Published:Updated:

`ரம்ஜானுக்கு ஊர் திரும்பிய மக்கள்; பைலட்டின் கடைசி மெசேஜ்’ -கலங்கவைத்த பாகிஸ்தான் விமான விபத்து

பாகிஸ்தான் மாநிலம் கராச்சியில் நேற்று பிற்பகல் நடந்த விமான விபத்தில் சுமார் 97 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம் நேற்று லாகூரிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில விநாடிகள் முன்னதாக, விமான நிலையத்துக்கு அருகில், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள மாடல் காலனி குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

பாகிஸ்தான் விமான விபத்து
பாகிஸ்தான் விமான விபத்து

அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என 91 பேர் பயணித்துள்ளனர். இந்தக் கோர விபத்தில் சுமார் 97 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இறந்தவர்களில் 92 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மீதமுள்ள ஐந்து பேரின் உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகச் சிந்து மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

விபத்து தொடர்பாகத் தகவல் வெளியானதும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்களும் தீயணைப்புத் துறையினரும், விமானத்தின் தீயை அணைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களும் விபத்தின் உண்மையான காரணம் தொடர்பாகவும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக அருகிலிருந்த செல்போன் டவர் மீது மோதி பிறகே குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பற்றியதால் அந்த சுற்றுவட்டாரத்தில் தீயின் வேகம் அதிகமாக இருந்ததாகவும் வானளவுக்கு கரும்புகை கிளம்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. விமானம் விழுந்ததால் மாடல் காலனியிலிருந்த 4 வீடுகளும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாகிஸ்தானில், கொரோனா லாக்டௌனால் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிந்து விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கிய நேரத்தில் இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரம்ஜான் பண்டிகைக்காகப் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். அப்படி திரும்பும் பலரும் இந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்திருப்பது சோகத்திலும் சோகமாக உள்ளது.

பாகிஸ்தான் விமான விபத்து
பாகிஸ்தான் விமான விபத்து

விமானத்தில் பயணித்து அதிலிருந்து சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்த முகமது ஜூபைர் விபத்து பற்றிப் பேசும்போது, ``விமானம் பிற்பகல் 1 மணிக்கு லாகூரிலிருந்து புறப்பட்டது. அது 2:30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கியிருக்க வேண்டும். விபத்து நடப்பதற்கு முன்பு வரை விமானம் சீராக சென்றுகொண்டிருப்பதாகவே அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், கண் இமைக்கும் நொடியில் விபத்தைச் சந்தித்தது. அந்த நேரத்தில் என்னைச் சுற்றி நடக்கும் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை, குழந்தைகள் பெரியவர்களின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் நெருப்பு மட்டுமே தெரிந்தது. பின்னர் எனக்கு ஓர் இடத்திலிருந்து வெளிச்சம் வந்தது. அதைப் பின்பற்றி ஓடி நான் அந்த வெளிச்சத்திலிருந்து குதித்து கீழே விழுந்துவிட்டேன். பிறகுதான் நான் விமானத்திலிருந்து 10 அடி கீழே குதித்தது தெரிந்தது. பின்னர் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டேன், கண் விழிக்கும்போது மருத்துவமனையிலிருந்தேன்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் விமான விபத்து
பாகிஸ்தான் விமான விபத்து

விமானம் தரையிறங்கும்போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் முதல்முறை தரையிறங்க முயன்று அது முடியாமல் போகவே விமானம் வட்டமடித்துள்ளது. பின்னர் இரண்டாவது முறையாகத் தரையிறங்கும் நேரத்தில்தான் விபத்தைச் சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக விமானியும், கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரியும் பேசிக்கொள்ளும் ஆடியோவை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் விமானி `இயந்திரங்கள் செயல்படவில்லை’ எனக் கூறுகிறார், அதற்கு அதிகாரி, `பெல்லி லேண்டிங் முறையில் தரையிறக்கப் போகிறீர்களா?' எனக் கேட்கிறார், இதற்கு பைலட், `மே டே, மே டே, மே டே' (Mayday) என்று கூறுவதோடு ஆடியோ முடிகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்தால் மட்டுமே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு