Published:Updated:

பெட்டாமரிபி பழங்குடியினர்கள் அமைக்கும் குடில் கோபுரத்துக்கு நிகர்!

பெட்டாமரிபி பழங்குடியினர்கள் அமைக்கும் குடில் கோபுரத்துக்கு நிகர்!
பெட்டாமரிபி பழங்குடியினர்கள் அமைக்கும் குடில் கோபுரத்துக்கு நிகர்!

`விண்ணை யார் முதலில் தொடுவது?' என்ற போட்டியில், பல அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டிவருகிறது இன்றைய நவீன உலகம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இதேபோன்று அடுக்குமாடிக் குடில்களை மண்ணாலேயே ஒரு பழங்குடியினர் கட்டினார்கள் என்றால் நம்புவீர்களா? சமையலறை, படுக்கையறை என அறைகளை வகுக்கத் தெரியாத காலத்தில், இவர்கள் ஓர் அடுக்குகொண்ட குடில்களைக் கட்டியிருக்கிறார்கள். அவர்கள்தான் `பெட்டாமரிபி' இனத்தின் மூதாதையர்கள்.

`யார் இந்த பெட்டாமரிபிக்கள்? அவர்களுக்கு இது எப்படிச் சாத்தியமானது?'  என்பது போன்ற பல ஆச்சர்யங்களை உள்ளடக்கிய பெட்டாமரிபி இனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, இந்தியாவுக்கு மேற்கே 8,439 கிலோமீட்டர் பயணிப்போம் வாருங்கள்...

மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோவுக்கு வடகிழக்கில் அமைந்திருக்கும் அடக்கோரா மலைத்தொடரின் பள்ளத்தாக்குப் பகுதியில் `குத்தமக்கு' எனும் இடத்தில் வாழ்ந்துவருகின்றனர் `பெட்டாமரிபி' பழங்குடியினர். இடத்துக்கு இடம் அலைந்து திரிந்த பழங்கால மனிதன், வேளாண்மை செய்யக் கற்றுக்கொண்ட பிறகு ஓரிடத்தில் தொடர்ந்து வாழவேண்டிய கட்டாயம் இருந்ததால், குடிசைகளை உருவாக்கினான். பொதுவாக, குடிசை என்பது நாகரிகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. குடிசைகளின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியே குடில்கள். இன்று பெட்டாமரிபிக்கள் கட்டிவைத்துள்ள குடில்களில் கணிதமும், அறிவியலும், கலையும், தொழில்நுட்பமும் அடங்கியிருப்பதை நம்மால் உணரமுடிகிறது. கட்டடக் கலையில் முன்னோடியாக இருந்த பெட்டாமரிபி மக்களுக்கும் அவர்கள் வாழுந்துவரும் குடில்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான பிணைப்புகளும் மிகநீண்ட பாரம்பர்யமும் இருக்கின்றன. 

பெட்டாமரிபிக்களின் குடில் அமைப்பு :

இதுவரை நாம் பார்த்த குடிசை அமைப்புகளைக் காட்டிலும் பெட்டாமரிபி மூதாதையர்கள் அமைத்துள்ள `டாகின்டா' (takienta) குடில்களானது உயரத்திலும் அகலத்திலும் சற்று வித்தியாசமானவை. ஓர் அடுக்குகொண்ட இந்தக் குடில் அமைப்புகளில், கீழ்த்தளம் மேல்தளம் என இரு பிரிவுகள் உள்ளன. கீழ்ப் பகுதியானது குடும்பத்தின் மூத்தவர்களுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் சொந்தம். டாகின்டா வீட்டில் பெட்டாமரிபி மக்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கான உரிமை அவர்களின் கால்நடைகளுக்கும் இருக்கிறது. அந்த அறையில் மனிதர்களுடன் சேர்ந்து கோழிகளும் பன்றிகளும் வளர்கின்றன.

குடிலின் மேல்தளத்தில் குழந்தைகளுக்கென சிறிய அறை இருக்கிறது. பொந்து வடிவில் இருக்கும் அந்த இடம், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர். கடுமையான வெயில் காலங்களில் குளுமையான இடமாக அந்த அறை இருக்கும். குறிப்பாக, கீழ்த்தளத்துக்கும் மேல் தளத்துக்கும் படிக்கட்டுகள் கிடையாது. வீட்டின் உள்புறத்தில் மலை ஏற்றம்போல மண் திட்டுக்கள் இருக்கும். அதன் வழியே ஊன்றி எம்பி ஏறவேண்டும்; அதே வழியில் குதித்து இறங்க வேண்டும்.

மேற்புறத்தின் ஒரு பகுதியில் `குதிர்' எனப்படும் மிகப்பெரிய கூம்பு வடிவப் பானை போன்ற அமைப்புகளை அமைத்துள்ளனர். ஒரு வருடத்துக்குத் தேவையான தானியங்களை இதில் சேமித்துவைப்பர். கடுமையான மழை அல்லது வெயில் காலங்களில், சேமித்துவைத்திருப்பதைப் பயன்படுத்திக்கொள்வர். 

ஒவ்வொரு குடிசைக்கு முன்பும் மண்ணால் ஆன கூர்மையான பல சிலைகளை நாம் பார்க்கலாம். பெட்டாமரிபி மக்களைப் பொறுத்தவரை, அந்தக் கூர்மையான சிலைகளில் தூய்மையான ஆத்மாக்கள் இருப்பதாக நம்புகின்றனர். அந்தத் தூய்மையான ஆத்மாக்களே தங்களின் குழந்தைகளைக் காப்பதாக நினைக்கின்றனர். அவ்வப்போது உயிர்களைப் பலியிட்டு அதன் ரத்தத்தை கோபுரங்களின்மீது ஊற்றி, இறந்த ஆன்மாக்களுக்கு மரியாதை செய்கின்றனர். 

கட்டுமான முறை :

சுமார் 14 முதல் 16 அடி உயரம் வரை இருக்கும் டாகின்டா குடில்கள், கற்களைப் பயன்படுத்தாமல், பலவகையான மண்களை ஒன்றுசேர்த்து பதமாகப் பிசைந்து உருட்டி, ஒன்றின்மீது ஒன்றாக வைத்து சுவர் எழுப்பப்படுகிறது. பிறகு, குடில்களின் மேற்புறத்தில் மூங்கில்கள் வரிசையாக அடுக்கி வைத்து அதன்மீது மண் உருண்டைகள் சமமாக நிரப்பப்படுகிறது. சில நாள்கள் இடைவேளைக்குப் பிறகு, குழந்தைகளுக்கான சிறிய அறை மேற்புறத்தில் அமைக்கப்படுகிறது. இந்தக் குடில்களின் உறுதித்தன்மையை நாம் எதனோடும் ஒப்பிட முடியாது. எனவேதான் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடில்கள் பல இன்றும் உறுதியாக இருக்கின்றன. 

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான UNESCO, கடந்த 2004-ம் ஆண்டும் பெட்டாமரிபி மக்கள் வாழும் ஒட்டுமொத்த பகுதியையும் பாதுகாக்கவேண்டிய பாரம்பர்ய இயற்கை சின்னமாக அறிவித்தது. ஒவ்வொரு பழங்குடி இனத்தவரின் வாழ்க்கைமுறை என்பது பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு இயற்கைச்சூழலில், பல்வேறு பழக்கவழக்கங்களின் அடிப்படையில் உருவானது.  வாழும் வீடு, உடுத்தும் உடை, உண்ணும் உணவு, செய்யும் தொழில் என்பது அவரவர்களின் தனித்த அடையாளங்களாகவும், அவரவர்களின் தனித்திறனை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. 

பெட்டாமரிபி மக்களுக்கு அவர்கள் வாழுந்துவரும் குடில்களே, இவர்களின் பண்பாட்டு அடையாளமாக இன்று மாறியுள்ளது. தங்களின் மூதாதையர் வாழ்ந்த குடில்களை இன்று வரையிலும் பாதுகாத்துவருகின்றனர் பெட்டாமரிபி சமூகத்தினர். இவர்களைப் பொறுத்தவரையில் இவர்களிடம் இருக்கும் ஒரே சொத்து, அவர்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற குடில்கள் மட்டுமே.