Published:Updated:

வெனிசுலா செய்ததும் இந்தியா செய்யாததும்! - மோடி நீங்கள் செய்வீர்களா?

Vikatan Correspondent
வெனிசுலா செய்ததும் இந்தியா செய்யாததும்! - மோடி நீங்கள் செய்வீர்களா?
வெனிசுலா செய்ததும் இந்தியா செய்யாததும்! - மோடி நீங்கள் செய்வீர்களா?

வெனிசுலா தனது நூறு 'பொலிவர் பில்' பணங்களை செல்லாது என்று அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனை அந்த நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். “இனிமேல் சில காலத்துக்கு நீங்கள் உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு 100 பொலிவர்களையே உபயோகித்துக் கொள்ளலாம்” என அந்த ஒளிபரப்பில் கூறியுள்ளார். இதனால் வெனிசுலாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 100 பொலிவர் பில் நோட்டுகள் மீண்டும் புழக்கத்தில் இருக்கும். பிரதமர் மோடி இந்தியாவில் இனிமேல் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி அறிவித்ததை அடுத்து வெனிசுலாவும் தனது 100 பொலிவர் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தனது 100 பொலிவருக்கு மாற்றாக 500 பொலிவர் புழக்கத்தில் இருக்கும் என அறிவித்தது வெனிசுலா அரசு. ஆனால் 500 பொலிவர்கள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே பழைய பொலிவர்கள் தடை செய்யப்பட்டது, அந்நாட்டில் மிகப் பெரிய பிரச்னையையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது. ”எண்ணெய் வளம் அதிகம் இருந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுசேர்ந்து, நாட்டை அதிபர் மதுரோ சீரழித்துவிட்டார்” என அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஒருங்கிணைந்த ஜனநாயக வட்டமேசை குற்றம்சாட்டியது. வங்கிகளில் வரிசையில் நின்ற மக்களும் தங்களிடம் இருந்த செல்லாத பணத்துக்கு மாற்றுப்பணம் கிடைக்காததால், போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் வெனிசுலாவில் 4 பேர் மரணமடைந்தனர். 286 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவை அனைத்தும் எதிர்க்கட்சியின் பொறுப்பற்ற நிலைப்பாட்டால்தான் நிகழ்ந்தது என அதிபர் மதுரோ குற்றம்சாட்டினார். மேலும் மாஃபியா கும்பல் இந்த 100 பொலிவர்களை வெனிசுலா நாட்டு எல்லைகளில் தவறாகப் பயன்படுத்துவதால்தான் இப்படியொரு முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக இன்று வரை வெனிசுலா எல்லைகளான கொலம்பியா மற்றும் பிரேசிலுடனான தொடர்புகள் போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உண்மையில், புதிதாக அறிமுகப்படுத்த இருந்த 500 பொலிவர்கள் நான்கு விமானங்களில் வர இருந்த நிலையில், அது தாமதமானதுதான் இத்தனைக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது.

உலகிலேயே அதிகபட்ச பணவீக்கத்தில் சிக்கித் தத்தளிக்கும் நாடு வெனிசுலா. தற்போது இருக்கும் 100 பொலிவர்களை நீக்கிவிட்டு, அதனைவிட 200 மடங்கு வரையிலான பொலிவர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருந்தது வெனிசுலா. தற்போது அங்கே மக்கள் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த பணமுடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவுடன் நம் நாட்டின் நிலையை ஒப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “இங்கே இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் இந்தியர்கள் கடைபிடிக்கும் பொறுமைக்கும், ஒழுக்கத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்!” என்று கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,”4 பேர் இறந்து விட்டார்கள் என்று தெரிந்ததுமே வெனிசுலா, தனது முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது. நமது பிரதமர் மோடி எப்போதும் இப்படியொரு முடிவை எடுக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் வெளியிட்ட உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் வங்கி வாசல்களிலும், ஏ.டி.எம். மையங்களின் முன்பு கியூ-வில் நின்றது போன்ற பல்வேறு நிகழ்வுகளில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஐஷ்வர்யா