Published:Updated:

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆட்சேபனை இல்லை:இலங்கை

Vikatan Correspondent
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆட்சேபனை இல்லை:இலங்கை
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆட்சேபனை இல்லை:இலங்கை
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆட்சேபனை இல்லை:இலங்கை

கொழும்பு: கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று  இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர்  சம்பிகா ராணாவாகா,கூடங்குளம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின்  நிலையங்கள் இலங்கைக்கு கவலை அளிப்பதாக உள்ளதாகவும், இவற்றில் பிரச்னை  ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும் என்றும், எனவே இது குறித்து  சர்வதேச  அணுசக்தி ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாகவும் கூறியதாக செய்திகள்  வெளியானது.

இந்நிலையில், இலங்கை அமைச்சர் ரணவாக கூறியதாக வெளியான இந்த தகவல்  அடிப்படை ஆதாரமற்றது என்றும், கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எந்தவித  ஆட்சேபனையும் இல்லை என்றும்,இலங்கை அணுசக்தி ஆணைய தலைவர் ஆர்.எல்.  விஜயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

"இந்தியாவும் இலங்கையும் சர்வதேச அணுசக்தி முகமையில் உறுப்பு நாடுகளாக  உள்ளன.மின் உற்பத்திக்கு அணுசக்தியை பயன்படுத்தவேண்டிய அவசியத்தை இலங்கை  நன்கு புரிந்து உள்ளது.மின்சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக அணுசக்தி தொழில்  நுட்பத்தை பயன்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.


இந்திய மண்ணில் உள்ள எந்த ஒரு அணுமின் நிலையத்தையும் இலங்கை  எதிர்க்கவில்லை.அது இந்தியாவுக்கு உள்ள இறையாண்மை உரிமையாகும்.  இலங்கையை ஒட்டி,இந்தியாவில் பல்வேறு அணுமின்நிலையங்கள் உள்ளன.இந்த  விஷயத்தில், இந்தியாவுடன் இலங்கை பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு  உள்ளது.

அணுமின்நிலையங்களின் நிலைமை மற்றும் அவசர திட்டங்கள் குறித்த தகவல்களை  பரிமாறிக் கொள்ளவும், ஒரு வேளை இந்தியாவில் அணுவிபத்து ஏற்பட்டால் உதவி  பெற்றுக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் பயன்படும்” என்று அவர் மேலும் கூறினார்.