Published:Updated:

இலங்கையில் இந்திய எம்,பி.க்கள் குழு...! முகாம் தமிழர்களை சந்திக்க திட்டம்

Vikatan Correspondent
இலங்கையில் இந்திய எம்,பி.க்கள் குழு...! முகாம் தமிழர்களை சந்திக்க திட்டம்
இலங்கையில் இந்திய எம்,பி.க்கள் குழு...! முகாம் தமிழர்களை சந்திக்க திட்டம்
இலங்கையில் இந்திய எம்,பி.க்கள் குழு...! முகாம் தமிழர்களை சந்திக்க திட்டம்

கொழும்பு: ஆறு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள்  குழு,போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்தித்துப்  பேசவும் திட்டமிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழு நேற்றிரவு கொழும்பு விமான நிலையத்தை  வந்தடைந்தது.
 
இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான  இத்தூதுக்குழுவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
 
டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் நேற்றிரவு  10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர்.
 
இத் தூதுக்குழுவினரை இலங்கையின் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் நியோமால்  பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் கே காந்தா ஆகியோர்  வரவேற்றனர்.

இன்று காலை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிசையும்,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார்கள்.

தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் குழு செல்கிறது.அங்கு  சபாநாயகர் சமல் ராஜபக்சேவை சந்திக்கிறார்கள்.அவர் எம்.பி.க்களுக்கு மதிய விருந்து  அளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை வடக்குப் பகுதி தமிழ்தேசிய கூட்டணி பிரதிநிதிகளையும்,  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்  நிர்வாகிகளையும் அவர்கள் சந்திக்கிறார்கள்.

அதன் பிறகு வடக்கு பகுதியில் ரெயில்வே சார்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும்  மதவாச்சி செல்கிறார்கள்.முல்லைத் தீவு பகுதியையும் பார்வையிடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்துக்கும் சென்று தமிழ் எம்.பி.க்களையும், மனித உரிமைசங்க  பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்கள்.யாழ்ப்பாணத்தில் இரவு  தங்குகிறார்கள்.

ஏப்ரல் 19 ம் தேதி காங்கேசன்துறை துறைமுகம் செல்கிறார்கள்.அங்கு இந்திய அரசு  சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள்.  காங்கேசன்துறை துறைமுகத்துக்கும்,தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும்  இடையே வர்த்தக தொடர்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான பணி அங்கு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே நாளில் களுத்துறையில் தென்னக ரெயில்வே சார்பில் நடைபெறும் பணிகளை  பார்வையிட்ட பின்பு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து  பேசுகிறார்கள்.

20 ம்தேதி கிழக்கு மற்றும் மலை பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களை  சந்திக்கிறார்கள்.சமீபத்தில் காந்திசிலை உடைக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதிக்கும் சென்று  மாகாண முதல்வரான சிவனேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்து பேசுகிறார்கள்.

21 ம் தேதி காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து  கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.எனினும் இந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்ய குழு  உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை ரத்து செய்யும்படியும், 20 ம் தேதி மாலை ஜனாதிபதி மஹிந்தவை சந்திக்க  ஏற்பாடு செய்யும்படியும் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இந்தக் குழு,போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள  தமிழர்களை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளனர்.