Published:Updated:

தீயை முதலில் உலகுக்குச் சொன்ன பெண், தோழிக்குக் கடைசி குறுஞ்செய்தி..! லண்டன் தீவிபத்துக் காட்சிகள் #VikatanExclusive

தீயை முதலில் உலகுக்குச் சொன்ன பெண், தோழிக்குக் கடைசி குறுஞ்செய்தி..! லண்டன் தீவிபத்துக் காட்சிகள் #VikatanExclusive
தீயை முதலில் உலகுக்குச் சொன்ன பெண், தோழிக்குக் கடைசி குறுஞ்செய்தி..! லண்டன் தீவிபத்துக் காட்சிகள் #VikatanExclusive

தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்களாலும் அதைத் தொடர்ந்த சம்பவங்களினாலும், கடந்த சில மாதங்களாக லண்டன் பெருநகரம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட வாரத்தின் எல்லா இரவுகளையும் கேளிக்கை அரங்குகளில் கழிக்கும் லண்டன்வாசிகள் வீடுகளுக்குள் சில நாள் இருப்பதே பாதுகாப்பு என நினைத்திருந்ததைக்கூட விதி விடவில்லை போலும்.
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்தக் கொடூரமான கோரத் தீவிபத்து ஐரோப்பிய வரலாற்றின் மற்றுமொரு கறுப்பு தினமாகக் கருதப்படுகிறது.

மளமளவெனக் கிளம்பிய தீ.

அந்த இரவு இப்படியாகிப்போகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நள்ளிரவு சுமார் ஒரு மணி (புதன்கிழமை அதிகாலை)- மேற்கு லண்டன் - நார்த் கென்னிங்ஸ்டனில் உள்ள கிரென்ஃபெல் டவர் எனப்படும் 24 மாடி குடியிருப்பில் நடந்தேறியது அந்தக் கோர தீ விபத்து.

கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இரவு ஒரு மணி அளவில் (உள்ளூர் நேரப்படி) தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் சுதாரிப்பதற்குள் , மற்ற தளங்களுக்கு பரவிய தீ, சிறிது நேரத்திலேயே பெரும்பாலான தளங்களை ஆட்கொண்டது. லிப்ட் வசதி செயலிழக்கப்பட்டதால், பெரும்பாலோனோர் செய்வதறியாது திகைத்துப் போயினர். கடைசி நான்கு தளங்களிலிருந்தவர்கள் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என இன்று காலை பி.பி.சி தெரிவித்து இருக்கிறது.

தீ விபத்து ஏற்பட்ட அரை மணிநேரம் கழித்தே அபாய ஒலி எழுப்பப்பட்டதாக விபத்திலிருந்து தப்பி பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களிலேயே, அக்கம்பக்கத்து மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதிக்கு விரைந்தனர். முதற்கட்டமாகக் கட்டிடத்திலிருந்து 65 பேரை மீட்டனர்.

மற்றவர்களை மீட்பதற்குள், தீ மிக வேகமாகப் பரவியதால், கிட்டத்தட்ட அனைத்துத் தளங்களுமே கொழுந்து விட்டு எரியத்தொடங்கியன. 'ஹெல்ப்' 'ஹெல்ப்' எனத் தொடர்ந்து பெண்களும், வயதானவர்களும் கதறியதாகவும், குழந்தைகளின் வீறிட்ட அழுகைகள் இன்னமும் நெஞ்சை உருக்குவதாகவும் இருப்பதாகக் கட்டிடத்தின் அருகிலுள்ளவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

கட்டடம் முழுவதும் கேஸ் இணைப்பும், மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டும்கூட, தீ பரவுவதைத் தடுக்க முடியவில்லை.
இப்படியான ஒரு கொடிய தீ விபத்தை, தான் கண்டதில்லை எனத் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஒரு மைல் தூரத்துக்கு பரவிய சாம்பல்

தீ விபத்து ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே புகையும், சாம்பலும் மளமளவெனச் சுற்றுப்புறம் எங்கும் பரவியது. சம்பவ இடத்திற்குச் சென்றபோது , குடியிருப்பு பகுதிக்கு ஒரு மைலுக்கு அப்பாலேயே நெருப்பின் கதகதப்பையும், புகை, சாம்பலின் வாசத்தை உணர முடிந்தது. கல்லறையில் புதைத்து பழக்கப்பட்டவர்கள் - முதல்முறையாக பிணவாடையை நுகர்கிறார்கள். சுற்றி நிற்பவர்கள் எல்லோரும் யாரையோ உள்ளே தொலைத்துவிட்டு, அவர்கள் வருவார்களா என வேண்டுதல்களோடு காத்திருக்கிறார்கள். சம்பவ இடத்தைச் சுற்றி இரண்டு மைல் தூரத்துக்கு பேருந்து,  ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பலானதால், கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்க, சுற்றி இருப்பவர்களும், கதிகலங்கி போயிருக்கிறார்கள்.


குழந்தையைத் தூக்கிப்போட்ட தாய்.

ஒரு கட்டத்தில் இனி நாம் கீழிறங்கி தப்பிக்க முடியாது என உணர்ந்து கொண்ட ஒரு தாய், தன் குழந்தையை குல்ட் ஒன்றில் சுற்றி, கட்டித் தூக்கி எறிந்திருக்கிறார். குழந்தையைத் தூக்கிபோடுவதற்கு முன்னால், யாராவது குழந்தையை பிடியுங்கள் எனக் கூக்குரலிட்டிருக்கிறார். கீழே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிவீசப்பட்ட அந்தக் குழந்தையை பத்திரமாகப் பிடித்து மீட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஜேடி மார்ட்டின் பி.பி.சி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


கை-கொடுத்த இஸ்லாமிய சகோதரர்கள்.

சம்பவம் நடந்த இந்தப்பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். ரமலான் நோன்புக்காக அதிகாலையில் எழுந்தவர்கள் சம்பவத்தைப் பார்த்துவிட்டு காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். கட்டடத்தில் தீயின் வீரியம் அறியாமல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பல பேரை, சமயம் பார்த்து எழுப்பி விட்டது , தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டது என இந்த இக்கட்டான சூழ்நிலையில் பேருதவி புரிந்திருப்பதாக அருகில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள். தீயின் வீரியமும்,சாம்பலும் புகையும் அருகில் வசிப்பவர்களையும், மீட்பு பணியில் ஈடுபட்டிருப்போரையும், பத்திரிகைக்காரர்களையும் பாதிக்கலாம் இருக்க பேஸ் மாஸ்க், தண்ணீர் பாட்டில்கள் என தன்னார்வப் பணிகளை ‘இஸ்லாமிக் ரிலீப்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கவனித்து வந்தது.

சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள அல்-மனார் மசூதியைச் சேர்ந்தவர்கள் விபத்தின் பாதிப்பிலிருந்து தப்பித்து வந்தவர்களுக்கு, ஓய்வு எடுத்துக்கொள்ள, உறங்கிக்கொள்ள, உணவுக்கு எனச் சகல வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதாக அறிவித்திருந்தனர்.மாடியிலிருந்து குதித்து தப்பித்தவர்கள்.

தீ மளமளவெனத் தத்தம் தளங்களுக்குப் பரவியதும், இனி நாம் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த சிலர், மாடியிலிருந்து குதிக்கும் முடிவுகளை எடுத்தனர். மீட்புப்பணி வீரர்கள் 'குதிக்காதீர்கள்-உங்களைக் காப்பாற்றி விடுகிறோம்' என்று கூறியும், பயத்தில் நிறையப் பேர் குதித்ததாக விபத்திலிருந்து தப்பித்தவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. பெரிய பெரிய படுக்கை விரிப்புகளை ஒன்றாகக் கட்டிக்கொண்டு மாடிகளின் ஜன்னல்களிலிருந்து குதிக்க முயற்சித்துள்ளனர் . 22 வது மாடியிலிருந்து தீக்காயங்களுடன் சிறுவன் ஒருவன் குதிப்பது மாதிரியான வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.

21வது மாடியிலிருந்து ஐந்து, ஆறு குழந்தைகளுடன் பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும், கீழே வரும்போது அதில் நால்வர்தான் வந்தார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்தக் கடைசி குறுஞ்செய்தி.

விபத்தின்போது விடியற் காலை 2.54 மணியளவில், பாதிப்பிற்குள்ளான ராணியா இப்ரஹாம் என்ற பெண் தன்னுடைய தோழி யாஸ்-க்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். உலகின் கருணையற்ற ஜீவனையும் கரைத்து விடும் செய்தியாக அந்தச் செய்தியைப் பார்க்கிறது இணையம் உலகம்.

அது, 'நான் மாட்டிக்கொண்டேன்- வெளியே வரமுடியவில்லை. என்னை மன்னித்து விடு- நான் விடைபெறுகிறேன்' என்பதாகும் .

ராணியாவுக்கு 5-வயதில் ஒரு மகனும் மற்றும் 3-வயதில் மகளும் இருக்கிறார்கள் என்றும் அவர் கட்டிடத்தின் 23-வது மாடியில் வசித்து வருகிறார் என்றும் யாஸ் தகவல் தெரிவித்தார். இதுவரை ராணியா பற்றியோ அவரது குழந்தைகள் பற்றியோ எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எப்படியாவது தன் உயிர்த்தோழி உயிரோடு வந்துவிட வேண்டும் எனச் சம்பவ இடத்திலேயே உட்கார்ந்து வேண்டுதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார் யாஸ்.


தப்பித்து வந்தவர்கள்

மாடியிலிருந்து பாதுகாப்பாகக் குதித்தவர்கள், கீழ்த் தளங்களில் வசிப்பவர்கள் என வெகு சிலரே பெரிய காயங்கள் எதுவுமில்லாமல் லேசான காயங்களோடு தப்பித்தனர். தப்பிப் பிழைத்த ஒவ்வொருவரும் தன் குழந்தையைத் தேடி, மனைவியைத் தேடி அழுதபடி ஓடியதாகவும், மறுபடியும் எரியும் கட்டடத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும் கூறுகிறார்கள். பெரிய தீக்காயங்களோடு தப்பி வந்தவர்களும்,படுகாயமடைந்தவர்களும் லண்டனின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மிகப் படுகாயமடைந்தவர்கள் உயிர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மேயருக்கு மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. இதுவரை 68 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு லண்டனின் ஆறு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 18 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பி.பி.சி வானொலி தெரிவித்துள்ளது.

துரிதமாகச் செயல்பட்ட மைக்கேல் பரமசிவன்.

கட்டிடத்தின் ஏழாவது மாடியில் வசித்துவந்த மைக்கேல் பரமசிவன் தன் குழந்தை, மனைவியோடு தப்பித்து வந்ததை வானொலியில் கூறினார். ஓர் அதிகாரி அவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்-பதறாதீர்கள் என்று கூறியதாகவும் ஆனால் மைக்கேலுக்கு 'நிலைமை கை மீறிப் போய் விட்டது- வெளியே ஓடியே ஆக வேண்டும் ' என்று தோன்றியதாகவும் அதனால் குடும்பத்தோடு வெளியே ஓடி வந்துவிட்டதாக மைக்கேல் தெரிவித்திருந்தார். பார்க்கும் இடங்களில் எல்லாம் தீ கொழுந்து விட்டு இருந்ததாகவும், நீல நிறத்தில் தீ புகைந்து கொண்டே இருந்தது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது என்ற மைக்கேல், புகை மண்டலமாய் சூழல் இருந்ததால் என் குழந்தையைப் போர்வை ஒன்றில் பத்திரமாகப் போர்த்தி வெளியில் கொண்டு வந்து விட்டுவிட்டேன்” என்றார்.


இடியட் ஜர்னலிசம்

உயிர் தப்பித்து வந்த ஒரு பாட்டியையும், அவரது பேரனையும் ஸ்கை நியூஸ் ரிப்போர்ட்டர் மார்க் ஒயிட் என்பவர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். சம நேரத்தில் பலரும் தீயில் கருகி, உயிருக்குப் போராடி கதறிக் கொண்டு இருக்க, உடைமைகளை இழந்த ஆந்த சிறுவனிடம் ' தப்பித்து வந்துவிட்டாய்- இன்றைக்கு உனக்கு ஸ்கூல் கிடையாது -இப்போதைக்கு உனக்கு இதுதான் பிளஸ்' என்று கேட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் கேள்விக்கான நிருபர் மார்க் ஒயிட்டை 'இடியட்' எனத் திட்டி தன் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள் பலர்.கட்டிடத்தில் மொத்தம் 127 பிளாட்டுகளும், 24 மாடிகளும் அதில் 20 தங்கு தளமும், 4 தளங்கள் ஜிம், நூலகம் எனப் பொதுத் தளங்களுமாக இருந்திருக்கிறது. கடந்த 2016 -ல்தான் முழு கட்டிடமும் சுமார் 8.7 மில்லியன் பவுண்டு செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
லண்டன் மக்கள் மட்டுமில்லாமல் கட்டிடத்தில் பல்வேறு நாட்டு மக்களும், புலம் பெயர்ந்தவர்களும் அதிகளவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதிகளவு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்ததாகவும் கவுன்சிலில் பதிவாகியிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இயங்கும் தீயணைப்பு வீரர்கள்.

ஓய்வின்றி 200 தீயணைப்பு வீரர்கள் 60-க்கும் மேற்பட்ட உயிர்களைச் சமயோசிதமாக செயல்பட்டு மீட்டெடுத்தனர். கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிய ஆரம்பித்து விட்டதால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.


விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், பிரதமர் தெரசா, விபத்துக்கான காரணத்தைக் கண்டறியச் சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்திருக்கிறார். தப்பியவர்கள் தன் நண்பர்களை, உறவினர்களைச் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவிட்டுத் தேடி வருகிறார்கள்.

நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் கட்டில், மெத்தை, உணவுப் பொருள்கள், ஆடைகள், கம்பளி, தண்ணீர் பாட்டில்கள், பழங்கள் என டொனேஷன்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது. நிறைய நல்ல உள்ளங்கள் கிரவுட் பண்டிங் எனப்படும் குழு நிவாரண நிதி திரட்டும் பணியை இணையத்தில் மேற்கொள்ளுகின்றனர்.

வீடுகளை, உடைமைகளை இழந்த இஸ்லாம் நண்பர்கள் சாலை ஓரங்களில் தன் இப்தார் நோன்பு வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

நட்டாலி ஆக்ஸ்போர்டு 

தீ விபத்தைப் பற்றி உலகத்துக்கும் ஊடகத்துக்கும் முதலில் சொன்ன பெண் நட்டாலி ஆக்ஸ்போர்டு என்று கூறப்படுகின்றது. லண்டனைச் சேர்ந்த 35 வயது பெண்ணான இவர், ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

சரியாக 2.04-க்கு நட்டாலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு பற்றிய செய்தியைப் புகைப்படத்துடன் டுவீட் செய்தார். அதைத்தொடர்ந்து, லண்டன் ஊடகங்கள் விழித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சொல்லப்படுகிறது. பல ஊடகங்களும் அவருடைய ட்விட்டர் கமென்ட் பாக்ஸில் சென்று விவரம் கேட்டதைக் காணலாம். நடாலியின் இந்த ட்வீட் இங்கிலாந்து அளவில் டிரெண்டானது.

விக்கிப்பீடியா இணையதளம் இவர் புகைப்படத்தைத் தன் முதல் பக்கத்தில் பதிவிட்டு இவருக்கு கிரெடிட்ஸ் தந்திருக்கிறார்கள்.

இன்னமும் நிறையத் துயர சம்பவங்களைக் கொண்டிருக்கிறது இந்தக் கோர தீ விபத்து. இனி உலகில் எங்கும் இது போல் ஒரு விபத்து நடக்கக்கூடாது என்று பிரார்த்திப்போம். முன்னெச்சரிக்கையாய் இருப்போம்.