Published:Updated:

நிலாவில் விவசாயம் செய்யத் தயாராகும் நாசா... சாத்தியமா?

நிலாவில் விவசாயம் செய்யத் தயாராகும் நாசா... சாத்தியமா?
நிலாவில் விவசாயம் செய்யத் தயாராகும் நாசா... சாத்தியமா?

நிலாவில் விவசாயம் செய்யத் தயாராகும் நாசா... சாத்தியமா?

ற்போது உலக நாடுகளிடையே விவசாயம் குறித்த விழிப்புஉணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்றார்போல விவசாயம் பல்வேறு கட்ட மாறுதல்களைச் சந்தித்து புதிய தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது.  விவசாயத்தில் நவீன தொழில்நுட்பமாக பசுமைக்குடில் விவசாயம் விளங்கி வருகிறது. இந்த பசுமைக்குடில் தொழில்நுட்பம்தான் தற்போது விண்வெளி போகப்போகிறது.

ஆம், நாசா செவ்வாய் அல்லது நிலாவில் தனது ஆராய்ச்சிக்காக விவசாயம் செய்ய இருக்கிறது. அரிஜோனா யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து இந்த விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறார்கள். விண்வெளியில் விவசாயம் செய்யக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இதனால் இந்த ஆராய்ச்சி சாத்தியமாகும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். செவ்வாயில் செய்யப்படும் விவசாயம் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுகளை அவ்வப்போது புதிதாக உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த பசுமைக்குடில் தொழில்நுட்பத்தில் மேலும் மெருகேற்றி முற்றிலும் கனமான வளையங்களால் பின்னப்பட்டு கடினமான உலோகம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி வீரர்கள் தங்கியிருக்கும் அறைகளிலும் அமைக்கப்படும். விண்வெளி வீரர்களால் வெளியிடப்படும் கார்பன்- டை- ஆக்ஸைடை தாவரங்கள் உணவாக எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிட்டு சூழ்நிலையை சமன்படுத்தும். இந்த பசுமைகுடிலில் தாவரங்கள் வளர அந்தத் தளத்தில் நீரானது தேவை... அந்த நீர் ஆக்ஸிஜனேற்றப்பட்ட உப்பு கலந்த நீராக இருக்க வேண்டும். அப்போதுதான் தாவரங்களின் வேர் மண்டலத்தில் உணவைச் சீராக எடுத்துக் கொள்ளும்.

இந்த முழுமையான வடிவமைப்பும், தொழில்நுட்பமும் பூமியில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பயிரின் வளர்ச்சி அதன் நிலைக்கு உட்பட்டு வளரும். நிலவு அல்லது செவ்வாய் கிரகத்தில் எந்தெந்த தாவரங்கள், என்னென்ன விதைகள் அவை சார்ந்த பொருள்கள் ஆகியவை தேர்ந்தெடுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விண்வெளியில் கடுமையான கதிர்வீச்சுக்கள் இருக்கும். அவற்றிலிருந்து தாவரங்கள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். எனவே பசுமைக்குடிலானது நிலத்தில் புதைக்கப்படலாம். தாவரங்கள் சூரிய ஒளிக்குப் பதிலாக சிறப்பு வாய்ந்த விளக்குகளால் ஒளி கொடுக்கப்படும். வெளியிலிருந்து உள்ளே ஒளியினை செலுத்துவதற்காக பைபர் ஆப்டிக் குழாய்கள் மூலமாகவும், எல்இடி தொழில்நுட்பங்கள் மூலமாகவும் வெளிச்சத்தைச் செலுத்தி ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இந்தச் சோதனைகள் பூமியில் நடைபெற்று வந்தாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளிவீரர்கள், இதனை உணவாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை சவால்களுடன் பரிசோதனை செய்து வருகின்றனர். நசாவின் வேக்டி ஆலை கிராஸ்ட் சிஸ்டம் என்பது அமெரிக்காவின் புதிய உணவு வளர்ச்சி உற்பத்தி முறையாகும். இது, 2014-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இவர்கள் சொல்வது போல நிலவிலோ அல்லது செவ்வாயிலோ விவசாயம் செய்வது எப்படி என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிட்டல் இந்தியாவின் பக்கம் பார்வையைத் திருப்பிய பிரதமர், விவசாயத்தின் பக்கம் பார்வையை இன்னும் திருப்பாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது. அத்துவானம் தன் ஒளியினை மூடி இருளும் நேரம் ஒரு தனிமனித அழைப்புக்காக தமிழ்நாடு வந்து, சிலையைத் திறந்து வைத்து விழாவினை சிறப்பித்து விட்டுச் செல்லும் பிரதமருக்கு டெல்லியில் 41 நாள்களாகத் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியது தெரியாததுபோல மவுனம் காக்கிறார். இங்கு டிஜிட்டல் இந்தியாவினை யாரும் வேண்டாம் என மறுக்கவில்லை. ஆனால், விவசாயத்தை மறந்தால் ஒரு நாடு பரிதாபமான நிலையை எட்டுவது நிச்சயம் என்பதைத்தான் அனைவரும் வலியுறுத்துகின்றனர். 2012-ம் ஆண்டு சந்தையில் கிடைத்த அரிசியின் விலை இப்போது இரண்டு மடங்காக மாறியிருக்கிறது. நீங்கள் சொல்லும் டிஜிட்டல் மட்டுமல்ல, எத்தனைத் தொழில்நுட்பங்கள் வந்தாலும், இந்தியா மேன்மேலும் வளர்ச்சியடைந்தாலும் நெல்லிலிருந்துதான் அரிசி வரும். இந்த உலகத்தில் மட்டுமல்ல, விண்ணில் இருக்கும் ஒவ்வொரு கோளிலும் வாழ உணவும், அதை உற்பத்தி செய்ய விவசாயம் பற்றிய அறிவும் தேவை.

அடுத்த கட்டுரைக்கு