Published:Updated:

கலகத்தில் பிறந்த பாகிஸ்தானும்... அதன் 71-வது சுதந்திர தினமும்..!

கலகத்தில் பிறந்த பாகிஸ்தானும்... அதன் 71-வது சுதந்திர தினமும்..!
கலகத்தில் பிறந்த பாகிஸ்தானும்... அதன் 71-வது சுதந்திர தினமும்..!

கலகத்தில் பிறந்த பாகிஸ்தானும்... அதன் 71-வது சுதந்திர தினமும்..!

பாகிஸ்தான் தனிநாடாக சுதந்திரம் பெற்ற தினம் இன்று! ஏறத்தாழ 200 ஆண்டுகள் வெள்ளையர் ஆட்சியின்கீழ் இருந்து வந்த இந்தியாவை இரண்டாகப் பிரிக்கவேண்டி கலகம் மூண்டது... இந்தக் கலகத்தில் பிறந்ததுதான் பாகிஸ்தான்!

வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தை விடுவிக்க நடந்த சுதந்திரப் போராட்டத்தில், அண்ணல் காந்தியடிகளுடன் இணைந்து போராடியவர் முகம்மது அலி ஜின்னா. காந்தியின் கொள்கை பிடிக்காமல், 1920-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். 1940-ல் 'முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்திய தேசம் பிளவுபடுவதை விரும்பாத காந்தி, தனிநாடு கோரிக்கையை கைவிடக்கோரி, ஜின்னாவிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் ஜின்னா அதை ஏற்கவில்லை.

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தலில், சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைந்து தொழிற்கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைவராக இருந்த ஆட்லி இங்கிலாந்தின் புதிய பிரதமரானார். ஆட்லி இந்தியாவின் மீது அன்பு கொண்டிருந்தார். அதன் காரணமாக, 'நான் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பேன்' என உறுதியளித்திருந்தார். இதன்படி ஆட்லி பிரதமரானவுடன் இந்தியாவுக்கு விடுதலை கொடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

அதே வேளையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிப்பதைத் தவிர வேறு வழி இல்லாத நிலை உருவாகியிருந்தது. இதையடுத்து இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள 1947-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் புதிய வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார்.  மகாத்மா காந்தியைச் சந்தித்த அவர், ''இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இந்தியத் தலைவர்களுக்கும் ஜின்னாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் தற்போதைய நிலையே நீடிக்கும்'' என கூறினார். இதனால் சுமார் 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானத்தைச் சேர்ந்த நவாப்புகள், அரசர்கள்  ஆகஸ்ட் 15-க்குப் பின் தங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்கத் தயாராகினர். இதனால் இந்திய தேசம் சிறு சிறு நாடுகளாக சிதறும் ஆபத்து உருவானது. இதனை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்கு இணங்கினர். காங்கிரஸ் காரிய கமிட்டியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்ததால், அண்ணல் காந்தியும் இதற்கு சம்மதிக்கும் சூழல் எழுந்தது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேருவும், கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டனும் பதவி ஏற்க அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கு முதல் நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 9 மணிக்கு கராச்சி நகரில் நடந்த விழாவில், பாகிஸ்தான் தனிநாடாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாகவும் மவுண்ட் பேட்டன் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக முகம்மது அலி ஜின்னாவே பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

இன்று தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பாகிஸ்தான், மக்கள் தொகை மிகுந்த நாடுகளின் வரிசையில் ஆறாம் இடம் வகிக்கிறது; அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரபூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரமாகும். பரப்பளவில் 36-வது இடத்தை வகிக்கும் பாகிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது.  ராணுவ பலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மேலும், இஸ்லாமிய நாடுகளில் அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் முதலிடத்தில்  உள்ளது. அதே நேரத்தில், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையைக் கொண்டிருப்பதால், தேசிய உற்பத்தியில், உலகில் 45-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இத்தனைப் பெருமைகள் இருந்தும் அரசியலில் நிலையற்ற தன்மை, ராணுவ ஆட்சி, மிகுந்த மக்கள் தொகை, ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் உள்ளிட்டவைகளால் கலகம் நடக்கும் நாடாகவே, பாகிஸ்தான் இன்றும் இருந்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு