Published:Updated:

அழகான மக்கள், அருமையான அரசு... வாவ் உலகின் மகிழ்ச்சியான நாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அழகான மக்கள், அருமையான அரசு... வாவ்  உலகின் மகிழ்ச்சியான நாடு!
அழகான மக்கள், அருமையான அரசு... வாவ் உலகின் மகிழ்ச்சியான நாடு!

அழகான மக்கள், அருமையான அரசு... வாவ் உலகின் மகிழ்ச்சியான நாடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழீழ விடுதலைப் போரில், நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத மேற்கு ஐரோப்பிய நாடான நார்வே சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இலங்கை விவகாரத்துக்கு இந்த நாடு ஏன்.. இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்கிற எண்ணம் நமக்குள் எழாமல் இல்லை. சண்டை சச்சரவுகளை சற்றும் விரும்பாத நார்வே மக்கள், உலகில் எங்கே போர் நடந்தாலும் அதனை விரும்புவதில்லை. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையே இலக்காகக் கொண்டு இயங்கும் அரசுகளைக் கொண்டவை மேற்கு ஐரோப்பிய நாடுகள். 'மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா... அவர்களை மேன்மேலும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமெ'ன்று ரூம் போட்டு யோசிக்கும் நாடுகள் அவை. 

உலகின் மகிழ்ச்சியான மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில். கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த நார்வே இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் சுதந்திரம், சுகாதாரம், கல்வி வாய்ப்பு, ஒற்றுமை, நல்லாட்சி, பெருந்தன்மை, வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் உரிமை, வருவாய் போன்றவற்றை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில்  நார்வே மக்கள்தான் உலகிலேயே  மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஐ.நா. வெளியிட்டுள்ள இந்தப்  பட்டியலில் அடுத்த நான்கு இடங்களைப் பிடித்திருக்கும் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து நாடுகளும் மேற்கு ஐரோப்பாவைச் சார்ந்தவைதாம். 

'கிங்டம் ஆஃப் நார்வே' என்று அழைக்கப்படும், இந்த நாட்டின் தலைநகர் ஓஸ்லோ. சுமார் 3 லட்சத்து 23 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய நாடு. மக்கள்தொகை வெறும் 50 லட்சம்தான். சென்னையை விடக் குறைவு. பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். நார்வேயியன் தாய் மொழி. சராசரி வாழ்நாள் ஆண்களுக்கு 79 ;பெண்களுக்கு 83 வயது. க்ரோன் என்பது இந்த நாட்டின் பணம். ஸ்வீடன், பின்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நார்வே எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. 

மலைகளையும் கழிமுகங்களுடன் கூடிய நீண்ட கடற்கரையைக் கொண்ட நாடு நார்வே. குளிர் பிரதேசம். நாட்டின் மேற்புற கடலில் எரிவாயு நிரம்பியிருப்பது 1960ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  நார்வே நாட்டில் அப்போதிருந்தே செல்வம் கொழிக்கத் தொடங்கியது.   உலகிலேயே அதிகமாக எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் 7வது நாடு இது. இயற்கை எரிவாயு உற்பத்தியில் 3வது இடம். நாட்டின் மொத்த வருவாயில் 15 சதவீதம் எண்ணெய் உற்பத்தி வழியாகக் கிடைக்கிறது.

மீன்வளமும் கொட்டிக்கிடக்கிறது. மீன்பிடி தொழிலும் பிரதானம். நார்வே நாட்டில் பத்திரிகைத் தொழிலும் முக்கியமானது. அத்தனை மக்களுமே பத்திரிகைகளை விரும்பிப் படிக்கிறார்கள். 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டியில் இருந்து ஏராளமான பத்திரிகைகள் வெளியாகின்றன. நார்வே மக்கள் கடலோடிகள். சுற்றுலா பிரியர்கள். 'ஸ்கான்டிவிடியன் ஏர்லைன்' இந்த நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து. நாட்டில் கல்வித்துறையும் சிறப்பானது. மாணவர்கள் கல்வி கற்க விரும்பும் நாடுகளில் உலகில் நார்வே நாட்டுக்கு 10வது இடம். 97 சதவீத நார்வே மக்கள் இணைய வசதியைப் பெற்றிருக்கிறார்கள். 

உலகில் எந்தப் பிரதேசத்தில் போர் நிகழ்ந்தாலும் அங்கே சென்று நார்வே நாடு சமரசத்தில் ஈடுபடும். உலக மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு நாடு. இஸ்ரேல்- பாலஸ்தீனம், தமிழீழ விவகாரத்திலும் நார்வே நாடுதான் சமரசத்தில் ஈடுபட்டது. இது தவிர, லிபியா, ஆப்கானிஸ்தான் போர்களின் போதும் தனது படைகளை அனுப்பியுள்ளது நார்வே. ராணுவத்தில் மொத்தமே 25 ஆயிரம் வீரர்- வீராங்கனைகள்தாம் உள்ளனர். குட்டி ராணுவமாக இருந்தாலும் உலகம் முழுக்க நார்வே ராணுவம் சென்று சேவை ஆற்றும். சமாதானத்தை விரும்பும் நாடுதானே சமாதானத்தை விதைக்க முயலும்... அந்த வகையில் நார்வே உலகுக்கே முன்மாதிரி!

நார்வேயில் மன்னர் ஆட்சியுடன் கூடிய மக்கள் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 1991ம் ஆண்டு மன்னர் நான்காம் ஓலவ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரின் மகன் இளவரசர் ஹெரால்ட் மன்னர் ஆனார். இவர் ஒரு யாட்ச் வீரர். மியூனிச் ஒலிம்பிக் உள்பட 3 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவரை மணக்காமல் சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். தற்போது வயது 80 ஆகிறது. நார்வே நாட்டில் ஒரு பெண்தான் பிரதமர்.  எர்னா சோல்பர்க், கடந்த 2013ம் ஆண்டு நார்வே நாட்டின் பிரதமர் ஆனார். இவரது அமைச்சரவையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். பெண் சக்திக்கு முக்கியத்தும் கொடுக்கும் நாடு. 

நார்வே மக்களின் ஆண்டு வருவாய் 71 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். தரமான வாழ்க்கை மக்களுக்குக் கிடைக்கிறது. நாட்டில் தனியார்த் துறையும் அரசுத் துறை நிறுவனங்களும் சிறப்பாக இயங்குகின்றன. நீர் மின் நிலையங்கள் வழியாக மின்சார உற்பத்தி முக்கிய தொழில். கப்பல் கட்டும் தொழிலும் எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளும் ஏராளம் இருக்கின்றன. சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு அரசே எல்லாவித உதவிகளையும் செய்யும். மாணவர்களுக்கு பல்கலைக்கழகப் படிப்பு வரை லோன் வழங்கப்படும். படிப்புக்குத் தடையே கிடையாது.

அதேபோல் நல்ல மருத்துவ வசதி, சுகாதாரத்தில் அரசு மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறது. முதியவர்களைப் பார்த்துக்கொள்வதற்கு கூட அரசே மருத்துவமனைகளுக்கு நிதி அளிக்கிறது. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்; மக்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தானே மகிழ்ச்சியாக வாழ முடியும். அதனால்தான் மக்கள் உடல் நலனில் நார்வே அரசு இத்தனை அக்கறை செலுத்துகிறது. செக்ஸ் உள்ளிட்ட பலவற்றில் மக்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. தன்பாலினத் திருமணம்கூட இங்கே சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

-எம்.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு