Published:Updated:

`பலமுறை புகார் அளித்தும் சரிசெய்யவில்லை!’ -அப்பார்ட்மென்ட் ஊழியர்களைத் துப்பாக்கியால் சுட்ட முதியவர்

அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஊழியர்கள் தண்ணீர் கசிவுக்கு நடவடிக்கை எடுக்காததால் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.

முதியவர் ராபர்ட்
முதியவர் ராபர்ட்

கறுப்பு கோட் சூட், தொப்பி அணிந்துகொண்டிருக்கும் நபர் ஒருவர், கட்டடம் ஒன்றில் நுழைந்து அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கோட்டினுள் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்குள்ள அனைவரையும் மளமளவென சுட்டுத் தள்ளுகிறார். ஏதோ ஒரு ஹாலிவுட் கேங்ஸ்டர் படத்தில் இதுபோன்ற சீனைப் பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கிறதா?

முதியவர் ராபர்ட்
முதியவர் ராபர்ட்

சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2-ம் தேதி லாஸ் வேகாஸ் போலீஸாருக்கு உள்ளூர் அடுக்குமாடிக் குடியிருப்பு ரிசப்ஷனில் இருக்கும் பெண் ஒருவர் போன்செய்து, `எங்களிடம் துப்பாக்கியைக் காட்டி ஒருவர் அச்சுறுத்துகிறார். உடனடியாக உதவி தேவை' என்று கேட்டுள்ளார்.

அப்பெண் போனில் பேசும்போதே அந்த நபரின் மிரட்டல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர் போலீஸார். அவர்கள் அங்கு சென்றுசேரும் முன்பே அப்பார்ட்மென்ட் ஊழியரை தன்னிடம் இருந்த 9 எம்.எம் பிஸ்டலால் இருமுறை சுட்டுள்ளார் அந்த நபர். மேற்கொண்டு யாரையும் சுட விடாமல் அந்தநபரை மடக்கிப்பிடித்தது போலீஸ்.

பிறந்தநாளில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு! - கலிபோர்னியாவில் நடந்த சோகம்

அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தியது லோக்கல் தாதாவோ கேங்ஸ்டரோ இல்லை, அவர் 93 வயதான ராபர்ட் தாமஸ் என்னும் ஒரு முதியவர். சரி, ஏதோ முன்பகையாக இருக்கும், அதனால்தான் இப்படிச் செய்திருப்பார் என்று நாம் நினைக்கலாம், அதுவும் இல்லை. அப்பார்ட்மென்ட் பைப்பில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு தனது வீட்டுக்குச் சேதம் ஏற்படுவதாக அப்பார்ட்மென்ட் ஊழியர்களிடம் ஏற்கெனவே பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இப்படிச் செய்திருக்கிறார் அந்த முதியவர்.

முதியவர் ராபர்ட்
முதியவர் ராபர்ட்

இதுகுறித்து தாமஸின் வழக்கறிஞர், ``மிக வயதானதால் ஏற்படும் மனநல பிரச்னையால்தான் அவர் அப்படிச் செய்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

ராபர்ட் தாமஸும், ``எனக்கு அவரைப் புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை, வெறுமனே பயம் காட்டவே அப்படிச் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார். சுடப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாகப் புகார் அளிக்கச் சென்ற தாமஸ், கொலை முயற்சி, துப்பாக்கிச்சூடு தாக்குதல், அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருப்பது போன்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. ராபர்ட், துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.