Published:Updated:

ஆயுத மோதலைத் தவிர்க்க ஒருமித்த தீர்வு- சர்வதேச கருத்தொற்றுமை தின பகிர்வு !

ஆயுத மோதலைத் தவிர்க்க ஒருமித்த தீர்வு- சர்வதேச கருத்தொற்றுமை தின பகிர்வு !
ஆயுத மோதலைத் தவிர்க்க ஒருமித்த தீர்வு- சர்வதேச கருத்தொற்றுமை தின பகிர்வு !

ஆயுத மோதலைத் தவிர்க்க ஒருமித்த தீர்வு- சர்வதேச கருத்தொற்றுமை தின பகிர்வு !

இன்று...'சர்வதேச மனித கருத்தொற்றுமை தினம்'. கடந்த 2002-ம் ஆண்டு ஐ.நா. சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் டிசம்பர் 20-ம் தேதி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே...."  ஏதோ, தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையுடன் தொடர்புடையவை இந்த வரிகள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்.மக்களிடையே ஒற்றுமையை எப்போதுமே வலியுறுத்தி வந்த பாரதியார் மேலும்..

"பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொல் பான்மை கேட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!  

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்" 
- என்று தெரிவித்து தனது தேசிய ஒருமைப்பாட்டை மக்களிடையே விதைத்தார். 

"உலகளவிலான முக்கியப் பிரச்னைகளுக்கு கூட்டானதொரு தீர்வு தேவைப்படுகிறது. 
பல பிரச்னைகளில் வேறுபட்ட கருத்துகள் ஏற்படும்போது, ஆயுத மோதல் தொடங்கி, கட்டாய குடிபெயர்தல் வரை, பொதுநோக்கத்திற்காக மக்கள் ஒருவருக்கொருவர்  அச்சத்துடனேயே நீடிப்பதை வெகுகாலம் தொடர முடியாது" - ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், சர்வதேச மனித கருத்தொற்றுமை தினத்தை ஒட்டி தெரிவித்துள்ள கருத்து இப்படியாக உள்ளது. 
அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தாமல், உலக நாடுகள் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. பின்வாசல் வழியாக எந்தவொரு முக்கிய முடிவையும் திணித்து விட முடியாது.

'நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்' என்றும் புதிய கருத்துகளுடன் கூடிய தீர்மானத்தை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டு சர்வதேச மனித கருத்தொற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. வறுமை ஒழிப்பு, நாடுகளின் கௌரவத்தை உறுதிசெய்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து பூமியைப் பாதுகாத்தல் ஆகிய கருத்துகளும் ஐ.நா.-வால் இந்த நாளில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மனித உரிமைகள் அடிப்படையில், மக்களையும், பூமியையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் அல்லது அனைத்து நாடுகளுக்கும் உண்டு. வறுமை, பசி, நோய் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்க வேண்டியதும் சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமையாகும். இத்தகைய நோக்கங்களை நிறைவேற்ற உலக நாடுகளின் ஆதரவும், கருத்தொற்றுமையும் அவசியமாகிறது என்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

சர்வதேச கருத்தொற்றுமை தினம் என்பதை, 

"வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் நாள், சர்வதேச ஒப்பந்தங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் மதித்து நடப்பதை நினைவுகூரும் நாள், கருத்தொற்றுமையின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்பு உணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் நாள். வறுமையை முற்றிலுமாக ஒழித்தல் மற்றும் வளர்ச்சியுடன் கூடிய சாதனைகளுக்காக கருத்தொற்றுமையை ஊக்குவிக்கும் வழிகள் குறித்த விவாதத்தை ஆதரிக்கும் நாள் எனக் கொள்ளலாம்.

உலகமயமாதல் மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரித்துவரும் இப்போதைய கால கட்டத்தில், கருத்தொற்றுமை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து, மிக முக்கியமான பிரச்னைகளில் விவாதித்து, கருத்தொற்றுமை ஏற்படுவதன் மூலம் மட்டுமே பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

ஐ.நா. உருவாக்கப்பட்டதன் நோக்கமே உலக நாடுகளிடையே ஒற்றுமையை மேம்படுத்துவது தான். அதுபோன்ற சூழ்நிலையில் பல்வேறு விஷயங்களில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உள்ள நிலைப்பாட்டை அறிந்து, அவற்றில் இருந்து, சாத்தியமானதொரு கருத்தை உருவாக்கி, அதனை எல்லா நாடுகளுமே ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவே சர்வதேச கருத்தொற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

- சி.வெங்கட சேது 

அடுத்த கட்டுரைக்கு