Published:Updated:

குடியேறிகள், அகதிகளுக்கு அமெரிக்கா தடை விதிப்பது முதல்முறையல்ல..!

விகடன் விமர்சனக்குழு
குடியேறிகள், அகதிகளுக்கு அமெரிக்கா தடை விதிப்பது முதல்முறையல்ல..!
குடியேறிகள், அகதிகளுக்கு அமெரிக்கா தடை விதிப்பது முதல்முறையல்ல..!

மெரிக்கா அதிபராக பதவி ஏற்றத்தில் இருந்து பல அதிரடி முடிவுகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார். ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் பயணிகள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு அதிபர் ட்ரம்ப் தடை விதித்தது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.  இவரது சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு அமெரிக்காவுக்குள்ளும், உலகம் முழுவதிலிருந்தும் பல கண்டனங்கள் குவிந்தாலும் ட்ரம்ப் அசரவில்லை. அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதை 120 நாட்களுக்கு தடை விதித்துள்ளதுடன், மறுஉத்தரவு வரும் வரை சிரியா அகதிகள் அமெரிக்காவுக்கு வரக்கூடாது எனவும் அறிவித்துள்ளார் ட்ரம்ப்.  

ட்ரம்பின் முடிவுக்கு இப்போது அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனினும், அமெரிக்காவுக்கு குடியேற வருபவர்களையும், அகதிகளை தடுப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 200 வருடத்தில் பல அமெரிக்க அதிபர்கள், குடியேறியவர்களுக்கு எதிராகவும், அகதிகளுக்கு எதிராகவும் பல தடைகளை விதித்துள்ளனர். குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தடுக்க ஐந்து முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது..

சீனர்களுக்கு எதிரான சட்டம்

1882-ம் ஆண்டு அமெரிக்காவில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. அப்போது அமெரிக்காவில் வேலைபார்த்த சீனர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் வேலையின்மை பிரச்னைக்கும், பொருளாதார இடர்பாடுகளுக்கும் சீனர்கள்தான் காரணம் என அமெரிக்கர்கள் சுட்டிக்காட்டினர். இதனால், அமெரிக்காவில் பணியாற்றிவந்த சீன பணியாளர்களை வெளியேற்றும் சட்டத்தை அப்போதைய அதிபர் செஸ்டர் ஏ ஆர்தர் கொண்டு வந்தார்.  அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சீன பணியாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடைவிதித்து மற்றொரு சட்டத்தையும் இயற்றினார். இச்சட்டம் 1892-ம் ஆண்டு காலாவதியான நிலையில், மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 1943-ம் ஆண்டில் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, சீன குடியேறிகள் மீண்டும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

யூதர்களைத் திரும்ப அனுப்பிய அமெரிக்கா!

இரண்டாம் உலக போரின் போது 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளான நிலையில்,  வாழ அமைதியான இடம் தேடி அலைந்தனர். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வாதிட்டார். அமெரிக்காவுக்கு வரும் ஜெர்மன் யூதர்களுடன் நாஜி ஒற்றர்களும் வருவதால், கடும் கண்காணிப்புக்கு பிறகு ஆண்டுக்கு 26,000 யூதர்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு அனுமதிக்கப்படுவர் என பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் அறிவித்தார்.
இக்காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு கப்பலில் வந்துகொண்டிருந்த 937 யூத அகதிகளை அனுமதிக்காமல் அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியது. வேறு வழியில்லாமல் அக்கப்பல் ஐரோப்பா கண்டம் நோக்கிச் சென்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஐரோப்பா திரும்பும் வழியில் கப்பலில் பயணம் செய்த பாதிக்கும் மேற்பட்ட யூத அகதிகள் இறந்து போயினர்.

கம்யூனிஸ்ட்களுக்கு தடை!

 1950-ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் படி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என நம்பப்படுகிற குடியேறிகள் அமெரிக்காவில் வெளியேற்றப்பட்டனர்.   மேலும் கம்யூனிச அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமெரிக்க குடிமக்கள் ஆக அனுமதிக்கப் படவில்லை.  அரசியலமைப்புக்கு முரணான இச்சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1993-ம் ஆண்டு ரத்து செய்தது. ஆனால், இச்சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

ஈரானை பழிவாங்கிய அமெரிக்கா

1979-ம் ஆண்டு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகம்  தாக்கப்பட்டு, அங்கிருந்த 52 அமெரிக்கர்கள் 444 நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், ஈரான் உடனான ராஜதந்திர உறவுகளை வெட்டி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஈரான் நாட்டு மக்கள் நுழைய தடையும் விதிக்கப்பட்டது.

ஆப்ரிக்கர்களுக்கு எதிரான இனவெறி

1987-ல் எச் ஐ வி வைரஸ் ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலமும், சுவாச தொடர்பாலும் பரவும் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இதன் காரணமாக எச் ஐ வியால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. ஆப்பிரிக்கர்கள் மீதான இனவெறியால் இச்சட்டம் இயற்றப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. 2009-ம் ஆண்டு ஒபாமா அதிபராக இருந்தபோதே இத்தடை நீக்கப்பட்டது.

இனவெறி இன்னும் தொடர்கிறது...

- ஆ.நந்தகுமார்