Published:Updated:

அச்சம் தரும் ட்ரம்பிஸம்... இது அழிவுக்கான வழியா...? #Analysis #Parisagreement

அச்சம் தரும் ட்ரம்பிஸம்... இது அழிவுக்கான வழியா...? #Analysis #Parisagreement
அச்சம் தரும் ட்ரம்பிஸம்... இது அழிவுக்கான வழியா...? #Analysis #Parisagreement

“நான் பீட்ஸ்பர்க் மக்களின் பிரதிநிதி... பாரீஸுனுடையவன் அல்ல” - இது பருவநிலை மாற்றத்துக்கான  பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்த ட்ரம்ப் சொல்லியது. அவர் பீட்ஸ்பர்க் உடையவனாகவோ அல்லது பாரீஸ் உடையவனாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அடிப்படையில், அவர் இந்த புவியின் மகன். உலக மக்கள் தொகையில், 4 சதவிகிதமே கொண்ட அமெரிக்கா, உலக மொத்த கரியமில வாயு அளவில், 5-ல் ஒரு சதவிகிதத்தை உமிழ்கிறது. அதை  2025-ம் ஆண்டுக்குள், இப்போது வெளியிடும் கரியமில வாயுவிலிருந்து 26 சதவிகிதம் வரை குறையுங்கள்... அதற்கான கொள்கை முடிவை தீட்டுங்கள் என்றால், முரண்டு பிடிக்கிறார் ட்ரம்ப்.  அவர்  தமிழக அரசியலை ஊன்றிப் படித்தாரா இல்லை... யாருக்கும் தெரியாமல், தமிழகத்தின் பக்கம் வந்து சென்றாரா என்று தெரியவில்லை. தெள்ளத் தெளிவாக தமிழக அரசியல்வாதிகளின் வழிகள் அனைத்தையும் பின்பற்றுகிறார். ஒபாமா எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும் மாற்றுகிறார். அதில், அதிமுக்கியமானது பாரீஸ் ஒப்பந்தம்.

சீனாவின் சதி... வளர்ச்சிக்குத் தடை :

வளர்ச்சி குறித்து என்ன விதமான மனசித்திரங்களை தன் மனதில் ட்ரம்ப் வரைந்து வைத்திருக்கிறார் என்று புரியவில்லை. கரியமில வாயுவைக் குறையுங்கள், பருவநிலை மாற்றத்தை உணருங்கள் என்றால், 'இது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எதிரான சீனாவின் சதி' என்கிறார். உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக கரியமில வாயுவை உமிழும் தேசம் அமெரிக்காதான். 2015-ல் பாரீஸில் 195 தேசங்கள் ஒன்றிணைந்து பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து ஒருமித்த முடிவை எடுத்தது. அதன்படி, வளர்ந்த நாடுகள் தங்கள் ஆற்றல் தேவையை 2020-ம் ஆண்டுக்குள் மாற்று எரிசக்தி மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். வளர்ந்துவரும் நாடுகளுக்கு மாற்று எரிசக்தி தொழிற்நுட்பத்தை வழங்க வேண்டும். அதற்கான நிதியையும் வழங்க வேண்டும். இதில், அமெரிக்கா மட்டும் 300 கோடி டாலர்களை வளர்ந்து வரும் தேசங்களுக்கு வழங்க வேண்டும். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இதற்கு சம்மதம் தெரிவித்தார் ஒபாமா. அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தை வழிநடத்தவும் முடிவுசெய்யப்பட்டது. 

இப்போது அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார் ட்ரம்ப். அதற்குக் காரணமாக அவர் சொல்லியிருப்பது, 'இதனால், தேசத்தின் வளர்ச்சி பாதிக்கும்' என்பதுதான். கடந்த 3 ஆண்டுகளாகவே அவர் பருவநிலை மாற்றம் என்பதை ஒப்புக் கொள்ளவே இல்லை. முதலில், 'புவி வெப்பமயமாதல் என்ற பதமே பொய்' என்றார். பின், 'பூமி வெப்பமாக மாறுகிறது என்கிறார்கள். ஆனால், எனக்கு குளிர்கிறது... பனி அதிகரித்து இருக்கிறது' என தட்டையாக என்னென்னவோ ட்வீட்டினார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக அவர் பதிந்த ட்வீட்டுகள் 115-க்கும் மேல். அதிகாரம் இல்லாமல் இருந்தபோது ட்வீட்டியவர், அதிகாரம் கைக்கு வந்தவுடன், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவே செய்துவிட்டார். பாரீஸ் ஒப்பந்தத்தில் இல்லாத நாடுகள் சிரியா மற்றும், பசிபிக் தேசமான நிக்கராகுவா. இப்போது, சிதைந்த தேசம் சிரியாவின் வழியைப் பின்பற்றி, ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி இருக்கிறது அமெரிக்கா. 

எல்லா தேசங்களின் உள்விவகாரங்களிலும் மூக்கை நுழைத்து, அவர்களது தேசத்தின் கொள்கைகளை தங்களுக்கு ஏற்றதுபோல மாற்றி வடிவமைக்கும்  அமெரிக்காவின் பிரதிநிதி, இந்த புவியின் நலனுக்காக எல்லா நாடுகளும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்தால், 'இது எங்கள் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது. எப்படி பிற தேசங்கள் எங்கள் கொள்கை முடிவுகளில் தலையிடமுடியும்' என்கிறார்.

ட்ரம்ப் தன் முடிவை அறிவித்த சில நிமிடங்களிலேயே, ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா தேசங்கள் ஒன்றாக இணைந்து, ‘பாரீஸ் ஒப்பந்தம் உறுதியானது; அதை மறுபரிசீலனை செய்தவற்கே இடமில்லை' என்று கூட்டறிக்கை விடுத்துள்ளார்கள். சீனாவும் இதே நிலைப்பாட்டில்தான் இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்காவிலேயே ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. ட்ரம்ப்பின் ஆட்சி குறித்து இத்தனைநாள் எந்த கருத்தும் கூறாமல் இருந்த ஒபாமா... இந்த முடிவை விமர்சித்துள்ளார். ஆப்பிள், ஐ.பி.எம் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவைதான் இந்தச் சூழலில், கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. தன் உரையின் 2 இடங்களில் இந்தியாவையும் விமர்சித்திருக்கிறார் ட்ரம்ப்... 'இந்தியாதான் அதிகளவில் மாசு ஏற்படுத்துகிறது' என்றிருக்கிறார். ஆனால், இப்போதுவரை இதற்கு இந்தியா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

அழிவுக்கான பாதை :

ட்ரம்ப் தன் உரையில், 'இந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் இருப்போமானால், நாம் 27 லட்சம் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும்' என்று தன் நாட்டுப் பிரஜைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். ஆனால், இதே வேகத்தில் கரியமில வாயுவை வெளியிட்டு, இதே வேகத்தில் இயற்கையின் வளங்களை சுரண்டினால், இந்த அண்டத்தின் மேல் படர்ந்துள்ள புற்று வேகமாகப் பரவி, இந்தப் பிண்டத்தையும் கொல்லும் என்பதை யார் அவருக்கு புரிய வைப்பது...? அவர் பீட்ஸ்பர்க் உடையவனோ அல்லது பாரீஸுனுடயவனோ அல்ல, அவரும் இந்த பூமியின் மகன்தான் என்பதை யார் அவருக்கு புரியவைப்பது? செவ்விந்திய பழங்குடியான துவாமிஷ், “பூமி மனிதனுடையது அல்ல. மனிதன் பூமியினுடையவன். ஒரு குடும்பத்தை ஒன்றாக்கும் ரத்தத்தைப் போல, எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. பூமிக்கு நடப்பதெல்லாம், பூமியின் பிள்ளைகளுக்கும் நடக்கும். உயிரின வலையை நெய்தது மனிதன் அல்ல. அவன் அதில் ஓர் இழை மட்டும்தான். அந்த வலைக்கு அவன் செய்வதெல்லாம் அவன் தனக்குத்தானே செய்துகொள்வதுதான்...” என்கிறார். இந்த உண்மையை ட்ரம்புக்கு யார் புரிய வைப்பது...?

விவிலியம் சொல்வது போல... ட்ரம்ப் தானும், தம் குடும்பமும் தப்பிக்க ஏதாவது நாவாய் கட்டி வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. இந்த புவியின் தலையாய சிக்கலை இடது கையால் அணுகுகிறார். ஐ.நா சபையின் பருவநிலை மாற்றத்துக்கான முன்னாள் பிரதிநிதி மேரி ராபின்சன் கூறி இருப்பதைப்போல... அடுத்த தலைமுறையின் மீது எந்த அக்கறையும் கொள்ளாமல், அடாவடியாக நடந்து கொண்டிருக்கிறார் ட்ரம்ப். 

'தீவிர இனவாதம், வளர்ச்சியின் பெயரால் தங்குதடையற்ற சுரண்டல், பருவநிலை மாற்றத்தை நகைப்பாக பார்ப்பது...' என இந்த ட்ரம்பிஸம் அச்சம் தருவதாகவும், அழிவுக்கான பாதையாகவும் இருக்கிறது. அமெரிக்காவை வலிமையாக மாற்றுங்கள் ட்ரம்ப். ஆனால், அதற்காக பூமியின் நுரையீரலை தங்களது கால்களால் மிதிக்கவேண்டாம்... உங்களுக்கும் மூச்சுத் திணறும்!