Published:Updated:

போகாதே ஜெசிகா... கேன்சர் குழந்தையின் போராட்டம்

Vikatan Correspondent
போகாதே ஜெசிகா... கேன்சர் குழந்தையின் போராட்டம்
போகாதே ஜெசிகா... கேன்சர் குழந்தையின் போராட்டம்

     அந்த சின்னஞ்சிறு குழந்தையின் ரத்த நாளங்கள் வெடிக்கும் அளவிற்கு வீங்கி, தோலினை பிதுக்கி வெளியில் தெரிகிறது... மூக்கிலிருந்து வரும் அந்த குழாய் கன்னத்தோடு ஒட்டப்பட்டிருக்கிறது, அவளின் கண்ணீர் கன்னங்களின் வழி வழிந்தோடுகிறது, புகைப்படம் தான் என்றாலும் வலியால் அவள் துடித்து கதறுவது காதில் கேட்கிறது. நியூரோப்ளாஸ்டோமா ( NEUROBLASTOMA ) என்ற கேன்சர் வகையினால் பாதிக்கப்பட்டிருக்கும் 4 வயது குழந்தை ஜெசிகா வீலனின் ( JESSICA WHELAN) , இந்த வலி மிகுந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன்னர், அவரின் தந்தை ஆண்டி வீலனால் பேஸ்புக்கில் பகிரப்பட்டது. 


மொட்டைத் தலை, சிரித்த முகம், கையில் சாக்லெட் என இருக்கும் கேன்சர் குழந்தைகளைப் பார்த்து பழகியவர்களுக்கு, இந்த உண்மை வலி சொல்லும் புகைப்படம் உறுத்தியது. ஆண்டி இந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்கு கண்டனங்கள் எழுந்தன. அதே சமயத்தில், ஆயிரக்கணக்கானோர் ஜெசிகாவிற்கும், ஆண்டிக்கும் ஆதரவாக குரல் கொடுத்தனர். ஜெசிகாவிற்காக கோ ஃபண்ட் மீ ( GO FUND ME ) என்ற வலைதளத்தைத் தொடங்கினார் ஆண்டி. ஒரே மாதத்தில் ஒரு லட்சம் யூரோக்கள் வந்தது. ஆனால், இனி யாரும் நன்கொடை வழங்க வேண்டாம், ஜெசிகா தன் இறுதி நேரத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆண்டி வீலன். 


கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தான் ஜெசிகாவிற்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 வயது குழந்தையான ஜெசிகாவிற்கு அது என்ன என்பது புரியவில்லை. ஆனால், அவளுக்கு அது ரொம்ப வலித்தது. வலிக்கும் போதெல்லாம் தன்னருகே இருந்த அந்த கரடி பொம்மையை கட்டிப் பிடித்துக் கொண்டாள். ஆரம்பத்தில், இன்னும் சில ஆண்டுகள் நலமாகத் தான் இருப்பாள் என்று சொன்ன மருத்துவர்கள், தற்போது ஜெசிகா இன்னும் சில நாட்கள் மட்டுமே பிழைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறிவிட்டார்கள். மருத்துவ சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. 


ஜெசிகாவின் தந்தை ஆண்டி ஒரு புகைப்படக்காரர். வலியின் உச்சத்தில் ஜெசிகா கதறிக் கொண்டிருந்த போது, அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. கையிலிருந்த கேமராவைக் கொண்டு புகைப்படம் எடுத்தார். தன் பேஸ்புக் பக்கத்தில்,

" யாரையும் சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் இந்தப் படத்தை வெளியிடவில்லை. இதைப் பார்த்தால் எங்களைப் போன்ற பெற்றோர்களின் வலியும், அந்தப் பிஞ்சுகள் படும் வேதனைகளும் இந்த உலகிற்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது. " என்று கூறியிருந்தார். 


பிரிட்டிஷ் பாடகர் ஹேரி ஸ்டைல்ஸ் என்றால் ஜெசிகாவிற்கு ரொம்ப பிடிக்கும். ஜெசிகா குறித்து அறிந்த ஹேரி, போனில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசியுள்ளார். அந்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க முடியாவிட்டாலும் கூட, பலமாக சிரித்திருக்கிறார். உலகம் பார்த்து நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கின்றன. அதற்குள் ஜெசிகா விடை பெற இருக்கிறாள். 


" ஜெசிகாவிற்காக நன்கொடை வழங்கியவர்கள், எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகள். இனி ஜெசிகாவிற்கு நன்கொடை தேவையில்லை. அவள் மிக விரைவில், வரவே முடியாத தூரத்திற்குப் போக இருக்கிறாள். இதுவரைக் கிடைத்த நன்கொடைகளை, கேன்சர் ஆராய்ச்சி மையத்திற்கு தர உள்ளோம். ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும், மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும், ரத்தமும், சதையுமாய் நாம் பார்க்கும் குழந்தைகள் செத்து மடிவது எதிர்காலத்தில் நடக்கக் கூடாத நிலை உருவாக வேண்டும். எங்களுக்கு தற்போது தனிமை தேவைப்படுகிறது. எங்கள் மகளின் கடைசி நிமிடங்களை அவளோடு நாங்கள் கழிக்க விரும்புகிறோம். இனி எங்கள் வீட்டில், எங்கள் அறையில், எங்கள் வாழ்வில் ஜெசிகா இருக்கமாட்டாள் என்று நினைக்கும் போது வலிக்கிறது..." என்று தன் கடைசி பேஸ்புக் பதிவில் ஆண்டி குறிப்பிட்டுள்ளார். 

சின்ன சிரிப்போடு, அந்தக் கரடி பொம்மையை கட்டிப்பிடித்து, தலை சாய்த்துப் பார்க்கும் ஜெசிகா இனி இங்கு இருக்கப் போவதில்லை. போகாதே ஜெசிகா....

-இரா.கலைச்செல்வன்