Published:Updated:

ஐ.எஸ்.ஐ.எஸ் காதலனை மணக்க சிரியா பறந்த எஃப்.பி.ஐ ஊழியர்!

ஐ.எஸ்.ஐ.எஸ் காதலனை மணக்க சிரியா பறந்த எஃப்.பி.ஐ ஊழியர்!
ஐ.எஸ்.ஐ.எஸ் காதலனை மணக்க சிரியா பறந்த எஃப்.பி.ஐ ஊழியர்!

அமெரிக்காவின் மிகப் பலம் பொருந்திய உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ. இந்தியாவில் சி.பி.ஐ எப்படியோ, அதுபோல அமெரிக்காவுக்கு எஃப்.பி.ஐ. இன்னும் சொல்லப்போனால், சி.பி.ஐ-யைக் காட்டிலும் அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு எஃப்.பி.ஐ. இதில், மொழிபெயர்ப்பாளராக, உயர் ரகசிய பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த பெண் ஊழியர் ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியுடன் காதலில் விழுந்து, சிரியா சென்று திருமணம் செய்துகொண்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. எஃப்.பி.ஐ அதிகாரியையே மனம் மாற்றித் திருமணம் செய்யும் அளவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செயலாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம், எஃப்.பி.ஐ மீதான மதிப்பைக் குறைத்து விடும் என்பதால், அந்தச் செய்தி வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டது. ஆனால், தற்போது வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் வெளியாகவே, டேனியலா க்ரீன் என்ற அந்தப் பெண் பற்றிய விவரம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 

38 வயதான க்ரீன், செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்தவர். பின்னர், ஜெர்மனியில் குடியேறி வசித்து வந்தார். அமெரிக்க ராணுவ வீரருடன் காதல் திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா வந்தார். காதல் திருமணம் விவாகரத்தில் முடியவே, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ-யில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்துள்ளார். 

ஜெர்மனியைச் சேர்ந்த ராக் பாடகர் டென்னிஸ் காஸ்பெர்ட், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக தனது பெயரை அபு தல்லா அல் அல்லைன் என்று மாற்றிக் கொண்டார். பின்னர், சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ளவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்க்கும் பணியை இவர் செய்து வருகிறார். 

ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் ஆள் சேர்க்கும் வேலை செய்யும் அபு ஜெர்மனியைச் சேர்ந்தவன் என்பதால், அவனைக் கண்காணிக்கும் பணி க்ரீனுக்கு அளிக்கப்பட்டது. இரண்டு ஸ்கைப் அக்கவுன்ட் மூலம் அபுவுடன் பேசி வருவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், மூன்றாவதாக ஒரு அக்கவுன்ட் ஓப்பன் செய்து அதில் சேட் செய்திருக்கிறார் க்ரீன். ஆனால், எஃப்.பி.ஐ-யில் பணியாற்றி வருவதை க்ரீன் மறைத்திருக்கிறார். அந்தப் பழக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் காதலாக மாறியது. கடைசியில், காதலனைத் தேடி சிரியாவுக்குச் சென்றார் க்ரீன். ஜெர்மனியில் உள்ள குடும்பத்தினரைப் பார்க்கச் செல்கிறேன் என்று புறப்பட்டவர், கனடா சென்று, அங்கிருந்து துருக்கி போய், தீவிரவாதிகள் துணையுடன் துருக்கி எல்லையைக் கடந்து சிரியா சென்றிருக்கிறார். அங்கு திருமணமும் நடந்தது.

அபு தல்லா, ஜெர்மனியில் இருந்தபோது, டெசோ டாக்கி என்ற பெயரில் ராப் பாடல் பாடியிருக்கிறார். சிரியா வந்த பிறகும் ராப் பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அவர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பிரசாரப் பாடல்களையும் பாடியிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு அபு வெளியிட்ட ஒரு ராப் பாடலில், ஒசாமா பின் லேடனைப் புகழ்ந்தும், ஒபாமாவுக்கு மிரட்டல் விடுத்தும் கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஒபாமா கழுத்து அறுத்து கொல்லப்படுவார் என்று அதில் அபு பாடியிருந்திருக்கிறார். மேலும், ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியையும் பாடலில் வெளியிட்டிருந்துள்ளார். அந்தப் பாடலைப் பார்த்த பிறகுதான், தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்ற எண்ணம் க்ரீனுக்கு வந்துள்ளது. உடனே, அங்கிருந்து தப்பித்து, அமெரிக்கா திரும்பியிருக்கிறார். 

அமெரிக்காவுக்குள் நுழைந்ததும் க்ரீன் கைது செய்யப்பட்டார். தவறான தகவல் அளித்துச் சிரியா சென்றது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, சில மாதங்களுக்கு முன்பு க்ரீன் விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணையச் சென்றவர்களுக்கே பதிமூன்றரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியையே திருமணம் செய்து, திரும்பி வந்தவருக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அளித்தது, அமெரிக்காவில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. "இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே, மக்களிடையே பயங்கரவாத இயக்கங்களில் சேரும் எண்ணம் குறையும்" என்கின்றனர் ஒரு தரப்பினர்.

ஆனால், எஃப்.பி.ஐ தரப்போ, "தீவிரவாத அமைப்பில் க்ரீன் இணையவில்லை. தவறான தகவல் அளித்துச் சிரியா சென்றதுதான் அவர் செய்த தவறு. பின்னர், தன்னுடைய தவறை உணர்ந்து அவர் அமெரிக்கா திரும்பி விட்டார். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். அதனால், அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. மிகக் கடுமையான சிக்கலில் இருந்து தப்பி, ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வரும் க்ரீனுக்கு, நீதிமன்றத் தகவல் வெளியானது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தன்னுடைய எதிர்காலத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று வெடவெடத்துப் போயுள்ளார் க்ரீன். என்ன செய்வது? தெரிந்தோ, தெரியாமலோ அவர் செய்த தவறுக்கான பலன் எதுவானாலும் அதனை அனுபவிக்க வேண்டியதுதான்!