Published:Updated:

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை சிறையிலடைப்பு!

Vikatan Correspondent
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை சிறையிலடைப்பு!
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை சிறையிலடைப்பு!
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை சிறையிலடைப்பு!

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்கள் 23 பேரை சிறையிலடைக்க  இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ராமேஸ்வரம்த்தில் இருந்து ஜூலை 21-ம் தேதி சுமார் 700 விசைப் படகுகளில்  மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,  தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க  விடாமல் விரட்டினர்.

பின்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மோட்சம், செல்லத்துரை (இரு  படகு), முருகன், ஜஸ்டின் ஆகியோருக்கு சொந்தமான 5 படகுகளையும், இலங்கை  கடற்படையினர் ஜூலை 21-ம் தேதி இரவில் சிறைபிடித்து, தலைமன்னார் கடற்படை  முகாமிற்கு கொண்டு சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் 5 படகையும் தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தி வைத்து விட்டு, மீனவர்கள்  ராஜு, சூலியான்ஸ், விவால்டன், எஸ்ரோம், கிறிஸ்டோபர், பாலமுருகன், மாரி,  பஞ்சவர்ணம், முருகன், சுப்பிரமணி, மற்றொரு முருகன், திருமுருகன், முனியசாமி,  மாயமுருகன், நம்புராஜன், முத்துமாணிக்கம், அண்ணாமலை, மற்றொரு முருகன்,  அந்தோணிசிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் உள்ளிட்ட 23 பேரையும் நேற்று  தலைமன்னார் போலிசாரிடம் இலங்கைக் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மீனவர்கள் 23 பேர் மீதும் எல்லைத் தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு  செய்துள்ளனர்.

இந்நிலையில், மீனவர்கள் 23 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக மீனவர்கள் 23 பேரையும் ஆகஸ்ட் 6ம் தேதி வரை  சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இது ராமேஸ்வரம் மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மீனவர்களையும்,  படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம்  விசைப் படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  உள்ளனர்.

விரைவில் விடுதலை:இலங்கை தூதர்

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்னும் சில நாட்களில்  விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும்,இந்தியாவுடன் ஒப்பந்தம் உள்ளதால்  அவர்களை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என்றும் இந்தியாவுக்கான  இலங்கை தூதரக அதிகாரி கரியவம்சா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.