Published:Updated:

பூமியின் பாதையில் ஒரு விண்கல்... ஹாலிவுட் ஹீரோ ஆகிறது நாசா!

பூமியின் பாதையில் ஒரு விண்கல்...  ஹாலிவுட் ஹீரோ ஆகிறது நாசா!
பூமியின் பாதையில் ஒரு விண்கல்... ஹாலிவுட் ஹீரோ ஆகிறது நாசா!

பூமியின் பாதையில் ஒரு விண்கல்... ஹாலிவுட் ஹீரோ ஆகிறது நாசா!

“அந்த விண்கல் நம்மை நோக்கி வந்துட்டு இருக்கு! இன்னும் 20 செகண்ட் தான் இருக்கு!” என்று ஒரு வர்ணனையாளன் போல அலறும் அந்தக் கதாபாத்திரம். கடைசிவரை பொறுமையாக இருந்துவிட்டு, கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்களை அடித்து அணிக்கு வெற்றித் தேடி தரும் தோனியைப் போல, கடைசி நொடியில் ஏதாவது செய்து பூமியைக் காப்பாற்றுவார்கள் நாசாவில் வேலை செய்யும் ஹீரோ/ஹீரோயின் அண்ட் கோ! நாமும் பாப்கார்ன் முடிந்தது கூட தெரியாமல் திரையரங்கின் நுனி இருக்கையில் வெறும் டப்பாவோடு உட்கார்ந்து இருப்போம். ஆனால், சினிமா வேறு, நிஜம் வேறு! அப்படி கடைசி நொடியில் மட்டும் நாடக பாணியில் எதாவது செய்து யாரையும் காப்பாற்றி விட முடியாது. ஒரு 5 ஆண்டுகளில் பூமிக்கு இந்த இந்த வகையில் ஆபத்து வரலாம் என்பதை நாசா முன்னரே கணித்து இப்போதிருந்தே அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கும். அப்படிபட்ட ஒரு முயற்சிதான் இது!

ஆபத்து - எங்கே, என்ன, எப்போது?

சரியாக இன்னும் 5 மற்றும் 7 ஆண்டுகள் கழித்து, அதாவது 2022 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில், இரண்டு முறை பூமியின் பாதையில் வருகிறதாம் விண்கல் ஒன்று. விண்கல் என்றாலும் அளவில் பெரியது என்பதால் இதை ஒரு குறுங்கோள் என்றே அழைக்கிறார்கள். ‘Didymos’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இதற்கு கிரேக்க மொழியில் ‘இரட்டையர்கள்’ என்று அர்த்தம். ஏனென்றால் இந்த ‘Didymos’ என்ற குறுங்கோள் ஒரு இரட்டையர்களைப் போல தான்! Didymos A என்ற குறுங்கோள் கிட்டத்தட்ட 780 மீட்டர்கள் உள்ளது. அதைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டே வருகிறது அதன் சகோதரனான 530 அடிகள் (160 மீட்டர்கள்) கொண்ட Didymos B. இதில் Didymos B தான் நமக்கு குடைச்சல் கொடுக்க வரப்போகும் அந்த குறுங்கோள். இந்த Didymos சகோதரர்களை மட்டும் கடந்த 2003-ம் வருடத்திலிருந்தே கண்ணும் கருத்துமாக கவனித்து வந்து இதை உறுதி செய்திருக்கிறது நாசா.

ஹாலிவுட் பாணியில் அதிரடி

முதன்முதலாக தனது நவீன Double Asteroid Redirection Test (DART) என்ற முறையை கையாளவிருக்கிறது நாசா. பூமியை இந்த குறுங்கோளிடமிருந்து காப்பாற்ற ஒரு குளிர்சாதனப் பெட்டி அளவே உள்ள DART விண்வெளிக்கலம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது. ஒரு நொடிக்கு  சுமார் 6 கி.மீ. அதாவது ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவின் வேகத்தைவிட 9 மடங்கு வேகத்தில் பாயவிருக்கிறது இந்தக் கலம். சரியாக Didymos சகோதரர்களை குறிவைத்து பாயும் இது, Didymos B யை மட்டும் தாக்கவிருக்கிறது, இதன் மூலம் அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியின் பாதையை விட்டு விலகி விடும் என்று கூறப்படுகிறது. இந்த DART விண்கலத்தை வரும் 2020-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்போகிறது நாசா.

எதற்கெல்லாம் பயப்பட வேண்டும்?

விண்கற்கள் முதல் சிறு கோள்கள் வரை பல பூமியின் பாதையில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலானவை அளவில் சிறியது என்பதால் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் கருகி விடுகிறது அல்லது சிதறி சிறுதுகள்களாக காணாமல் போய் விடுகிறது. ஒருவேளை அவை சுமார் 1 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான விட்டம் கொண்டிருப்பின் அதனால் பூமியில் உலகளாவிய விளைவுகள் ஏற்படலாம். பூமியை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து காக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கும் நாசா கிட்டத்தட்ட பெரிய அளவில் பூமிக்கு இடையூறு அளிக்கப்போகும் சிறுகோள்களில் 93 சதவிகிதத்தை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது.

கைகொடுக்கும் தொழில்நுட்பம்

இப்படி வரும் பிரச்னைகளைத் தடுக்கத்தான் இந்த புதிய Double Asteroid Redirection Test (DART) தொழில்நுட்பம். இதன் மூலம் சிறியது முதல் இடைப்பட்ட அளவிலிருக்கும் சிறுகோள்கள் வரை துல்லியமாக பாதை மாற்றம் செய்ய முடியும். இந்த DART தொழில்நுட்பத்தின் இணைத் தலைவர் ஆண்டி செங் (Andy Cheng) பேசுகையில், “இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து நம் பூமியைக் காப்பாற்ற, DART மிகவும் முக்கியமான ஒரு படி. இயக்கவியல் தாக்கத்தின் (Kinetic Impact) அடிப்படையில் இயங்கும் இது, எவ்வகை அபாயகரமான இடையூறுகளையும் பாதை மாற்றிவிட உதவும். பாதையில் வரும் சிறுகோள்களின் உள் கட்டமைப்பு அல்லது கலவைக் குறித்து நமக்கு எதுவும் தெரியாததால் இந்த தொழில்நுட்பத்தை நேரடியாக செயல்படுத்தி பார்த்தால் மட்டுமே இதன் உண்மையான பலனைக் கண்டறிய முடியும்.” என்று தெரிவித்தார்.

அறிவியலைக் கொண்டு எந்த ஆபத்திலிருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று நாசா நிரூபிக்கவேண்டிய கட்டம் இது. அதற்கு இந்த Didymos மிஷன் மிகவும் உதவியாக இருக்கும். வெற்றிபெற வாழ்த்துவோம்!

அடுத்த கட்டுரைக்கு