Published:Updated:

இந்த பூமி அழிந்தால் எங்கு போவது!? - விடை தேடும் க்ரையோபாட் ஆராய்ச்சி #Cryobot

இந்த பூமி அழிந்தால் எங்கு போவது!? - விடை தேடும் க்ரையோபாட் ஆராய்ச்சி #Cryobot
இந்த பூமி அழிந்தால் எங்கு போவது!? - விடை தேடும் க்ரையோபாட் ஆராய்ச்சி #Cryobot

இந்த பூமி அழிந்தால் எங்கு போவது!? - விடை தேடும் க்ரையோபாட் ஆராய்ச்சி #Cryobot

" உங்க பேர் ? "

" டாக்டர். பில் ஸ்டோன். "

" நீங்க எல்லா டெஸ்ட்களையும் சிறப்பா செய்திருக்கீங்க "

" நன்றி "

" ஆனா, உங்களுக்கு இங்கு வேலையில்லை "

" சரி... ஆனால், நான் ஏன் என்று தெரிஞ்சுக்கலாமா ? "

" நீங்க ரொம்ப சுதந்திரமான, சுயாதீனமான ஆளா இருக்கீங்க "

" அது தப்பா ?"

" தப்பா.. சரியான்னு எனக்குத் தெரியாது. ஆனா, அப்படியான ஒரு ஆள் இங்கு வேலை செய்ய முடியாது."

" ஆனா, இந்த வேலைக்கு அப்படியான ஒரு ஆளும், அப்படியான ஒரு ரோபோவும் தான் தேவைப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? "

" மன்னிக்கனும்."

"மகிழ்ச்சி. நன்றி "

பில் ஸ்டோன் சிரித்தபடியே வெளியே வந்தார். சாதாரணமாக நாம் பார்க்கும் , கடக்கும் மனிதர்களைக் காட்டிலும் அதிக உயரமான உருவத்தோடு இருந்தார். 

" உலகின் உச்சம் இந்த நாசா... இங்கு நமக்கு வேலையில்லை என்றால், நாம வேறு இடம் எதிலும் வேலை செய்யத் தேவையில்லை. ஆம், நான் சுதந்திரமான, சுயாதீனமான ஒரு ஆள்தான். நான் சுயமாகவே என் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறேன் " என்று தன் மனதுக்குள் பேசியபடியே வெளியே வந்தார். தன் தலையை நிமிர்த்தி, அந்த நாசா கட்டடத்தை ஒரு முறை அமைதியாகப் பார்த்தார். பின்பு, திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்துப் போனார். இது நடந்து தோராயமாக 16 வருடங்கள் இருக்கும். 

தன் ஆராய்ச்சிக்கான நிதியுதவி செய்யக்கூடிய ஆட்களைக் கண்டறிந்து, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் " ஸ்டோன் ஏரோஸ்பேஸ் " (Stone AeroSpace )என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார். உலகம் முழுவதிலுமிருந்து அறிவியல் ஆர்வமிக்க இளைஞர்களைத் தேடி அலைந்தார். அறிவியல் ஆர்வம் என்றால், அவர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். எதையும் என்றால், எதையும். தங்கள் உயிரையும் கூட பணையம் வைக்கத் தயாரக இருக்க வேண்டும். அப்படியான ஒரு குழு அவருக்குக் கிடைத்தது. 

பூமி அழிந்தால் எங்கு செல்வது ? வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா ? உலகையே ஆர்வப்படுத்தும் இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடத் தொடங்கினார் பில். அவர் தேடி அலைந்தது ஆகாயத்தில் அல்ல, ஆழ்கடலில். ஆழ்கடல் குகைகளில். பனிஅடுக்குகளின் கீழே. இப்படியாக தொடங்கிய ஆராய்ச்சியில், பனி அடுக்குகளின் கீழ் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி, அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

தமிழில் "வியாழன்" என்று சொல்லப்படும் ஜுபிடர் ( Jupiter ) கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களில் ஒன்று " யூரோபா " ( Europa ).  முழுவதுமே உறைந்து போன பெருங்கடலைக் கொண்டது. இங்கு  உயிர் வாழும் சூழல் இருக்கலாம் என்று  பல ஆண்டுகளாகவே ஆராய்ச்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், பனியால் சூழப்பட்ட அந்தப் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்வதில் பல சிக்கல்கள் இருந்தன. இதற்கான தீர்வாக , க்ரையோபாட் ( Cryobot ) எனும் ரோபோவை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் பில். பனிகளை உடைத்து, ஊடுருவு உள் செல்லும் ஒரு இயந்திரம் தான் இந்த க்ரையோபாட். 

தன் க்ரையோபாட்டிற்கு " வால்கைரி " ( Valkyrie ) என்று பெயர் வைத்தார். அண்டார்டிகாவின் மெக் முர்டோ ( Mc Murdo ) பனி அடுக்குகளின் ஆழங்களில் ஊடுருவி தன் முதற்கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். யூரோபாவில் ஆராய்ச்சி செய்ய அவர் ஏன் அண்டார்டிகாவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழலாம் ...

கேள்விக்கான பதில் "உறை பனி". அண்டார்டிகாவின் பனிப் பெருங்கடலினுள் சென்று செய்யும் ஆராய்ச்சியின் தொடர்ச்சி தான் யூரோப்பா ஆராய்ச்சிக்கான அடித்தளம். பனிப் பெருங்கடலின் ஆழம் என்றால், அது மிகவும் ஆழமான பகுதிகளுக்குச் செல்லக்கூடியது. எந்தளவிற்கு என்றால், ராக்கெட்டில் நிலவுக்குச் செல்லும் நேரத்தைவிட , இந்த க்ரையோபாட் அதிக நேரம் ஆழ்கடலில் பனிகளைக் குடைந்து பயணித்துக் கொண்டிருக்கும். சரி...க்ரையோபாட் உள்ளே சென்றுவிடுகிறது. அங்குப் போய் என்ன செய்யும் ? ஒன்றும் செய்யாது.

ஆம்... பனியைத் துளைத்து உள் செல்வதுதான் வால்கைரி க்ரையோபாட்டின் வேலை. அங்கிருந்து அடுத்த வேலைகளை முன்னெடுப்பது  " ஆர்டெமிஸ் " ( Artemis ). 14 அடி நீளம், 1270கிலோ எடையுடன் இருக்கும் ஆர்டெமிஸ் ஓர் ஆழ்கடல் வாகனம். 5 ஹெச்டி கேமராக்கள், ஆராய்ச்சிக்குத் தேவையான நீரை எடுக்கும் இயந்திரங்கள், நீரோட்டத்தை அளக்கும் கருவிகள், இன்னும் சில ஆன்டெனாக்கள் என இருக்கும் இந்த ஆர்டெமிஸ் இதுவரை 20 தடவைகள் அண்டார்டிகா ஆழ்கடலில் பயணித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, யூரோப்பாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள " மதர் ஷிப் " ( Mother Ship ) எனும் க்ரையோபாட்டை உருவாக்க இருக்கிறார் பில். இதற்கான பணம் மட்டும் இன்று தனக்குக் கிடைத்தால், அடுத்த பத்து வருடங்களுக்குள் க்ரையோபாட் யூரோப்பாவில் ஆராய்ச்சிகளைத் தொடங்கியிருக்கும் என்று சொல்லியிருக்கிறார். இது நடந்தால், மனிதர்கள் வாழ்வதற்கான புது இடம் கண்டுபிடிக்கப்படலாம். வேற்றுகிரகவாசிகளின் இருப்பைத் தெரிந்துகொள்ள முடியலாம். 

" வணக்கம் மிஸ்டர் பில். "

" யெஸ் "

" உங்களுடைய ‘மதர் ஷிப்’ ஆராய்ச்சிக்கு நாசா ஸ்பான்சர் செய்யத் தயாராக இருக்கிறது."

" ம்ம்ம்...”

“ முதற்கட்டமாக உங்களுக்கு மூன்று மில்லியன் டாலர்களை வழங்குகிறோம்.”

“ நன்றி “

“ உங்களுக்கு இன்னும் வேறெதாவது தேவை இருக்கிறதா ? “

“ சுதந்திரமான, சுயாதீனமான ஆட்களும், செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு ரோபோவும் தேவை. அதற்கு நானும், என் குழுவும் இருக்கிறோம். நன்றி “

" வாழ்த்துகள். நன்றி “

இது சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. நாசா நிதி உதவியோடு பில் தயாரிக்கும் க்ரையோபாட்டிற்கு “ஸ்பிண்டில்” என பெயரிட்டிருக்கிறார். அதற்கு தமிழில் “ சுழல் “ என்று அர்த்தம். 

வாழ்க்கை ஒரு வட்டம்தான்.

அடுத்த கட்டுரைக்கு