Published:Updated:

ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!

ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!
ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!

ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹாங்காங். உலகின் அத்தனை வங்கிகளும் இருக்கும் நகரம். கிழக்காசியாவின் பணப்பெட்டகம். வானுயர்ந்த கட்டிடங்கள், ஒழுங்கு தவறாத போக்குவரத்து. ஒவ்வொரு நிமிடத்துக்கும நான்கு முறை ஏறி இறங்கும் விமானங்கள். புகழ்பெற்ற விக்டோரியா ஹார்பர். அதன் தரை அதிர நங்கூரங்களை இறக்கியபடி இருக்கும் பன்னாட்டு சரக்கு கப்பல்கள் என அது அந்நகரத்துக்கு ஒரு வழக்கமான திங்கட்கிழமை நாள். 

ஆனால் ஒட்டுமொத்த ஹாங்காங்கின் ஒவ்வொரு இன்ச்சையும் தன் சேட்டிலைட் பார்வைக்குள் அமெரிக்கா கொண்டு வந்திருந்த அந்த நாளில் அவரை தங்கள் கூட்டுக்குள் வைத்து காத்த நான்கு அகதிகள் பற்றியதுதான் இந்த கட்டுரை.

லான்தொ, ஹாங்காங்கின் தீவுகளில் ஒன்று. அங்கு மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கே உரிய சேரிப்பகுதி. மலிவு விலையில் விழிசிமிட்டி அழைக்கும் 'தாய் மஸாஜ்' ஸ்பாக்களும் புறாக்கூடுளாய் அறைகளும் நிறைந்த அந்த ஜன நெரிசல் மிகுந்த கட்டிடம். அதன் 14 மாடியில் கான்கிரீட் தரையும் ஒரு ஃபேன் மட்டுமே கொண்ட ஒரு சின்ன அறையில் தொலைபேசி ஒலிக்கிறது. களைத்து படுத்திருந்த அவர் அதை எடுக்கவில்லை.

சலிக்காமல் மூன்றாவது முறை ஒலிக்கவும் போனை எடுக்கிறார். அது உலகின் அதிமுக்கிய தொலைபேசி அழைப்புகளில் ஒன்று. பேசியது எட்வர்ட் ஸ்னோடன்.அன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவை அம்பலப்படுத்தி, உலகத்தின் முன்னாலும் சொந்த மக்களின் முன்னாலும் அந்த நாட்டை கூனிக்குறுக வைத்த தனிஒருவன். 

"சார், எட்வர்ட் ஸ்னோடென் பேசுகிறேன். உடனடியாக எனக்கு இந்த நாட்டில் தஞ்சம் வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்."

"சரி இப்போது எங்கே இருக்கிறீர்கள்" 

"மிரா ஹோட்டலில்"

" ஆபத்தான இடத்தில் இருக்கிறீர்கள். உடனே வருகிறேன்"

ஸ்னோடனையும் அவர் பேட்டியையும் காலையில் செய்தி சேனல்களில் பார்த்து அறிந்திருந்தார்.

ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!அடுத்த பத்தாவது நிமிடத்தில் காரை எடுத்துவிட்டார். லாந்தோவில் இருந்து அங்கு போக 20 நிமிடமாவது ஆகும். தாம் செல்வதற்குள் ஆள் இருக்க வாய்ப்பில்லை,கைது செய்யப்படலாம். ஏன் உயிருடன் கூட இருக்கவே வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டுதான் ஓட்டலை அடைந்தார். 

அவர்  ராபர்ட் டிப்போ -மனித உரிமை வழக்கறிஞர், கனடாவை பூர்விகமாக கொண்டவர். மான்சான்டோ நிறுவனத்தில் கெமிக்கல் இஞ்சினியராக வேலை பார்த்தவர். அந்த நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதியாக இயங்குவதற்காக ஹாங்காங்கிற்கு படிக்க வந்தவர். மனித உரிமைகள் ஈர்க்கவே அங்கயே செட்டிலாகிவிட்டார். ஹாங்காங்கில் தஞ்சமடைந்துள்ள 14500 அகதிகளுக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவர். இவர்தான் வெற்றிகரமாக ஸ்னோடென்னை அமெரிக்க கரங்களில் இருந்து காப்பாற்றி ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தவர். 

______

தன் வீட்டிலிருந்து இரண்டு வீதி தள்ளி நடந்து கொண்டிருக்கும் மே தின ஊர்வலத்தை பார்வையிட சென்றவனின் சைக்கிளின் செயின் அவிழ்ந்து விட அந்த சிறுவன் இறங்கி மாட்டிக்கொண்டிருந்தான். அப்போதுதான் அந்த சத்தத்தை கேட்டான். கண்டிப்பாக வெடிகுண்டு வெடித்த சத்தம்தான் அது என அவனுக்கு புரிந்தது. ஓடி வரும் கூட்டம் "சைக்கிளில் வந்தவன் பிரதமர் பிரேமதாசாவை கொன்றுவிட்டான்" என தகவல் சொல்லியபடி ஓட, பயத்தில் தன் சைக்கிளையும் அங்கேயே போட்டு ஓடி வீட்டுக்கு வந்துவிட்டான். பார்க்க வயதுக்கு மீறீய வளர்ச்சியாக இருந்தாலும் பயந்த சுபாவம் கொண்டவன் அந்தப்பையன். 

சுபன் கெல்லுபத்த, மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடியவர். இலங்கையின் தேசிய விளையாட்டு என்பதால் எப்போதும் கிரிக்கெட் பேட்டும் பந்தும் கிடைத்துகொண்டே இருந்தது. அதிலும் 96-ம் ஆண்டு இலங்கை உலகப்கோப்பையை வென்றுவிடவும் எங்கு காணினும் கிரிக்கெட்தான் பேச்சே. இளம் கிரிக்கெட் வீரர்கள் தென் இலங்கையில் சினிமா ஹீரோக்கள் போல பார்க்கப்பட்டனர். 17 வயதான சுபன் தேசிய அணிக்கு எப்போது வேண்டுமானலும் தேர்ந்து எடுக்கப்படலாம் என பேச்சு இருந்தது. நிறைய பெண்கள் சுபனை சுற்றி வந்த காலகட்டம் அது, அப்போதுதான் இனொகா சுபனின் கண்ணில் பட்டார். கண்டவுடன் காதல். 

சுபனின் குடும்பம் தீவிர யு.என்.பி கட்சிக்கார குடும்பம்(ரணில் விக்ரமசிங்கே கட்சி) , இனொபா குடும்பமோ பக்கா சந்திரிகா குமாரதுங்காவின் கட்சி ஆதரவாளர்கள். இரண்டு தரப்பும் கருத்து ரீதியாகவும் கைகளாலும் மோதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இவர்கள் காதல் வளர்ந்தது. 

இந்திய தீபகற்ப குடும்பங்களில் எடுக்கும் வழக்கமான முடிவை இனோபாவின் குடும்பமும் எடுத்தது. அதாவது அவருக்கு உடனடியாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவுதான் அது. இது தெரியவந்ததும் காதலர்கள் இருவரும் ஓடிச்சென்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!இந்நிலையில் சுபன் குடும்பம் ஆதரித்து வந்த யுஎன்பி கட்சி தேர்தலில் படு தோல்வி அடைகிறது. இனொபா குடும்பம் ஆதரிக்கும் ராஜபக்சேவின் ஆட்சி வருகிறது. இனொபாவின் சகோதர்கள் அந்த கட்சியின் முக்கிய பிரபலமாக மாறுகிறார்கள். சுபன் ஓடி ஒளிந்தாக வேண்டிய கட்டாயம் வந்தது. இலங்கையின் எந்த பகுதிக்கு போனாலும் சுபனை பிடித்து கொன்றுவிட இனொபாவின் சகோதரர்கள் தேடி வந்தனர். போலிஸுக்கு போனாலும் யார் கொல்ல வருகிறார்களோ அவர்களிடமே சமாதானமாக போக அறிவுரை கூறினார்கள். சுபன் மட்டுமில்லை சுபனின் குடும்பத்தில் ஒருவர்கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லை. வேறு வழியே இல்லை வேறு நாட்டுக்குத்தான் ஓட வேண்டும். இலங்கை பிரஜைகள் பாஸ்போர்ட் இல்லாமல் போகமுடிந்த ஒரு சில நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. அங்கு தஞ்சமடைந்தார் சுபன். 

2005-ல் ஹாங்காங் வந்து சேர்ந்த சுபனுக்கு அகதிகள் முகாமில் கொடுக்கப்பட்ட அறையிலிருந்து நதீகாவின் அறைக்கு மாறியிருந்தார். நதீகாவும் சிங்களர்தான், அவரும் அகதிதான். இருவரும் இப்போது ஒரு குடும்பம். ஒரு 5 வயது பெண்குழந்தையும் 6 மாதங்கள் ஆன ஆண் குழந்தையும் அதன் உறுப்பினர்கள். 

" 'நண்பர் ஒருவருக்கு தங்க இடம் தரமுடியுமா' என டிப்போ போனில் கேட்ட போது உடனே வரச்சொன்னேன். ஏனெனில் அவர் மட்டும்தான் எங்களுக்காக அரசிடம் பேசி வருகிறார். ஹாங்காங் பிறநாடுகளைபோல அவ்வளவு எளிதாக அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமையோ, வேலை செய்யும் உரிமையோ கொடுத்துவிடாது. பத்தாயிரம் பேரின் விண்ணப்பத்தில் 3 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கும் அளவுக்கு கண்டிப்பான நாடு. அதே போல இங்கியிருந்து அவ்வளவு இலகுவாக வெளியேறவும் முடியாது." 

" அவர்கள் எந்த டென்சனும் இல்லாமல் என் வீட்டின் கதவை தட்டினார்கள். டிப்போதான் கொஞ்சம் களைத்துப்போய் இருந்தார்.ஸ்னோடென் ரொம்பவும் சினேகமான புன்னகையுடன் உள்ளே நுழைந்தார். என் வீட்டின் ஒரே மெத்தையை அவருக்கு கொடுத்துவிட்டு ரூமுக்கு வெளியே குழந்தைகளுடன் வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் சுபன் வந்து சேர்ந்தார். அவருக்கும் ஸ்னோடென்னை தெரியவில்லை. 'இருவரும் உங்கள் மொபைல் போன் பேட்டரிகளை கழற்றி வைக்க முடியுமா? ' என ஸ்னோடென் கேட்டுக்கொண்டார். எக்காரணம் கொண்டும் ஸ்னோடென் என்றோ, என்.எஸ்.ஏ என்ற வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள் என்றும் சொன்னார். எங்கள் வாழ்க்கையே எந்த அர்த்தமும் இல்லாமல் இருந்துகொண்டு இருக்கும் அந்த நேரத்தில் இந்த மனிதன் எங்களை நம்பி அமர்ந்து இருப்பது கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. எப்போதும் லேப்டாப்பில் எதேயோ டைப் செய்தபடியும் காதில் ஹெட்போன் போட்டபடியே இருக்கும் அந்த மனிதனுக்கு எங்களிடத்தில் புன்னகைப்பதை தவிர பேசுவதற்கு வேறேதும் இல்லை" என்கிற நதீகா, கொழும்பு வீதிகளில் இனக்கலவரம் தீப்பிடித்து எரிந்த 83-ல் பிறந்தவர். 

அப்பா பஸ் ட்ரைவர், அம்மா வீட்டினை கவனித்துக்கொண்டார். எளிமையான வாழ்க்கை. கல்லூரி செல்ல வசதியில்லை எனவே பனியன் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சென்றார். உழைப்பை பிழிந்து எடுக்கும் நிறுவனம்.வேறு எது பற்றியும் சிந்தனை இல்லாமல் அன்றைய நாட்களின் டார்கெட் ஒன்றையே குறிக்கோளாய் வைத்து உழைத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஒருவர் அவரின் வாழ்க்கையில் நுழைந்தார். நுவன் என்ற அந்த இளைஞன்.நதீகாவை விரும்புவதாக தெரிவித்து அவரை தொடர்ந்து 6 மாதங்கள் கொழும்பு நகரத்தில் இருந்து புறநகரில் இருக்கும் நதீகாவை தினமும் பார்க்க வந்தார். நுவனின் குடும்பமும் ராஜ்பக்சேவின் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தது. கிட்டதட்ட நதீகாவின் குடும்பத்தையும் மிரட்டி அவரை சம்மதிக்க வைத்தார் நுவன். 

பின்னர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதாக சொன்ன நுவன் 2006 வரை எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். திடீரென நதீகாவின் வீட்டிற்கு வந்த அவர் கொழும்புக்கு அழைத்து சென்று ஒரு விடுதியில் வைத்து அவரை வண்புணர்ந்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்து, அதைக்காட்டி மிரட்டி அடிக்கடி அவரை பயன்படுத்திக்கொண்டார். ஒரு கட்டத்தில் நுவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரிய வரவும். நதீகா அவரின் பிடியில் இருந்து தப்பித்து உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். எப்படியோ கண்டுபிடித்து அங்கையும் அவர் வரத்தொடங்கவே 2007-ல் ஹாங்காங்கிற்கு தப்பி வந்து தஞ்சமடைந்தார் நதீகா. 

அகதிகளாக அடைக்கலமான இடத்தில் குடும்பம் ஆனவர்கள் நதீகாவும் சுபனும்.

ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!


"பசிக்குது என்றால் என்னிடம் தாராளமாக சொல்லலாம்" என்றார் வானஸா ரோடெல். அது வீட்டுக்கு வந்த விருந்தாளிகளிடம் சொல்லும் சம்பிராதாய வார்த்தைகள். அடுத்த நொடியே 'எனக்கு மஃபின்ஸ்கள் (கப் கேக்) பிடிக்கும்" என சொன்ன அந்த வெள்ளைக்கார பையனை பரிதாபமாகத்தான் பார்த்தார். அவரின் கண்களில் பசி அடர்த்தியாக தெரிந்தது. வானஸா வீட்டின் கதவை அந்த முன்னிரவு நேரத்தில் இதற்கு முன்னர் இப்படியாரும் தட்டியதில்லை. அவர் ஒரு பெண் குழந்தையுடன் வாழும் பிலிப்பென்ஸ் அகதி. சிங்கிள் மாமும் கூட. 

மிரா ஹோட்டலில் இருந்து காவல்துறை,மீடியா, அப்போதுதான் வரத்துவங்கியிருந்த அமெரிக்க ஓற்றர்கள் என அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி வழக்கறிஞர் டிப்போவும் ,ஸ்னோடென்னும் முதன்முதலில் வந்து சேர்ந்த இடம் வானஸாவின் வீட்டிற்குதான். 

"இவரை உன் வீட்டில் சில நாட்கள் விருந்தாளியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் " என கதவை திறந்த உடனே டிப்போ வேண்டினார். ராபர்ட் டிப்போ சொன்னால் எதையுமே செய்ய தயாராக இருந்தேன். காரணம் இதே ஊரில் எனக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெரியாமல் ஒவ்வொரு நாளும் ஒளிந்து ஒளிந்து நரக வாழ்க்க வாழ்ந்து வந்தேன். டிப்போவினை சந்தித்த அன்றுதான். எனக்கு இருக்கும் உரிமைகளை சொல்லி சட்டரீதியாக அகதியாக பதியவைத்து இப்போது இருக்கும் மரியாதையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தவர். ஸ்னோடென்னை என் வீட்டில் விட்டு கிளம்பும் போது காலையில் இவர் யார் என்று சொல்கிறேன் என சொல்லிவிட்டு போனார். அதிகாலையில் அந்த திடீர் விருந்தாளிக்கு மஃபின்ஸ் வாங்கிவிட்டு, நாளிதழ் வாங்கியபோதுதான் " அட உலகமே தேடும் நபர் என் வீட்டிலா?" என அதிசயித்தேன். 

ஹாங்காங்கில் வீட்டு வேலை செய்ய 24 வயதில் வந்தவர் வானஸா. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடுத்து வீட்டு வேலை ஆட்களை கொடுமைப்படுத்திவதில் ஹாங்காங் முன்னணியில் இருக்கிறது. வேலை செய்து சேர்த்த சொற்ப பணத்துடன் பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணத்தில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்தார் வானஸா. அங்கு உருவாகியிருந்த தீவிரவாத குழுவிற்கும் அரசுப்படைகளுக்கும் தொடர்ந்து கடுமையான சண்டை நடந்தபடி இருந்தது. வானஸாவின் ஊர் தீவிரவாதிகளின் கையில் வீழ்ந்தது. இவரை அந்த அமைப்பிலிருந்த ஒருவர் பாலியல் அடிமையாக பிடித்து வைத்திருந்தார். இதனால் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து. பல்வேறு முயற்சிகளுக்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து தன் பெற்றோர் வீட்டிற்கு தப்பி வந்தார் வானஸா. பிலிப்பைன்ஸ் அரசுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் சமாதான சூழல் ஏற்படவே மீண்டும் வானஸாக்கு பிரச்சினை வரும் போலிருக்கவும் ஹாங்காங் தப்பி வர திட்டமிட்டார். அங்கு போய் வேலைக்கு சேர்ந்த பின்னர் மகனை தன்னுடன் அழைத்துக்கொள்ள திட்டமிட்டார். ஆனால் இவர் ஹாங்காங் வந்த நேரத்தில் அந்த தீவிரவாதி இவரின் வீட்டிற்கு வந்து வானாஸாவின் மகனை தூக்கி சென்றுவிட்டார்.அதன் பின்னர் இவருக்கு போன் செய்து இனிமேல் பிலிப்பைன்ஸ் மன்ணில் கால் வைத்தால் உன் மகனை கொன்று விடுவேன் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

2004-ல் இருந்து இன்றுவரை பிலிப்பைன்ஸ் செல்லவில்லை. விசா காலாவதியாகி ஓவர்ஸ்டேடில் ஒளிந்து வாழ்ந்த வானஸாவிற்கு நல்வாழ்வு அளித்தவர் வழக்கறிஞர் ராபர்ட் டிப்போ. 

"ஸ்னோடென்னின் பாஸ்போர்ட்டை பாதுகாப்பாக என் வீட்டு பிரிட்ஜில் வைக்கும்போதுதான் பார்த்தேன். அடுத்தநாள் அவரின் பிறந்தநாள். அவருக்கு சாக்லேட் கேக் வாங்கி நானும் என் மகளும் அவருடன் சேர்ந்து கொண்டாடினோம். ஸ்னோடென் ஒரு இனிப்பு பிரியர். இனிப்பான எந்த உணவும் அவருக்கு பிடிக்கிறது.

அந்த நாட்களில் ஸ்னொடென்னிடம் கையில் சுத்தமாக காசே இல்லை. ஆனால் என் உறவினர் வந்திருந்தால் என்ன மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படி இருந்தது எனக்கு. என் பணத்தை செலவு செய்வதில் மகிழ்சியாகத்தான் இருந்தது" என்கிறார் நாளைய வாழ்க்கையை கேள்விக்குறிகளோடு சந்திக்கும் வானஸா. 

ஸ்னோடென்னின் ஹாங்காங் நாட்களில் அவருக்கு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டது அஜித் குமரசேகரா. இவரும் சிங்களர்தான்.கூடுதலாக அந்த நாட்டு ராணுவத்தில் பணியாற்றியவர். தமிழராக இதை படிக்கும் போது சட்டென உங்கள் மனம் கறுப்பது புரிகிறது. ஆனால் அஜித் சிங்கள ராணுவத்தின் வாண்டட் லிஸ்டில் இருப்பவர். இரண்டு முறை ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர். 

15 வயதிற்கு மேல் பள்ளிக்கு போகமாட்டேன் என வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டவர் அஜித். வறுமையான வாழ்க்கையில் இருக்கும் தங்களால் பிள்ளைக்கு எதும் செய்யமுடியவில்லையே என கவலைப்பட்ட பெற்றோர். படிப்பு தேவைப்படாத துறையான ராணுவத்துக்கு அனுப்பினர். பூசா ராணுவ முகாமில் அஜித்தை போன்ற இளம் வயது வீரர்களை மூத்த அதிகாரிகள் தினமும் பாலியல் தொந்தரவு செய்தனர். புகார் செய்த வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு மேல் அங்கு இருக்கமுடியாமல் தப்பி ஓடிவிட்டார் அஜித். அவரின் மேல் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு வாரண்ட் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. வேறு ஒரு பகுதியில் இருந்து போலிப்பெயரில் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார் அஜித். 

இம்முறையும் அதே போன்ற தொந்தரவுகள் தொடர்ந்தன. ஆனால் இதில் இருந்து தப்பிக்க விரும்பினால் போர் முனைக்கு செல்லலாம் என சொல்லப்பட்டது. அஜித் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்க புலிகளுடன் நடந்துகொண்டிருக்கும் யுத்த முனைக்கு சென்றார். அப்போது அவருக்கு வெறும் மூன்றுமாதம் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. 

கண் முன்னால் புலிகளுடன் நடந்த சண்டையில் வீரர்களை சிங்கள அதிகாரிகள் பலி கொடுத்துவிட்டு பாதுகாப்பாக இருப்பதை கண்டு வெறுத்து போய் மீண்டும் ஓடி வந்துவிட்டார். அஜித் இரண்டு முறை ஓடி வந்தது ராணுவத்துக்கு தெரிந்து சல்லடை போட்டு தேடியது. 2002-ல் கைது செய்யப்பட்டு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டார். சிங்கள ராணுவத்தின் சித்தரவதை உலகப்பிரச்சித்தி பெற்றதாயிற்றே. நடைபிணமாய் விடுதலை செய்யப்பட்ட அவரை மீண்டும் விசாரணைக்கு ராணுவ போலிஸ் தேடி வந்தது. இம்முறை சிறைக்கு போனால் பிணமாகத்தான் தருவார்கள் என அவரை விமானத்தில் ஹாங்காங்கிற்கு வேலைக்கு என அனுப்பி வைத்தனர் அவரின் பெற்றோர். வேலைக்கு அழைத்து வந்த ஏஜென்ட் விமான நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்து காத்திருக்கும்படி சொல்லிவிட்டு போனபின் வரவே இல்லை. ஹாங்காங்கில் ஏற்கனவே சிங்களரும் தமிழர்களும் அகதியாக உள்ளனர். அவர்கள் மூலம் அகதியாக பதிவு செய்து அடைக்கலம் கேட்டுள்ளார் அஜித். 

"நாங்கள் ஸ்னோடென்னுடன் மறைவாக இருந்தாலும்,அவ்வப்போது இடம் மாறவும், வேறு சில காரணங்களுக்காக நகரத்துக்குள் அலைய வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் எங்களுக்கு முன் செல்ல நம்பிக்கையான, பாதுகாப்பான ஒரு பாட்கார்ட் தேவைப்பட்டார். அஜித் அதை திறம்பட செய்தார்" என்கிறார் ராபர்ட் டிப்போ.

ஸ்னோடென்: படம் சொல்லாத ரகசியங்கள்!


மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி அமெரிக்காவில் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் இயக்கத்தில் " ஸ்னோ டென்" என்ற படம் வெளியாகியது. இதில் ஹாங்காங் நகரத்தில் தஞ்சம் புகுந்த ஸ்னோடென்னை காப்பாற்றிய நால்வர் பற்றி எந்த குறிப்புகளுமே இல்லை. டிப்போ பற்றியும் கூட எதுவுமே சொல்லவில்லை. உண்மையில் ஸ்னோடென் என்கிற மனிதன் அமெரிக்க உளவுத்துறையிலிருந்து வெளியே வந்து தன்னை வெளிக்காட்டிய இடம் ஹாங்காங். அதன் பின்னர் அங்கியிருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால் ஹாங்காங் பற்றியும் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றியும் எதுவுமே இந்த படத்தில் இல்லை. ஜெர்மன் பத்திரிக்கை ஒன்று இந்த நான்கு அகதிகளை பற்றியும் அவர்களை சந்தித்து கட்டுரை வெளியிட்டது. அதன் பின்னர்தான் இப்படியான மனிதர்கள் குறித்து உலகிற்கே தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் உலக மக்களிடம் ஸ்னோடென் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த நால்வருக்கும் சேர்த்து ஒரு லட்சம் யூரோக்கள் நிதி திரட்டும் கோரிக்கைதான் அது. அதன் மூலம் இவர்களின் வாழ்க்கைக்கு வழி செய்ய முடிவு செய்துள்ளார். பத்து நாட்களில் 12 ஆயிரம் யூரோக்கள் அதில் சேர்ந்துள்ளது. ஏற்கனவே தன் பங்காக 'தி கார்டியன்' பத்திரிக்கைக்கு பேட்டியளித்தற்காக கிடைத்த 20 ஆயிரம் டாலரையும் அவர்களுக்கு கொடுத்துள்ளார் ஸ்னோடன். 

"நான் நலமாக இருக்கிறேன்.அவர்கள் இல்லை. என்னை பொறுத்தவரை உயிருடன் இருப்பதே மகிழ்ச்சியான செய்தி. ஆனால் அவர்கள் வீட்டில் இருந்த காலத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என பார்த்திருக்கிறேன்.அவர்களுக்கு உங்களால் ஆனதை கொடுத்து உதவுங்கள். ஏனென்றால் அவர்களின் கதவுகள் ஆதரவு இல்லாதவருக்கு எப்போதும் திறந்திருக்கும்" என்கிறார் ஸ்னோடென் நெகிழ்ந்துபோய்.

-வரவனை செந்தில் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு