Published:Updated:

7.2 டன் தந்தம்... 1000 யானைகள் வரை கொலை... உலகின் மிகப்பெரியக் கடத்தல் சம்பவம்!

7.2 டன் தந்தம்... 1000 யானைகள் வரை கொலை... உலகின் மிகப்பெரியக் கடத்தல் சம்பவம்!
7.2 டன் தந்தம்... 1000 யானைகள் வரை கொலை... உலகின் மிகப்பெரியக் கடத்தல் சம்பவம்!

7.2 டன் தந்தம்... 1000 யானைகள் வரை கொலை... உலகின் மிகப்பெரியக் கடத்தல் சம்பவம்!

" யானைத் தந்தம் கடத்தல் ", " தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்பட்டன ", " அழியும் பேருயிராக இருக்கும் யானைகள் "... இப்படியான செய்திகள் உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம், உங்கள் கவனத்தை ஈர்க்காதவையாக இருக்கலாம். ஆனால், இவை இந்தச் சமூகத்தில் நின்ற பாடில்லை. இதோ இன்னும் ஒரு சர்வதேச செய்தி...

" ஹாங்காங்கில் 7.2 டன் அளவிற்கான யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன "

உலகிலேயே ஒரே இடத்தில் இத்தனை தந்தங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இங்குதான். இதற்கு முன்னர் 2002ம் ஆண்டு, சிங்கப்பூரில் 7.1 டன் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. 

 " யானைத் தந்தங்களின் இருட்டு இதயம் " - ஹாங்காங்கை தலைகுனிய வைக்கும் சிறப்புப் பெயர் இது. உலகளவில்  தந்தங்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருப்பது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில்தான். அந்த நாடுகளுக்குள் தந்தங்களைக் கொண்டுச் செல்ல உதவும் ஒரு முக்கியப் புள்ளிதான் ஹாங்காங். இங்கு அரசு உரிமம் பெற்ற யானைத் தந்த வியாபாரிகள் 400க்கும் அதிகமானோர் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே 1989ற்கு முன்னர் உரிமம் பெற்றவர்கள். ஹாங்காங் தந்த வியாபாரிகளுக்கு உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். நேரில் சென்று பணம் செலுத்தினால் போதும், எந்த தேசத்திற்கும் தந்தத்தை அனுப்பிவிடுவார்கள். அரசின் அனுமதியோடு சில, சட்டத்தை மீறி பல என இந்தத் தந்த வியாபாரத்தில் ஹாங்காங்தான் கிங். 

ஹாங்காங்கில் அவ்வப்போது இது போன்று சட்டவிரோதமாகக் கடத்தப்படும் தந்தங்கள் பிடிபடும். ஆனால், உலக வரலாற்றிலேயே இந்தளவிற்கு அதிகமாக எங்குமே தந்தங்கள் பிடிபட்டதில்லை. ஹாங்காங்கின் க்வாய்சங் பகுதியில், சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 40 அடி உயர கண்டெய்னர் ஒன்று மலேசியாவிலிருந்து மீன்களை ஏற்றி வந்திருந்தது. அதை சோதனை செய்தார்கள் அதிகாரிகள். மேல் மட்டம் முழுக்கவே ஐஸ் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த மீன்கள் தானிருந்தன . ஆனால், கொஞ்சம் ஊடுருவிப் பார்த்த போதுதான் தெரிந்தது, அந்தப் பெட்டிகளின் அடியில் முழுக்கவே தந்தங்கள் அடுக்கப்பட்டிருந்தன என்பது. கைப்பற்றப்பட்ட 7.2 டன் தந்தங்களின் சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்தக் கடத்தலுக்குப் பின்னர் மிகப்பெரிய சர்வதேச வலைப்பின்னல் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 500 கிலோவிற்கு மேல் தந்தம் கடத்தப்பட்டாலே அது " ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகத் தானிருக்கும் ( Organised Crime ) என்று சர்வதேச விதிகள் சொல்கின்றன. இப்போதைக்கு இந்த வழக்கில், கண்டெய்னர் அனுப்பிய மலேசிய நிறுவனத்தின் தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங் சட்டப்படி இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 4 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்படும். எதுவாக இருந்தாலும், கைதாகி சில நாள்களிலேயே வெளிவந்து விடுவார்கள் என்பதுதான் யதார்த்தம். 

ஹாங்காங் தந்தக் கடத்தல் விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016ம் ஆண்டு ஜனவரியில்தான் தங்கள் நாட்டில் தந்த வியாபாரத்தை முற்றிலுமாக வரும் 2021ம் ஆண்டிற்குள் தடை செய்யவிருப்பதாக ஹாங்காங் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திலேயே இப்படி நடந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. கைப்பற்றப்பட்டிருக்கும் தந்தங்களைக் கணக்கிட்டால், இதற்காக ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் யானைகள் இருக்கின்றன. இருக்கும் நிலைத் தொடர்ந்தால் இன்னும் 20 ஆண்டிற்குள் யானைகளின் மொத்த இனமும் அழிந்தே போய்விடும் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுகின்றன. இந்தியாவில் யானைத் தந்தக் கடத்தல் குறித்து சூழலியலாளர் கோவை "மேக்" மோகனிடம் பேசினோம்...

" கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் கிட்டத்தட்ட 50 கிலோ அளவிற்கான யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து விசாரித்த போது, டெல்லியில் 450 கிலோ தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி போன்ற பகுதிகளில் யானை தந்தங்கள் கடத்தப்படுகின்றன. பொதுவாக, இது போன்ற தந்தங்களுக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில்தான் அதிக தேவை இருக்கும். ஆனால், இன்று நம் உள்நாட்டிலேயே இதற்கான தேவை உருவாகியிருப்பது மிகவும் மோசம். அதுவும் யானையைக் கடவுளாகக் கும்பிட்டுக் கொண்டே, அதே கடவுளை யானைத் தந்தத்தைக் கொண்டு சிலையாக செய்வது மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது..." என்று சொன்னவர் தொடர்ந்து தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதனால் நம் காடுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துப் பேசினார்.

" நம் நாட்டில் ஆண் யானைகளுக்குத் தான் தந்தம் இருக்கும். பெண் யானைகளுக்கு இருக்காது. அதனால், தொடர்ந்து ஆண் யானைகளையே கொல்வதால் ஆண், பெண் பால் விகிதாச்சாரத்தில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் கேரளா பெரியார் புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, அங்கு 70 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்ற விகிதம் இருந்தது. நம் தமிழ்நாட்டில் 10 பெண் யானைகளுக்கு 1 ஆண் யானை என்ற விகிதம் இருக்கிறது. இதனால் யானைகளின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கிறது என்பதோடு, மற்றும் ஒரு பிரச்னையும் இருக்கிறது. ஒரே ஆண் யானையின் மரபணுக்கள் பல பெண் யானைகளோடு பகிரப்படுவதால் அங்கு " ஜீன் டைவர்சிட்டி " ( Gene Diversity ) என்பதே இருக்காது. பிறக்கும் யானைகள் தளர்வாகவும், எதிர்ப்பு சக்தி குறைபாட்டோடும் இருக்கும் நிலை உருவாகும். ஹாங்காங்கின் இந்தச் செய்தி மொத்த உலகிற்குமான ஓர் அபாய மணி " என்று சொல்கிறார்.

யானைகள் அழிவதில்லை... அவை அழிக்கப்படுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு