' என்று, குழந்தையிடம் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். இன்னும் சிலர் தங்கள் குழந்தையிடம் ராணுவ ஆட்சி செலுத்துவார்கள். இவை இரண்டுமே தவறு. 

குழந்தைகளிடம் சில நெறிமுறைகளோடு, நட்போடு பழக வேண்டும். அது கடினம்தான். இருப்பினும் சரியாகச் செய்தே ஆகவேண்டும். அதற்கு முதலில் அவர்கள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நட்பை ஆதரிக்கும் அதே நேரம், அவர்களுக்கான எல்லையையும் அவர்களின் மன நோகாதவாறு புரியவைக்கவேண்டும். 

உங்கள் பெண் குழந்தையின் மேல் உங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதும், அதைக் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். 

குட் டச், பேட் டச்... கற்றுக்கொடுங்கள்! 

பெண் குழந்தையின் உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்து அதைப் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். குழந்தைக்கு விபரம் தெரிந்ததுமே, அவர்களுக்கு குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுப்பது காலத்தின் அவசியம்'' என்கிறார் உளவியல் நிபுணர் நப்பின்னை. 



''ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்களே!"

''2014ல் 1,565 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள். இதில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை 1,110. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில் 60% - 68% பெண் குழந்தைகள் மீது நடந்தப்படுபவையே. பெண் குழந்தைகளை வேட்டையாடும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். தங்களுக்கு நடக்கும் வன்முறையை வெளியில் சொல்லமுடியாத சூழலை சிறுமிகளுக்கு நாம் கொடுத்திருப்பதுதான் கொடூரத்தின் உச்சம். 

வெளியில் சொல்லக்கூடாது என்ற மிரட்டல் ஒரு பக்கம் என்றால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளியாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் குருட்டுப் பார்வை இன்னொரு பக்கம். பாலியல் வன்முறைக்கு ஆடைதான் காரணம் என்றால், சிறுமிகளையும் சேலையால் போர்த்த வேண்டுமா? பின் தொடர்ந்து வருவது, தவறான ஜாடை காட்டுவது, தொடுவது, அநாகரிகமாகப் பேசுவது என பலதரப்பட்ட வன்முறைகளை பெண்களும் பெண் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்" என்கிறார் சமூக ஆர்லவர் எவிடன்ஸ் கதிர்.

''நீதிமன்றங்களில் தண்டனை பெறும் பாலியல் வன்முறைகள் வெறும் 19% தான். இதில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் 3% கூட இல்லை. பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட பெண் பிள்ளைகளில்  80 % பேருக்கு 20 நாட்களுக்குப் பிறகுதான் பரிசோதனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தவுடனேயே எச்சில், நகம், முடி, காயங்கள் போன்ற நுணுக்கமான தடயங்கள் ஆராயப்படுகின்றன. இங்கு அதுபோன்று இல்லை என்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் மீட்கும் கவுன்சிலிங்கூட சரியாகக் கொடுக்கப்படுவதில்லை. 

பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல... குழந்தைத் திருமணம், பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலைகள் என இன்றும் கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல... உலகத்தின் எல்லா நாடுகளிலும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. வன்முறையின் அளவுகோல் வேறுபடுமே தவிர, பெண் இனத்தை நசுக்காத சமூகம் இந்தப் பூமியில் இல்லை.


நான் உட்பட் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரானவர்களாக ஏதோ ஒரு நேரத்தில் மாறிவிடுகிறார்கள். அது காந்தி, பெரியார், பாரதியார், அம்பேத்கார் என யாராக இருந்தாலும் பொருந்துகிறது. அவர்கள் பெரிய புரட்சி செய்திருக்கலாம்.  ஆனால் அனைவருமே ஏதோ ஓர் இடத்தில், 'நான் ஆண்' என்ற ஒரு திமிரான மனோபாவத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். எங்களுக்குத் தெரியாமலேயே அந்த எண்ணம் எட்டிப்பார்த்துவிடுகிறது. ஓர் ஆண் பிறந்து இறப்பதற்குள் தனக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சதவிகிதத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்'' என்கிறார் எவிடன்ஸ் கதிர்.


பெண் பிள்ளை கடத்தல்!


பெரும்பாலும் 10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்தி கடத்தல்கள் நடக்கின்றன. இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பாலியல் தொழிலுக்காகவும், ஆபாச படங்கள் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம், 20 மாவட்டங்களில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக உள்ளது.  உங்களுக்குத் தெரிந்து குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை, பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், படிக்கத் தடை என்ற செயல்பாடுகள் நடந்தால்.. உடனே  1098 என்ற எண்ணுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்போது புரிகிறதா... உங்களைச் சுற்றியிருக்கும் பெண் பிள்ளைகள், எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள் என்பது. அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின் குழந்தைப் பருவக் கொண்டாட்டத்தை சிதைக்காமல் இருந்தால் போதுமானது. நீங்கள் முன் பின் அறியாத பெண் பிள்ளைகள் உட்பட, நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்து வாழவிடுங்கள். அதுவே பெரிய வாழ்த்தாக அமையும்!
 

- கே. அபிநயா
படங்கள்: அனிதா சத்யம்

அடுத்த கட்டுரைக்கு