Published:Updated:

இந்தியாவைப் போல வெனிசுலாவிலும் செல்லாத நோட்டுகள்! மோசமாகும் மக்களின் எதிர்வினை!

இந்தியாவைப் போல வெனிசுலாவிலும் செல்லாத நோட்டுகள்! மோசமாகும் மக்களின் எதிர்வினை!
இந்தியாவைப் போல வெனிசுலாவிலும் செல்லாத நோட்டுகள்! மோசமாகும் மக்களின் எதிர்வினை!

இந்தியாவைப் போல வெனிசுலாவிலும் செல்லாத நோட்டுகள்! மோசமாகும் மக்களின் எதிர்வினை!

ந்தியாவில் பிரதமர் மோடியின் அரசு அதிக மதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுகளைத் தடை விதித்ததைப் போல, வெனிசுலா நாட்டிலும் அதிக மதிப்புடைய 100 போலிவியர் நோட்டுகள் (100-bolivar bills) செல்லாது என அறிவித்துள்ளனர். 'கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு ஒழிப்பு'க்காக இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக மோடி கூறியுள்ள நிலையில், 'மாஃபியா கும்பல்களை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.' என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரா கூறியுள்ளார். இரு நாடு அரசுகளும் போதிய முன் திட்டமில்லாமல், இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கும், அவதிக்கும் உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாததால் மக்கள் கொள்ளைச் சம்பவங்களில் இறங்கியுள்ளதால் வெனிசுலா பதற்றத்தில் உள்ளது.

வெனிசுலா நாட்டு மக்களிடையே அதிகளவில் புழக்கத்தில் இருந்த 100 போலிவியர் நோட்டுகள் செல்லாது என கடந்த 11-ம் தேதி அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரா அறிவித்தார். அத்துடன் 72 மணி நேரத்துக்குள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

வெனிசுலா நாட்டிற்குள் கொலம்பியா, பிரேசில் போன்ற அண்டை நாடுகளில் இருந்து ஊடுரும் சர்வதேச மாஃபியா கும்பல்கள், பணப்பறிமாற்றத்திற்கு 100 போலிவியர் நோட்டுகளை பயன்படுத்துகின்றன. சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலில் கொலம்பியா முதலிடத்தில் உள்ளது. மாஃபியா கும்பல்கள், வெனிசுலாவின் பணத்தைப் பயன்படுத்தி உலகளவில் போதை மருந்துகளைக் கடத்தி வந்தனர். கொலம்பியா நாட்டு கறுப்புச் சந்தைகளில்  கட்டுக்கட்டாக வெனிசுலா நாட்டின் பணம் விற்கப்பட்டது. சில சாலையோர கடைகளில் கூட பணம் விற்கப்பட்ட அவலம் நடந்துவந்தன. அமெரிக்க டாலர்கள் கொடுத்து குறைந்த விலைக்கு போலிவியர் நோட்டுகளை வாங்கும் மாஃபியா கும்பல், இப்பணத்தை பயன்படுத்தி வெனிசுலாவில் பொருட்களை வாங்கிக்கொள்ளும். இதன் மூலம் பல மடங்கு லாபம் இக்கும்பலுக்கு கிடைக்கும். 

இதனால் வெனிசுலா பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்படைந்தது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயந்ததுடன், அமெரிக்க டாலருக்கு நிகரான போலிவியர் நோட்டுகளின் மதிப்பு 55 சதவிகிதம் சரிந்தது. மேலும் அரசியல் ரீதியாகவும் வெனிசுலாவை சீர்குலைப்பதற்கு இந்த கும்பல் முயற்சித்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அட்டூழியத்தை தடுத்து நிறுத்துவதற்காக,100 போலிவியர் நோட்டுகளை அதிரடியாக தடை செய்தார் நிகோலஸ் மதுரா. அறிவிப்பு வந்த உடனே வெனிசுலாவில் இருந்து அண்டை நாடுகளுக்கான தரை, விமானம் மற்றும் கடல் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதன்மூலம் வெளிநாடுகளில் உள்ள வெனிசுலா கள்ள பணம் நாடு திரும்புவது தடுக்கப்படும் என வெனிசுலா அரசு தெரிவித்தது.

இத்தடை அறிவிக்கப்பட்டது முதல் பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் குவிந்தனர். வெனிசுலாவில் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது தடை செய்யப்பட்டுள்ள 100 போலிவியர் நோட்டுகளே. இந்நோட்டுகளை வணிகர்கள் வாங்க முன்வராததால் உணவுகள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  500, 2000, 20,000 போலிவியர் நோட்டுகள் இன்னும் மக்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை.

 ''வெளிநாடுகளின் சதியால் புதிய நோட்டுகள் மூன்று விமானங்களில் எடுத்துவருவது தாமதமாகியுள்ளது'' என அதிபர் நிகோலஸ் மதுரா குற்றம்சட்டியுள்ளார். வெனிசுலாவில் உள்ள 40 சதவிகித மக்களுக்கு வங்கிக்கணக்கு இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் குறைந்த அளவிலே உள்ளது. வெறுப்படைந்த மக்கள் கடைகள், சூப்பர் மார்கெட், மருந்தகங்களில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் பதற்ற சூழ்நிலை உருவானதால், 2017 ஜனவரி 2 வரை 100 நோட்டுகள் செல்லும் என அதிபர் அறிவித்துள்ளார். ஆனாலும் நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் குறையவில்லை.

அரசின் நடவடிக்கை எதிராக போராட்டம், பேரணி, கொள்ளை என அசாதரண சூழ்நிலை நிலவுவதால், போலீஸார் துப்பாக்கி சூட்டில் இறங்கினர். இதில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். கொள்ளை சம்வங்களில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     ''வெனிசுலாவை ஆட்சி செய்யும் இடதுசாரி அரசை வல்லாதிக்க நாடுகளின் உதவியுடன்  போராட்டகாரர்கள் கவிழ்க்க முயல்கின்றனர்'' என அதிபர் கூறியுள்ளார். 

அடுத்து என்ன ஆகுமோ!

 - ஆ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு