Published:Updated:

மாவோ - புரட்சிகளுக்கு சொந்தக்காரன்! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

மாவோ - புரட்சிகளுக்கு சொந்தக்காரன்! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
மாவோ - புரட்சிகளுக்கு சொந்தக்காரன்! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

ருநாள் வயலில் நெற்கதிர்களைக் காயவைத்துக் கொண்டிருந்த சமயம்... திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது ஷன்செங்... அவர் மகனிடம், ‘‘உடனடியாக கதிர்களை அப்புறப்படுத்து. இல்லையென்றால் மழை நாசம் செய்துவிடும்’’ என்றார். அவனும், விரைவாக கதிர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான். திடீரென்று, அவனைக் காணவில்லை. தந்தை, வயல் முழுவதும் தேடினார். எங்குத் தேடியும் அவன் கிடைக்காததால்... ஷன்செங், மற்ற வேலையாட்களைவைத்து நெற்கதிர்களைப் பாதுகாப்பாக வீடு கொண்டுபோய்ச் சேர்த்தார்.

மழை நின்றது... மகன் வந்தான். ‘‘எங்கு சென்றாய்? உன்னிடம் நான் என்ன சொன்னேன்’’ என்று தந்தை கோபத்துடன் கேட்டார். ‘‘அப்பா... நம்மிடம் வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள், இந்த வேலையைச் செய்வார்கள். ஆனால், பக்கத்து நிலத்தில் இருப்பவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு உதவவே அங்குச் சென்றேன். விளைபொருள்கள் நாசமாகிவிட்டால் அவர்களால் ஈடு செய்ய முடியாது. குத்தகை பணம்கூட கொடுக்க முடியாது’’ என்று நிதானமாகப் பதில் சொன்னான், அவன். ‘‘உனக்கு உன்வீடு முக்கியமா... இல்லை, அவர்களுடைய வீடு முக்கியமா’’ என்று மீண்டும் கோபத்துடன் கேட்டார் ஷன்செங். ‘‘அவர்கள் வீடுதான் முக்கியம்’’ என சட்டென சொன்னான் அவன். இப்படிப் பதில் சொன்னவர் வேறு யாருமில்லை. சீன மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மாவோ என்ற மா சே துங். அவருடைய பிறந்த தினம் இன்று.

வாழ்க்கையின் ஆரம்ப காலம்!

மாவோ, 1893-ம் ஆண்டு ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில்... மா ஷென்செங் - வென் குய்மெய் என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்த மாவோ, ஆசிரியரின் அடிக்குப் பயந்து பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து... மாவோவின் பெற்றோர்கள் அவரைக் கண்டுபிடித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர, ‘‘பள்ளிக்கு செல்லமாட்டேன்’’ என்றார் மாவோ. காரணம், ஆசிரியர் அடிப்பார் என்ற பயம். ஆனால் அந்த ஆசிரியர், ‘‘இனி உன்னை அடிக்கமாட்டேன் நீ பள்ளிக்கு வா’’ என்றார். அதன்பிறகு, மாவோவும் பள்ளிச் செல்ல ஆரம்பித்தார். பகலில், பள்ளிக்கூடம்... இரவில், விவசாயம். படிப்பை முடித்ததும் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின், பீகிங் பல்கலைக்கழக நூலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இப்படியாகக் கழிந்தது அவருடைய வாழ்க்கையின் ஆரம்ப காலம்.

சன்யாட் சென் புரட்சி!

‘வேர்ட்ஸ் ஆஃப் வார்னிங்’ (எச்சரிக்கை தரும் வார்த்தைகள்) என்கிற புத்தகம் மாவோவுக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். இதிலிருந்துதான் சீனாவின் அப்பட்டமான பலவீனங்களையும், மேற்கத்திய நாடுகளின் பலங்களையும் நன்றாகத் தெரிந்துகொண்டார். 17-ம் நூற்றாண்டு முதல் சீனாவை ஆண்டுவந்த ஷிங் வம்சம், மக்களுக்கு எதிரான பல சீர்கேடுகளை நடத்திக்கொண்டிருந்தது. அது, நாட்டை அழிவின் பாதையில் கொண்டு செல்ல வழிவகுத்தது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், 1911-ம் ஆண்டு மன்னர் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தனர். இதன் காரணமாக எழுந்ததே சன்யாட் சென் புரட்சி. இதன் தாக்கத்தால்... மன்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சீனா மக்களாட்சி நாடாக மாறியது. பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில், அந்தப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களால்... ஒற்றுமையான அரசை ஏற்ப்படுத்த முடியவில்லை. இதனால் சீனாவில் உள்நாட்டுப் பிரச்னைகள் அதிகமாக எழத் தொடங்கின. இது, உள்நாட்டுப் போருக்குக் காரணமாக அமைந்தது. இதையெல்லாம் 18 வயதான மாவோ உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார். 

‘சீன பொதுவுடைமைக் கட்சி!’

இதற்கிடையில், மாவோ இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு... 1920-ம் ஆண்டு பொதுவுடைமை கொள்கைக்காரராக மாறினார். பின், மாவோ உட்பட 12 பேர் இணைந்து 1921-ம் ஆண்டு, ‘சீன பொதுவுடைமைக் கட்சி’யைத் தோற்றுவித்தனர். 1931-ம் ஆண்டு புரட்சிப்படை ஒன்றைத் தோற்றுவித்து ஆயுத பயிற்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கான பணிகள் ஆகியவற்றை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை, அப்போது சீனாவின் அதிகாரத்தில் இருந்த சியாங் கே-ஷேக் அறிந்துகொண்டு ராணுவத்தின் மூலம் மாவோவுக்குப் பல பிரச்னைகளைக் கொடுத்தார். இதன் காரணமாக, தன் புரட்சிப் படையுடன் 8 ஆயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார் மாவோ. இந்தப் பயணத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலர் மாவோவுடன் தன்னை இணைத்துக்கொண்டனர். இதன்மூலம், மாவோவின் செல்வாக்கு சீனா முழுவதும் பரவத் தொடங்கியது. 1934-ம் ஆண்டு சீனப் பொதுவுடைமை கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், சியாங் கே-ஷேக்-க்கு எதிராகப் பல போராட்டங்களைச் செய்து... சீனாவை, மக்கள் ஆட்சி நாடாக ஏற்படுத்த வேண்டும் என்பதிலேயே அவரது எண்ணமாக இருந்தது.

இரண்டாம் உலகப்போர்!

இந்த நிலையில்தான் 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தது. ஜப்பான், சீனாவைத் தாக்கியது. சீனாவுக்கு, அடிகள் விழத்தொடங்கின. இந்த நிலை தொடருமானால்... சீனாவை, ஜப்பான் அழித்துவிடும். ஆனால், தன்னிடம் உள்ள படையும், ஆயுதங்களும் ஜப்பானை தாக்குவதற்குப் போதாது என நினைத்த மாவோ, நமது உள்நாட்டுப் பிரச்னையை பின்பு வைத்துக்கொள்வோம். முதலில், ஜப்பானிடமிருந்து சீனாவைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு, நாம் இனைந்து ஜப்பானோடு போர் புரிய வேண்டும் என சியாங் கே-ஷேக்கிடம் சொன்னார். அவரும் சம்மதிக்க, இருவரின் படைகளும் இணைந்து... ஜப்பானோடு சண்டை போட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியை சந்தித்தது. சீனாவோடு நடந்த யுத்தமும் முடிவுக்கு வந்தது. மீண்டும், உள்நாட்டுச் சண்டை ஆரம்பித்தது. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தன் படை வீரர்களோடு இணைந்து மாபெரும் கொரில்லா யுத்தம் நடத்தி சியாங் கே-ஷேக்கைத் தோல்வியடையச் செய்தார். இதனால் சியாங் கே-ஷேக் நாட்டைவிட்டுத் தப்பியோடினார். 1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சீனா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. சீனக் குடியரசின் முதல் அதிபராக மாவோ பதவியேற்றார்.

சீன வளர்ச்சிக்குப் பாடுபட்டார்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்பட்டிருந்தன. பொருளாதாரத்தில், வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்தது. மக்கள், வறுமையால் வாடினர்; படிப்பறிவு இல்லாமல் இருந்தனர். இந்தப் பிரச்னைகளைக் களைந்து சீனாவை எப்படிச் சர்வ வல்லமை படைத்த நாடாக மாற்ற முடியும் என்ற எண்ணமே மாவோவுக்கு மேலோங்கி இருந்தது. இவை, அனைத்தும் மிகப்பெரிய சவால்களாக அவர் முன் இருந்தன. சீனாவை வளமிக்க நாடாக மாற்றச் சில திட்டங்களைக் கையிலெடுத்தார். ஆனால், அவை தோல்வியில் முடிந்தன. ‘‘அதிகம் படிப்பறிவு இல்லாத நம் மக்களிடத்தில் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்தது என் தவறுதான்’’ என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 1961-லிருந்து 1963 வரைக்கும் ஏற்பட்ட பஞ்சத்தில் கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். இதனால், ‘‘மக்களுக்கு முதலில் படிப்பைப் பற்றியும், விவசாயத்தின் வளர்ச்சி பற்றியும் புரியவைக்க வேண்டும்’’ என்றார். பின், சீனா சீரான வளர்ச்சிப் பெற ஆரம்பித்தபோது... மாவோ, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1976-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் நாள் இறந்தார். அவர், ஆசைப்பட்டதுபோலவே இன்று... சீனா பலம் வாய்ந்த உலக நாடுகள் வரிசையில் இடம்பிடித்துள்ளது. 

சீனாவின் வளர்ச்சிக்குக் காரணமான மாவோ, சீனர்கள் மனதில் என்றும் நிலைகொண்டிருப்பார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

- ஜெ.அன்பரசன்