Published:Updated:

பெண்களை சீண்டும் ஜோக் சொன்ன அதிபர்... வலுக்கும் கண்டனங்கள்!

பெண்களை சீண்டும்  ஜோக் சொன்ன அதிபர்... வலுக்கும் கண்டனங்கள்!
பெண்களை சீண்டும் ஜோக் சொன்ன அதிபர்... வலுக்கும் கண்டனங்கள்!

இன்று உலகில் பல நாடுகள் அசுர வளர்ச்சி அடைந்திருக்கின்றன. எவ்வளவோ நாகரிக மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனாலும் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு முழு பாதுகாப்பும் - சுதந்திரமும் கிடைத்திருக்கிறதா? என்றால், கேள்விக்குறிதான். ஆண்களுக்கு நிகராக மட்டும் இல்லை; ஆண்களைவிட ஒருபடி மேலாகவே அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். ஆனால், சமூகத்தில் இன்னமும் பெண்கள் என்றால், ஆண்களைவிட கீழானவர்கள்தான் என்ற எண்ணம் அனைத்து நாடுகளிலுமே இருக்கிறது. நமது நாட்டில், பெண்களை உயர்வான இடத்தில் வைத்திருப்பதுபோல் ஒரு தோற்றத்தை மட்டும் உருவாக்கி வைத்துவிட்டு, 'ஆணுக்குப் பெண் நிரந்தர அடிமை' என்ற பொதுப்புத்தியைத்தான் வளரும் தலைமுறைகளுக்கு பழக்கப்படுத்தி வருகிறோம். மதம் உள்ளிட்ட மூடப்பழக்கங்கள் நிரம்பிய சமூகங்களில் இந்த நிலை இன்னும் அதிகப்படியாகவே இருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பெண்களின் இந்த அவல சூழலுக்கு சமூகம், மதம் உள்ளிட்ட பழைமையான விஷயங்கள் முதன்மையான காரணமாக இருந்தாலும், அந்தந்த நாட்டை ஆள்பவர்களுக்கும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய முழு பொறுப்பு உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது. ஆனால், நாட்டை ஆள்பவரே பெண்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசினால்...? அப்படி ஒரு தவறைத்தான் ஜோக் என்ற பெயரில், பிலிப்பைன்ஸ் அதிபர் செய்துள்ளார். ரோட்ரிகோ ட்யூட்டரெட்டின் என்பவர்தான் பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்துவருகிறார். சர்ச்சை கருத்துகளுக்கு பெயர்போன இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையாகப் பேசிவிட்டு பின் தடாலடியாக மன்னிப்பும் கேட்டுவிடுவார். ஒபாமா அமெரிக்க அதிபர் பொறுப்பில் இருந்தபோது அவரைக் கடுமையாக விமர்சித்தார் ரோட்ரிகோ. இந்த விமர்சனங்களுக்கு எதிராக கண்டனங்கள் எழவே, ஒபாமாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ரோட்ரிகோ. இந்த நிலையில், தற்போது ''எங்கள் நாட்டு ராணுவத்தினர் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வலிமை பெற்றவர்கள்'' என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தங்கள் நாட்டின் ராணுவத்தினர் பலம் பொருந்தியவர்கள் என்று பிறருக்கு அறிவிப்பதற்காக இப்படி ஒரு கேவலமான ஜோக்-கினை சொல்லியுள்ளார். பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் மத்தியில் பேசிய அதிபர் ரோட்ரிகோ ட்யூட்டரெட்டின், "பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய தெற்குப் பகுதியான மிண்டானவோ பகுதியில், தீவிரவாதிகளால் பல அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. அங்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கோடி முஸ்லிம்கள் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். 'பிலிப்பைன்ஸ் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்' என்று ராணுவத்தினர் சொல்லும் வரை, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருப்பேன்'' என்றவர் தொடர்ந்து பேசும்போது, ''தீவிரவாதிகளை அழிப்பதில், நான் ராணுவத்தினருக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன். சந்தேகத்துக்கு உரியவரை கைது செய்யவும், அவரது வீட்டை சோதனை செய்வதற்கும் ராணுவத்தினருக்கு முழு அதிகாரம் உண்டு'' என்று கூறியிருந்தார். அப்போதுதான் தன் நாட்டின் ராணுவத்தினரை ஊக்குவிப்பதாக நினைத்துக்கொண்டு இப்படியொரு அசிங்கமான உதாரணத்தை எடுத்துச் சொல்லியுள்ளார். 

இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதாக கருதப்பட்டாலும், 'பெண்களை இழிவுப்படுத்தித்தான் உங்களின் ராணுவ வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டுமா?' என்று உலக அளவில் கடுங்கண்டனங்கள் எழத்தொடங்கியுள்ளன. உண்மைதானே...? தன் நாட்டு ராணுவத்தினரின் திறமையை பிறருக்குத் தெரிவிக்க விரும்பினால், ஏதேனும் சாகச செயலில் ஈடுபட்டு அதை வெளிக்கொண்டு வரச்செய்யலாம். அதைவிடுத்து பெண்களின் பாதுகாப்புக்கு முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நாட்டின் அதிபராக இருந்துகொண்டு இப்படி பெண்களை இழிவுபடுத்துவதுபோல் பேசியிருப்பது 'வேலியே பயிரை மேய்ந்த' கதையாக அல்லவா இருக்கிறது.