Published:Updated:

'அவமதிக்கும் அதிகாரம்!' டொனால்ட் டிரம்பை விமர்சித்த மெரில் ஸ்ட்ரீப்

'அவமதிக்கும் அதிகாரம்!' டொனால்ட் டிரம்பை விமர்சித்த மெரில் ஸ்ட்ரீப்
'அவமதிக்கும் அதிகாரம்!' டொனால்ட் டிரம்பை விமர்சித்த மெரில் ஸ்ட்ரீப்


ஹாலிவுட் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் நிகழ்த்தப்படும் உரைகள், பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். 'கோல்டன் குளோப்' விருது விழாவில் ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான மெரில் ஸ்ட்ரீப்பின் உரை, அப்படித்தான் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.  

2015-ம் ஆண்டு, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் மாற்றுத்திறனாளி பத்திரிகையாளரை டொனல்ட் ட்ரம்ப் கேலி செய்ததை தன் உரையில் வைத்துப் பேசிய ஸ்ட்ரீப், சென்ற ஆண்டு அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ட்ரீப் மேடைக்கு வந்தவுடன் அரங்கமே அதிர்கிறது. மென்மையான குரலில் பேச ஆரம்பிக்கிறார் அவர்.

''அமருங்கள். தயவுசெய்து அமருங்கள். லவ் யூ ஆல். நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். சென்ற வார இறுதியில் நான் கத்திப் புலம்பியதால் என் குரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வருட ஆரம்பத்தில் என் நினைவும் சில நேரங்களில் பலவீனமாகிவிடுகிறது. அதனால் நான் படிப்பதற்கான விஷயங்களை எழுதி வைத்திருக்கிறேன்.

ஹாலிவுட்டுக்கு நன்றி. ஹக் லாரி கூறியதுபோல, நீங்களும் மற்றும் நாம் அனைவரும் அமெரிக்காவின் அதிகம் குறை கூறப்பட்ட சமூகத்தில் இப்போது இருக்கிறோம். ஹாலிவுட், வெளிநாட்டவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதைப்பற்றி யோசியுங்கள். 


ஆனால், நாம் யார்? ஹாலிவுட் என்பது என்ன? வெளியில் இருந்து வந்த பல நபர்களால் சூழப்பட்ட அமைப்புதான் அது. நான் பிறந்து, வளர்ந்து, பப்ளிக் ஸ்கூலில் படித்தது எல்லாம் நியூ ஜெர்ஸியில். வியோலா பிறந்தது தெற்கு கரோலினாவில்; வளர்ந்தது ரோட் தீவில். சரா பால்சன் பிறந்தது ஃப்ளோரிடாவில், 8 குழந்தைகளில் ஒருவராக ஓஹியோவில் வளர்ந்தார். ஏமி ஆடம்ஸ் இத்தாலியில் பிறந்தவர், போர்ட்மேன் ஜெருசலத்தில் பிறந்தவர். இவர்களது பிறப்பு சான்றிதழ்கள் எங்கே? மேலும், அழகான ரூத் நேகா அபாபாவில் பிறந்தவர், லண்டனில் வளர்ந்தவர்... இல்லை அயர்லாந்து என நினைக்கிறேன். ஆனால் அவர் இங்கு விர்ஜீனியாவின் சிறு கிராமத்துப் பெண்ணாக நடித்ததற்காக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேவ் பட்டேல் கென்யாவில் பிறந்து லண்டனில் வளர்ந்து, டாஸ்மானியாவில் வளர்ந்த இந்தியராக நடித்துள்ளார். 

ஆக, ஹாலிவுட் என்பது வெளிநாட்டவர்களால் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவரையும் நீக்கிவிட்டால், நம் பொழுதுபோக்குக்கு ஃபுட்பாலும், மார்ஷியல் ஆர்ட்ஸும்தான் மிச்சமாக இருக்கும். அந்த இரண்டுமே கலை அல்ல. 

ஒரு நடிகரின் ஒரே வேலை, நம்மில் இருந்து வேறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு, நம் கதாப்பாத்திரத்தின் உணர்வுகளைக் கடத்த வேண்டும். அதை மிகச் சிறப்பாக, அர்ப்பணிப்புடன் செய்த நடிகர்கள் பலர். 

ஆனால், ஒருவரின் திறனைக் கண்டு நான் வியந்துவிட்டேன்.  என் மனதை ஆழமாகக் குத்திக் கிழித்துவிட்டது. அது நன்றாக இருந்தது என்பதற்காக அல்ல. சொல்லப்போனால், அதில் நல்ல விஷயம் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ஆனால் அதன் தாக்கம் அதிகம். அது தன் நோக்கத்தைச் செய்துமுடித்தது. இந்த நாட்டின் முக்கிய நாற்காலியில் அமர்ந்திருப்பவர், ஒரு மாற்றுத்திறனாளி பத்திரிகையாளரை கேலி செய்த தருணம்தான் அது.

அது என் இதயத்தை நொறுக்கியது. இப்போதும் அதை என் நினைவைவிட்டு நீக்க முடியவில்லை. ஏனெனில், அது திரைப்படமல்ல; நிஜம். ஒரு மாற்றுத்திறனாளியை, அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் அவமானப்படுத்தும்போது, அது மற்றவர்களும் அதைச் செய்வதற்கான அனுமதியை வழங்குகிறது. 

அவமரியாதை, அவமரியாதைக்கு அழைப்பு விடுக்கிறது. வன்முறை வன்முறைக்கு வழிவகுக்கிறது. இவற்றையெல்லாம் அதிகாரம் படைத்தவர்கள் செய்யும்போது, நம்மை அங்கு நாம் இழக்கிறோம். சரி... இப்படியே செல்வோம்.

சரி... இதுதான் என்னைப் பத்திரிகையாளர்களிடம் பேச வைத்தது. அதிகாரத்தை வேலைசெய்ய வைப்பது மீடியாவின் கடமை. அவர்களை ஒவ்வோரு நிகழ்வின்போதும் வரவழைத்து கேள்வி கேட்க அனுமதியுங்கள். அதுதான் ஓர் ஆட்சியின் சுதந்திரம். அதனால்தான் கூறுகிறேன், அனைவரும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க ஓர் அணியாக உருவெடுப்போம். ஏனேன்றால் உண்மையை உரக்கச் சொல்ல அவர்கள் நமக்குத் தேவை.

எனது தோழி பிரின்ஸஸ் லியா ஒருமுறை கூறியது போல, உடைந்த இதயங்களை எடுத்து ஒட்டவைத்து, கலையாக மாற்றுவோம். நன்றி!"

வெளிப்படையான இந்த அரசியல் உரையை சிலர் உடனடியாக விமர்சித்தாலும், பார்வையாளர்கள் ஸ்ட்ரீப்புக்குத் தந்தது, பலமான கைதட்டல்! 

- ச.ஸ்ரீராம்